Published:Updated:

கட்டம்கட்டிய துரைமுருகன்? வீரமணியை வீழ்த்திய தேவராஜிக்கு அமைச்சர் பதவி இல்லை- கொதிக்கும் ஆதரவாளர்கள்

தேவராஜி
தேவராஜி

துரைமுருகன் ஆதிக்கத்திலுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை எ.வ.வேலுவிடம் ஒப்படைக்க அம்மாவட்ட நிர்வாகிகள் பலரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை விரைவில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிகாரம் செலுத்திவந்த வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார். தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜி, வீரமணியைத் தோற்கடித்து வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். 2011 தேர்தலிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஜோலார்பேட்டை தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டிருந்தார் வீரமணி. இம்முறை அவருக்கு சறுக்கல் ஏற்பட முக்கியக் காரணம், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் ஏற்பட்ட ‘மாமா... மாப்ள’ உறவுதான் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர்.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

தேவராஜியின் சொந்த தொகுதி அருகிலுள்ள வாணியம்பாடி. இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த தேவராஜியைத் திட்டம் போட்டு ஜோலார்பேட்டைக்குத் தள்ளியவரும் துரைமுருகன்தான் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். அதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. ``மாவட்டச் செயலாளராகவுள்ள தேவராஜியை துரைமுருகனுக்குப் பிடிக்கவில்லை. பல்வேறு விவகாரங்களில் தேவராஜிக்குத் துரைமுருகன் தரப்பு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறது. வாணியம்பாடியில் போட்டியிட்டால் தேவராஜி வெற்றி பெற்றுவிடுவார் என்று முன்கூட்டியே தி.மு.க தலைமையும் கணிந்திருந்தது.

ஆனால், தேவராஜியின் வெற்றியைத் தடுக்க, வாணியம்பாடியை கூட்டணிக்கு ஒதுக்கப்பட காரணமாக இருந்தார் துரைமுருகன். அதற்காகத்தான் சம்பந்தமில்லாத ஜோலார்பேட்டை தொகுதியில் தேவராஜிக்கு சீட் வழங்க துரைமுருகன் பரிந்துரை செய்தார்" என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். தேவராஜி தோற்பது ஒருப்பக்கம், `மாப்ள' உறவுடன் பழகிய வீரமணி வெற்றி பெறுவது இன்னொருப் பக்கம் என்று, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டத்துடன் துரைமுருகன் காய் நகர்த்தியதாகவும் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகளே குற்றம் சாட்டுகிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

ஆனால், வீரமணியின் அதிகார பலம், பண பலம் போன்றவற்றை தவிடு பொடியாக்கி வெற்றிப் பெற்றுள்ளார் தேவராஜி. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்றிலும் தி.மு.க வென்றிருக்கிறது. வாணியம்பாடி தொகுதி மட்டும் அ.தி.மு.க வசம் சென்றுவிட்டது. இந்த ஒரு தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கும் அந்த மூத்த தலைவரே காரணம் என்று கொதிக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஒருவரையே தோற்கடித்த தேவராஜியும், அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான கொண்டாட்டத்திலும் அவர்கள் குதுகலமாக இருந்தனர். இதனிடையே, நேற்று வெளியான தி.மு.க அமைச்சரவைப் பட்டியலில் தேவராஜியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``வீரமணியைத் தோற்கடித்த தேவராஜிக்குப் பலன் காத்திருக்கிறது என்று எங்கள் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதற்குள் துரைமுருகன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியிருப்பதாக அறிவாலயத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

தேவராஜி
தேவராஜி

`இன்னும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாம். தேவராஜி சரியாக வேலைச் செய்யவில்லை’ என்று சொல்லி தேவராஜியின் மந்திரி கனவுக்கு முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறார் துரைமுருகன். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரேயொரு மந்திரி கூட இல்லாதது வருத்தமளிக்கிறது. மீண்டும் காட்பாடிக்குப் போய் துரைமுருகன் வீட்டு வாசலில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்துடன் சேர்த்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் கட்சிப் பணி செய்வதாக கூறியிருக்கிறார். துரைமுருகன் ஆதிக்கத்திலுள்ள எங்கள் மாவட்டத்தை எ.வ.வேலுவிடம் ஒப்படைக்க விரைவில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பலரும் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு