Published:Updated:

`பாலியல் விவகாரங்களில் பாஜக-வும், அதிமுக-வும் உதவிக்கொள்கிறார்கள்!’ - ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

``அரசியலில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு என்னால் வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. கட்சி பேதமின்றி பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்க வேண்டியது என் தார்மிகக் கடமை.” - ஜோதிமணி

பாஜக-வுக்குள் வெடித்த பாலியல் சர்ச்சைகள், சமூகத்தில் பெண்களுக்கான இடம், பெண்கள் பிரச்னையில் இளம் தலைமுறை ஆண்கள் காட்டும் ஈடுபாடு, பொதுத் தளத்துக்கு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியினிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

ஜோதிமணி
ஜோதிமணி

“திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?”

“கடந்த நான்கு ஆண்டுகளாக மோடி அரசுக்கு அதிமுக அரசு அடிமையாக இருந்ததன் பலனை அனுபவிக்கவேண்டிய சூழலுக்குத் தமிழ்நாடு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் நடந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மையால் மட்டுமல்ல, தங்கள் சேமிப்பை இழந்தும் தவித்து நிற்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அவற்றிலிருந்தெல்லாம் மீட்டு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையை மக்களிடம் உருவாகியிருக்கிறது திமுக அரசு.”

நான்காம் தர அரசியல்வாதி அண்ணாமலை... வக்கிரமானவர் சீமான்!

“பாஜக தலைவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றன என்ற தரவுகளைப் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. கே.டி.ராகவன் மீது எழுந்த புகார்தான் தமிழக பாஜக-வில் எழுந்த முதல் பாலியல் குற்றச்சாட்டு என்று இல்லை. விழுப்புரம் பாஜக மாவட்டச் செயலாளர் கலிவரதன் மீது பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் காயத்ரி புகார் அளித்தார்கள். அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். அகில இந்திய மாணவர் அமைப்பின் தலைவர் சண்முகம் சுப்பையா தனியாக வசிக்கும் முதிய பெண்ணிடம் பாலியல் வக்கிரத்தோடு நடந்துகொண்டது குறித்து சிசிடிவி பதிவு வெளியானது. அவரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமித்தது மோடி அரசு. பாஜக-வால் மட்டுமல்ல, அதிமுக தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட பொள்ளாச்சி சம்பவத்தையும் நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. பெண்களுக்கு எதிராகக் கொடும் குற்றங்களை நிகழ்த்திய அதிமுக தலைவர்களை பாஜக-வும், பாஜக தலைவர்களை அதிமுக-வும் காப்பாற்றிக்கொண்டிருந்தார்கள். இனி அது நடக்காது.”

தமிழக பாஜக அண்ணாமலை - கே.டி.ராகவன்
தமிழக பாஜக அண்ணாமலை - கே.டி.ராகவன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பாஜக விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?”

“பெண்களுக்கு எதிரான எந்தப் பிரச்னையும் தனிப்பட்ட பிரச்னை இல்லை. அரசியல் மாதிரியான களங்களில் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் கே.டி.ராகவன் போன்றோர் சாதாரணப் பின்னணியிலிருந்து வரும் பெண்ணை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துகிறார் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு நெருக்கமாக இருப்பதால்தான் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். கட்சியினரால் கட்சியில் இருக்கும் பெண்களுக்கே இவ்வளவு பிரச்னை என்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை. அரசியல் தலைவர்களால் பெண்களுக்குப் பாதிப்பும் அச்சுறுத்தலும் வருவது அதிகரித்திருக்கிறது. அதே களத்தில் நிற்கும் நான் அந்தப் பெண்களுக்கு ஆதரவான குரலைக் கொடுப்பது என் தார்மிகக் கடமை. இதில் அரசியல் கட்சி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.”

 பாலியல் புகார்
பாலியல் புகார்
``சசிகலாவோடு ஓ.பி.எஸ் சேர்ந்துவிடுவார் என்பதில் மாற்றம் இல்லை!’’ - நாஞ்சில் சம்பத்

“ஆனால், பாஜக-வில் இருக்கும் பெண் தலைவர்கள் இது எதையும் பேசவில்லையே. என்ன காரணமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“வானதி சீனிவாசன், குஷ்பு அவர்களின் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது பாஜக-வில் பெண்களுக்குப் பேசுவதற்கே உரிமை இல்லை என்றுதான் தோன்றுகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பார்த்தும் அங்கிருக்கும் பெண் தலைவர்களும் அதை அட்ஜஸ்ட் பண்ணித்தான் செல்ல வேண்டும் போலிருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. யூகத்தில்தான் சொல்கிறேன். ஆனால், பெண்களின் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல்கள் கொடுக்க முடியாத சூழல் இருப்பதாகத்தான் பார்க்க முடிகிறது. பாஜக-வைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் சுரண்டலை அங்கிருக்கும் தலைவர்களே எதிர்த்து கேட்க முடியவில்லை என்றால் அங்கிருக்கும் சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.”

கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன்
கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன்

“அரசியலுக்கு வரும் அனைத்துப் பெண்களும் இந்தப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்களா என்ன?”

“மிகவும் இளம் வயதிலேயே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். பஞ்சாயத்துத் தலைவர் பதவி முதல் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் வரை அரசியலில் நான் கடந்துவந்த பாதைகளில் பாலியல் பாகுபாடுகளைத்தான் எதிர்கொண்டிருக்கிறேனே தவிர பாலியல்ரீதியிலான சுரண்டல்களை இதுவரை சந்தித்ததில்லை. அரசியல் குறித்த புரிதல் இருந்ததால் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்துவிட்டேன். ஆனால், இப்படி இருப்பதைப் பெருமையாக நினைக்கவில்லை. சமூகத்தின் பொதுத்தளத்துக்கு வரும் பெண்கள் ஏதாவது ஒரு பாதுகாப்போடுதான் இருக்கவேண்டியிருக்கிறது என்பது அவமானம். ஆண் அரசியலுக்கு வருவதும், பெண் அரசியலுக்கு வருவதும் ஒன்றல்ல. பெண் அரசியலுக்குள் வருவதே ஓர் இயக்கம்தான்.”

அரசியலில் பெண்கள்
அரசியலில் பெண்கள்

“அரசியலுக்கு வரும் பெண்களை அச்சுறுத்துவதுபோல இருக்கிறதே உங்கள் கருத்து?”

“அரசியலில் மட்டுமல்ல, குடும்பத்துக்குள்ளேயே பெண்கள் மிகவும் போராடவேண்டியிருக்கிறது. அனைத்துப் பணிச் சூழலிலும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கடந்துதான் பெண்கள் வரவேண்டியிருக்கிறது. நான் அப்படித்தான் வளர்ந்தேன். இன்றைய சூழலில் பெரும்பாலான ஆண்கள் மத்தியில் பெண்கள் தொடர்பான சிந்தனைகள் மாறியிருக்கின்றன. பெண்களுக்கான பிரச்னைகளில் அதன் ஆழத்தைப் புரிந்துகொண்டு பல ஆண்கள் அவர்களுக்குத் துணை நிற்கிறார்கள். எனவே, பெண்கள் இனி தைரியமாக வெளியே வரலாம். தங்களுக்கு விருப்பமான துறைகளில் முத்திரை பதிக்கலாம்.”

 ஜோதிமணி
ஜோதிமணி
`சீமான், தனது குற்றத்தை மறைக்கவே, ராகவனை ஆதரிக்கிறாரோ?!’ - ஜோதிமணி கேள்வி

``அரசியலுக்கு வர நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்லவது என்ன?”

“முத்துலெட்சுமி ரெட்டியின் கல்விக்கான போராட்டம் அடுத்து வந்த எங்களுக்குமானதுதான். அது கல்விக்கான, பெண் உரிமைக்கான இயக்கம். பொதுச்சூழல், தளம் என்பவை பாலியல்ரீதியில் உடல்ரீதியில், மனரீதியில், பாலினரீதியில் ஒதுக்கக்கூடிய, புறக்கணிக்கக் கூடியதாகத்தான் இருக்கின்றன. அவற்றை இன்றைக்கு இருக்கும் என்னைப் போன்ற நவயுகப் பெண்கள், இளம் தலைமுறை அரசியல்வாதிகள் மிகத் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். நம்மைச் சார்ந்து இருக்கும் பிரச்னைக்கே என்னால் போராட முடியவில்லை என்றால், என்னால் எப்படி மற்றவர்களின் பிரச்னைக்காகப் போராட முடியும்?”

முத்துலட்சுமி ரெட்டி
முத்துலட்சுமி ரெட்டி

“தீவிரமான அரசியலில் இருக்கும் நீங்கள் மறுபடியும் எப்போது எழுதப் போகிறீர்கள்... எழுத்தாளர் இந்திராவை நாங்கள் எப்போது மீண்டும் சந்திக்கப் போகிறோம்?”

”நல்ல கேள்வி. அவங்களை நான் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதும் நான் வாசிக்கிறேன். என்னுடைய `நீர் பிறக்கும் முன்’ நூலின் இரண்டாவது பதிப்பு கொண்டுவருவதற்காக முன்னுரையை எழுதச் சொல்லி என்னுடைய பதிப்பாளர் என்னைத் துரத்தத் தொடங்கியிருக்கிறார். நிச்சயம் எழுத வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் எழுத்து என்பதும் ஒருவிதமான அரசியல் பணிதான். தந்தை பெரியார், காந்தி, நேரு, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களின் எழுத்தின் மூலமாகத்தான் பல்வேறு அரசியல் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். விரைவில் நானும் எழுதத் தொடங்கிவிடுவேன். இந்திராவை விரைவில் பார்க்கலாம்.”

அடுத்த கட்டுரைக்கு