Published:Updated:

`உணவுக்கே தடுமாறும்போது குடிமராமத்துப் பணிக்காக ரூ.3,500 கோடியா?!' - கொதிக்கும் ஜோதிமணி

ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்
ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்

கொரோனா வைரஸால் உருவாகும் உயிர் பயத்தைவிட, அவர்களுக்கு கண்முன்னே இருக்கும் எதிர்கால இருட்டான வாழ்க்கை அச்சத்தை விதைக்கிறது.

``தொழிலாளர்கள் உழைத்து சேமித்து வைத்திருக்கும் பணம் ரூ.40,000 கோடி மத்திய அரசிடம் உள்ளது. அதேபோல, ஜி.எஸ்.டி வரி மூலம் ரூ. 2,100 கோடி மத்திய அரசிடம் உள்ளது. இவைகளை மாநில அரசுக்கு வழங்காமல், வெறும் விளக்கு ஏற்றுங்கள், மெழுகுவத்தி ஏற்றுங்கள் எனச் சொல்வதற்கு ஒரு பிரதம மந்திரி தேவையில்லை" என கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்
ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்

கரூர் நகராட்சிப் பகுதியில் உள்ள குறுகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வழங்கினார். மணப்பாறை நகராட்சிக்கும் கிருமிநாசினி இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார்.

`இன்னும் 10 நாளில் சாந்திக்கு பிரசவம்!' - முதல்வரிடம் உதவிகேட்டு கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்.பி

கரூர் நகராட்சிக்கு ஜோதிமணி ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்ட நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் மூலம், கரூர் நகராட்சியின் 32 வார்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்தப் பணிகளைப் பார்வையிட்ட பின், ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை மக்களுக்குச் செய்யவில்லை.

ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்
ஜோதிமணி வழங்கிய கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்

கொஞ்சம் கூட கருணையில்லாமல் நடந்துகொள்கின்றன. மக்களுக்கு பொருளாதார உதவி செய்யாமல் ஊரடங்கை நீட்டிப்பது கொரோனாவைவிட கொடியது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் 3 வது கட்டமாக நீடித்து வருகிறது. இதையடுத்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 மத்திய, மாநில அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுவதை விடுத்து, தான்தோன்றித்தனமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் உழைத்து சேமித்து வைத்திருக்கும் பணம் ரூ.40,000 கோடி மத்திய அரசிடம் உள்ளது. அதேபோல, ஜி.எஸ்.டி வரி மூலம் ரூ.2,100 கோடி மத்திய அரசிடம் உள்ளது. இவைகளை மாநில அரசுக்கு வழங்காமல், வெறும் விளக்கு ஏற்றுங்கள், மெழுகுவத்தி ஏற்றுங்கள் எனச் சொல்வதற்கு, ஒரு பிரதம மந்திரி தேவையில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளை அவர்களால் நிறைவேற்றிக் கொள்ளமுடியவில்லை.

கிருமிநாசி தெளிப்பு
கிருமிநாசி தெளிப்பு

அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா வைரஸால் உருவாகும் உயிர் பயத்தைவிட, அவர்களுக்கு கண்முன்னே இருக்கும் எதிர்கால இருட்டான வாழ்க்கை அச்சத்தை விதைக்கிறது. அவர்கள் உணவுக்கே தடுமாறி, வாழ்வாதாரத்தை இழந்து வரும் இந்தக் காலகட்டத்தில், அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்காமல், குடிமராமத்துப் பணிக்காக ரூ.3,500 கோடி ஒதுக்கி இருப்பது தேவை இல்லாத ஒன்று. இப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்காத அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் இருப்பது வேதனையளிக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு