Published:Updated:

`நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்ட ஏழு அமைச்சர்கள்!’ - கைவிரித்த ஜான் பாண்டியன்

அமைச்சர்களுடன் ஜான் பாண்டியன்
அமைச்சர்களுடன் ஜான் பாண்டியன்

நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்க டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இதுவரை முன்வராத நிலையில், ஜான் பாண்டியனிடம் ஆதரவு கேட்டு 7 அமைச்சர்கள் அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்தார்கள். அவர் எந்த முடிவையும் அறிவிக்காததால் அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட படை களமிறங்கியிருக்கிறது.

`வசந்தகுமார் அளித்த வாக்குறுதி!’ - நாங்குநேரி வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வானது எப்படி?

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு குறித்து சந்தேகம் எழுந்திருந்த நிலையில், இன்றுதான் அக்கட்சி அதிகாரபூர்வ ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. புதிய தமிழகம் கட்சியிடம் இதுவரை அ.தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படாததால் அக்கட்சித் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை

இந்த நிலையில், ஜான் பாண்டியனின் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடக்கிறது. அதற்காகப் பாளையங்கோட்டையில் உள்ள ஜான் பாண்டியனின் வீட்டுக்கு 7 அமைச்சர்கள், எம்.பி-க்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கேட்டார்கள்.

John pandian with ministers
John pandian with ministers

அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜு ஆகிய ஏழு அமைச்சர்களும் விஜிலா சத்யானந்த் எம்.பி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ-வான சின்னப்பன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் சென்று ஆதரவு கேட்டார்கள்.

அ.தி.மு.க அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரை வரவேற்ற ஜான் பாண்டியன், ``பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 சமூகங்களை ஒருங்கிணைத்து `தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் சமூகத்தினரின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதாக அளித்த உறுதிமொழியை ஏற்றுக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தேன்.

எங்களுடைய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேறாத நிலையில், மீண்டும் அவர்களை எப்படிச் சந்தித்து ஆதரவு கேட்க முடியும்.
ஜான் பாண்டியன்
Vikatan

ஆனால், அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது உடனே நிறைவேற்றுவதாகச் சொன்னார். அவரின் உதவியாளரைப் பலமுறை தொடர்பு கொண்டும் பேசக்கூட முன்வரவில்லை. அதனால் என்னால் எங்கள் சமுதாயத்து மக்களைச் சந்தித்துப் பேச முடியாது. எங்கள் கோரிக்கை தொடர்பாக உறுதியான முடிவை அறிவித்தால், மக்களிடம் கலந்து பேசி ஆதரவு கொடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறேன்’’ எனச் சொல்லி அனுப்பினார்.

காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு மிகுந்த நாங்குநேரி தொகுதியில் கூட்டணி பலம் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என அ.தி.மு.க கருதுகிறது. அதனால் கூட்டணியைப் பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களின் தலைவர்களையும் அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

ஜான் பாண்டியனைச் சந்தித்த அ.தி.மு.க-வினர்
ஜான் பாண்டியனைச் சந்தித்த அ.தி.மு.க-வினர்

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 40 கிராமத்தினர் தங்களுடைய வீடுகளில் கறுப்புக் கொடியேற்றியதுடன், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அதனால் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக ஜான் பண்டியனுடனான சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் அமைச்சர்கள் குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு