Published:Updated:

``வருமானம் இல்லை!’’ - மணல் தட்டுப்பாட்டால் தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திரக் கட்டுமானத் தொழிலாளிகள்

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்த புதிய மணல் விற்பனைக் கொள்கை, மாநிலம் முழுவதும் கடும் மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன; இந்தத் திட்டத்தால் ஆந்திராவில் கட்டுமானத் துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு, வெங்கடேஸ்வருலு, ஜெகன் மோகன் ரெட்டி
சந்திரபாபு நாயுடு, வெங்கடேஸ்வருலு, ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ட்விட்டரில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பொல்லெப்பள்ளி வெங்கடேஸ்வருலு என்பவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு வெளியிட்டிருந்த செல்ஃபி வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் ``பொருளாதாரப் பிரச்னைகளால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாதது வெட்கக்கேடாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்குப் பணியில்லை; வருமானம் இல்லை. எனது பொருளாதார சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது" என்று கூறியிருந்த வெங்கடேஸ்வருலு கடந்த அக்டோபர் 2 அன்று தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார். அவர் கட்டடத் துறையில், ப்ளம்பிங் வேலை பார்த்து வந்தவர்.

கடந்த அக்டோபர் 25 அன்று, மேஸ்திரி பணி செய்துவந்த நாகாபிரம்மாஜி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் இருவரையும் போல, மற்றொருவரும் தற்கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

வெங்கடேஸ்வருலுவின் வீடியோவை ட்வீட் செய்திருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ``கடந்த 5 மாதங்களாக, வேலையின்மை காரணமாகவும், தனது குடும்பங்கள் பட்டினி கிடைப்பதைக் காண முடியாமலும் பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்வதை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. மக்கள், தற்கொலை செய்துகொள்ளும் வீடியோக்களில் அடைக்கலம் தேடுவதைக் கண்டு, அரசு விழித்துக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றினார். அதில் ஒன்று, மணல் விற்பனையில் புதிய கொள்கையை அறிவித்தது. இந்தத் திட்டம், கட்டுமானத் துறையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சிதான், இந்தத் தொடர் தற்கொலைகள் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

கடந்த செப்டம்பர் 4 அன்று, ஜெகன் மோகன் ரெட்டி அரசு `புதிய மணல் விற்பனைக் கொள்கையை' அறிவித்தது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில், மணல் விற்பனையில் தரகர்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியதாகவும், ஆறுகளில் அதிகளவிலான மணல் அள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியது ஜெகன் மோகன் அரசு. புதிதாக அறிவித்த கொள்கையின்படி, ஆறுகள், நீர்நிலைகள், குளங்கள், குட்டைகள் ஆகியன தனித்தனிப் பிரிவுகளாக மாற்றப்பட்டன.

ஒவ்வொரு நீர்நிலையின் தன்மைக்கேற்ப, தேவைப்படும் மணல்களை அள்ளுவதாக முடிவு செய்தது ஆந்திர அரசு. இதில் பல்வேறு விதிமுறைகளையும் உருவாக்கியது ஆந்திரப் பிரதேச அரசு. மணல் அள்ளுவது முதல் விற்பனை வரை, அனைத்தையும் பொதுத்துறை நிறுவனமான `ஆந்திரப் பிரதேச கனிமங்கள் வளர்ச்சி நிறுவனம்' மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதிய மணல் விற்பனைக் கொள்கை மூலம், `நிலையான அளவில் மணல் அள்ளி, சூழலியலைக் காப்பதோடு, மக்களுக்கு நியாயமான விலையில் அளித்து, அரசுக்கு வருவாய் ஈட்டுவதாக' அறிவித்துள்ளது ஜெகன் மோகன் அரசு.
மணல்
மணல்

மணல் விற்பனையில் அமல்படுத்தப்பட்ட புதிய கொள்கை கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களில் எதிரொலித்தது. மணல் விற்பனை சரியத் தொடங்க, கட்டுமானப் பணிகள் முடங்கின; நிலங்கள் விற்பனையும், புதிய கட்டடங்களுக்கான திட்டங்களும் நின்றன. இந்தச் சரிவு, கட்டுமானத் துறையின் உற்பத்திச் சங்கிலியின் இறுதியில் வாழும் அடித்தட்டு தொழிலாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளிகளின் தற்கொலைகள் இந்தத் தொடர் நிகழ்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்தவை.

ஆந்திராவின் கட்டுமானத் தொழிலாளர்களை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்.
பவன் கல்யாண், நடிகர் - ஜன சேனா கட்சியின் தலைவர்.
நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டன் மணல் தேவைப்படும் சூழலில், தற்போது 15 முதல் 20,000 டன் மணல் மட்டுமே கிடைப்பதாகவும், தினமும் காலை 12 மணிக்குத் தொடங்கப்படும் மணலுக்கான முன்பதிவு, சில நிமிடங்களில் முடிந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

மணல் விற்பனைக் கொள்கையில் மாற்றம் அறிவித்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. தற்கொலை செய்துகொண்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மற்றொரு எதிர்க்கட்சியான ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், ``ஆந்திராவின் கட்டுமானத் தொழிலாளர்களை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்; ஆந்திரப் பிரதேச அரசின் புதிய மணல் விற்பனைக் கொள்கை லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வேலையையும், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது" என அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், விசாகப்பட்டினத்தில் பேரணி நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு, ஆந்திரப் பிரதேச அரசு கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர் சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், மணல் விற்பனை செய்யப்படும் அளவைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ``பழுத்த மரம்தான் கல்லடி படும். எதிர்க்கட்சியினர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

மேலும், நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். முன்பு மணல் மாஃபியாவிடம் இருந்தவற்றை, தற்போது அரசு முறைப்படுத்தி வருவதாகவும், இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேசத்தின் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, கோழி விற்பனை, உணவுப் பொருள்கள் என மற்ற துறைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

`ஜெகன் ஒரு சைக்கோபோல நடந்துகொள்கிறார்!’ - ஆந்திர முதல்வரை விளாசிய சந்திரபாபு நாயுடு