Published:Updated:

“ஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது!”

பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் ஆரூடம்...

பிரீமியம் ஸ்டோரி
தமிழக அரசியல் போக்குகள் குறித்தும், வரும் தேர்தல் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் தொலைக்காட்சி விவாதங்களில் தனது கருத்துகளை அழுத்தமாக முன்வைத்துவருகிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

25 ஆண்டுக்கால பத்திரிகை அனுபவம்கொண்ட அவரிடம் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தேவை இன்னும் இருக்கிறதா?”

“இல்லை. அதையெல்லாம் கடந்து வந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சசிகலாவை இதில் சிக்கவைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை. 70 நாள்கள் ‘அப்போலோ’ மருத்துவமனையில் நடந்ததைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இனியும் அதைப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு போகத் தேவையில்லை. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க அரசின் மோசமான நடவடிக்கைகளைப் பேசினாலே போதும். தமிழக தலைமைச் செயலகத்தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்து ஆய்வுக் கூட்டம் நடத்தியது தொடங்கி, வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது வரை நிறைய பேசலாம். ஜெயலலிதா மரணமோ... ஈழம் தொடர்பான விஷயங்களோ இந்தத் தேர்தலில் பிரச்னையாக எதிரொலிக்காது என்றே நினைக்கிறேன்.”

“ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்குப் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவே இல்லையே?”

“அந்தச் சமயத்தில் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் நினைத்திருந்தால், ஏதாவது ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியும். ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அவர்தான் ஆணையத்திடம் விளக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பது குறித்துப் பேச மறுக்கிறார். நிச்சயமாக இது அவருக்குப் பின்னடைவுதான்.”

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

“தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடக்கின்றன, சொத்துகள் முடக்கப்படுகின்றன... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“துரைமுருகன் வழக்குக்கும், சேகர் ரெட்டி வழக்குக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு இடங்களிலும் கட்டுக்கட்டாகப் பணம்தான் எடுத்தார்கள். இரண்டுமே கணக்கில் வராத பணம்தான். ஒன்று, தேர்தல் நேரத்தில் நடந்தது; மற்றொன்று, பண மதிப்பிழப்பு நேரத்தில் நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தேர்தல் ஆணையம் பதிவுசெய்த வழக்கும், குட்கா வழக்கும் இருக்கின்றன. இதுபோலவே பல அமைச்சர்கள்மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவை குறித்துப் பல கேள்விகள் மக்களின் மனதில் இருக்கின்றன. இவர்கள் நம்மையெல்லாம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”

“பா.ஜ.க-வின் தேசியப் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. இதன் மூலம் பா.ஜ.க தலைமை என்ன சொல்லவருகிறது?”

“முதலில் மாநிலத்தில் கட்சியை வளர்த்துவிட்டு, பின்னர் தேசியப் பொறுப்பு குறித்து யோசிக்கலாம் என்று பா.ஜ.க தலைமை கருதுகிறது. அதில் ஒன்றும் தவறில்லை. அதனால்தான் வருகிறவர்கள், போகிறவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.”

“அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைப்பது அதன் தரத்தை உயர்த்தும்தான். அதேசமயம், இட ஒதுக்கீடு ஒருபோதும் விலக்கப்படக் கூடாது. மாநில அமைச்சரே பல்கலைக்கழகப் பொறுப்பில் இருக்கும்போது, துணைவேந்தர் தன்னிச்சையாக கடிதம் எழுதுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?”

“நீட் விவகாரத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மசோதாவை ஆளுநர் காத்திருப்பில் வைத்திருக்கிறாரே..?”

“நிச்சயமாக இது பா.ஜ.க-வின் அரசியல்தான். தமிழக ஆளுநர், ஜனாதிபதிக்குத் தகவல் தெரிவிக்கக்கூடிய நபராக இல்லை. அவர் மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கக்கூடிய நபராகத்தான் இருக்கிறார். ஆளுநர் ஒப்புதல் அளித்துவிடுவதாலேயே அது சட்டமாக மாறிவிடப்போவதில்லை. மசோதாவுக்கு எதிராக யாராவது நீதிமன்றம் செல்லத்தான் போகிறார்கள். ஆனாலும்கூட ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இது அ.தி.மு.க-வுக்குத் தேர்தலில் பெரும் பிரச்னையாக மாறும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு