Published:Updated:

``தமிழக ஆளுநர், பாஜக மாநிலத் தலைவர்போல் செயல்படுகிறார்!" - எம்.பி ஜோதிமணி காட்டம்

ஜோதிமணி

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விமர்சனம் செய்து பேசினார்.

``தமிழக ஆளுநர், பாஜக மாநிலத் தலைவர்போல் செயல்படுகிறார்!" - எம்.பி ஜோதிமணி காட்டம்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விமர்சனம் செய்து பேசினார்.

Published:Updated:
ஜோதிமணி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். காலாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் செயல்படும்விதம், நிறைவேற்றப்பட்ட பணிகள், கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் எம்.பி ஜோதிமணி கேட்டறிந்தார்.

அனைத்துத் துறை அதிகாரிகளும் அதற்கான உரிய விளக்கங்களை அளித்தனர். அதேபோல, மாநகராட்சி நகர்ப்புறப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விளக்கிப் பேசினார். தொடர்ந்து, பல்வேறு திட்டங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும் கேட்டு, அந்தப் பிரச்னைகளை விரைந்து முடிக்கவும் எம்.பி ஜோதிமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 கண்காணிப்புக்குழு கூட்டம்
கண்காணிப்புக்குழு கூட்டம்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, "நான் தொகுதியில் இருப்பதில்லை என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், நான் தொடர்ந்து தொகுதிப் பணிகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கிறேன். நான் பாத யாத்திரை போறது யாருக்குப் பிரச்னையா இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால், அவர்கள் என்னைப் பற்றி இப்படிப்பட்ட விமர்சனங்களை செய்கிறார்கள். ஆனால், அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். என்னுடைய கரூர் நாடாளுமன்ற அலுவலகத்துக்கு தினமும் 60, 70 மனுக்கள் வருகின்றன. அவற்றுக்கு நான் இருந்தாலும், இல்லையென்றாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பா.ஜ.க-வினர் போட்ட அந்தப் பொய்ப் பிரசார போஸ்ட்டுக்குப் பிறகு, நிறைய பேருக்கு நான் பாத யாத்திரையில் நடப்பது தெரிகிறது. அவர்களில் பல பேர் எனக்கு போன் செய்து, 'ராகுல் காந்தி ஓர் இளவரசர் மாதிரி. அவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இப்படித் தெருத்தெருவா கஷ்டப்படுறார். அதைப் பார்க்குறதுக்கே எங்களுக்குக் கஷ்டமா இருக்கு. நீ ஏற்கெனவே ஒல்லியாக இருக்கே. இன்னும் நீ இளைச்சுப் போயிடாத. உன்னால நடக்க முடியாது. நீ வந்துரு. நாங்க மோடிக்கா ஓட்டுப்போடப் போறோம்'னு சொல்றாங்க. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரிய ஆதரவு இருக்கு.

இது இல்லாம, இந்த நடைப்பயணத்தை என்னோட கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுக்க எடுத்துச் செல்ல, நான் எல்.இ.டி வேன் ஒன்றை அனுப்பியிருக்கிறேன். மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 97 சதவிகிதம் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. முழுவதும் பல்வேறு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பல துறைகளில் மாவட்ட நிர்வாகம் முன்னணியில் உள்ளது. மாவட்டம் நிர்வாகம், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.

ஜோதிமணி
ஜோதிமணி

தமிழக ஆளுநர், பா.ஜ.க மாநிலத் தலைவர்போல் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகை, பா.ஜ.க கட்சி அலுவலகம்போல் செயல்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி அளித்தார். அதே அவசரச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டபோது, அதற்கு அனுமதி அளிக்க ஆளுநர் மறுக்கிறார். அவசரச் சட்டத்துக்கும், மசோதாவுக்கும் இடையில் என்ன நடந்தது... எதற்காக தமிழக மக்களின் நன்மைகளைப் புறக்கணித்து, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களுக்காக தமிழக ஆளுநர் வேலை செய்கிறார்... சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக ஆளுநரைச் செயல்படச் சொன்னது யார்... மத்திய அரசா, பா.ஜ.க-வா... அவர் சார்ந்த அமைப்பா என ஆளுநர் விளக்க வேண்டும். மிக நிச்சயமாக இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார். அப்படிப்பட்ட ஆளுநர் தமிழகத்துக்குத் தேவையில்லை" என்றார்.