Published:Updated:

'சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனர்- யார் இந்த சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்?'

கமிஷனர் சங்கர் ஜிவால்
கமிஷனர் சங்கர் ஜிவால்

உளவுத்துறையில் நீண்ட அனுபவமுள்ள சங்கர் ஜிவால், சென்னையின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு,க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார் . இதையடுத்து தலைமைச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக எ.டி.ஜி.பி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், சங்கர் ஜிவால் ஐபிஎஸ்
மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், சங்கர் ஜிவால் ஐபிஎஸ்

இவர், 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான என்.சி.பி, திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர் ஜிவால் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு தமிழக அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இரு முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றியிருக்கிறார்.

இன்ஜினீயரிங் படிப்பைப் முடித்ததும் சிறிது காலம் நிறுவனங்களில் இன்ஜினீயராக பணியாற்றினார். அதன்பின்பு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். சென்னை நகரின் 107வது போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இவர், எப்படி போலீஸ் கமிஷனராக தேர்வானார் என்று ஐ.பி.எஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர் சங்கர் ஜிவால். தி.மு.க விசுவாசி ஐ.பி.எஸ் அதிகாரியாக கருதப்பட்ட இவருக்கு ஏ.டி.ஜி.பி உளவுத்துறை அல்லது போலீஸ் கமிஷனர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது போலீஸ் கமிஷனர் பதவி கிடைத்திருக்கிறது. தி.மு.க. தலைமைக்கு வேண்டப்பட்டவராக கருதப்பட்டாலும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸு க்கு இருக்கிறது.

பஞ்சாப் டு சென்னை: எப்படித் தேர்வானார் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்?
சங்கர் ஜிவால் ஐபிஎஸ், மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்
சங்கர் ஜிவால் ஐபிஎஸ், மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்

சென்னை போலீஸ் பதவியை எதிர்பார்த்து ஏ.டி.ஜி.பி ரவி, சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் காத்திருந்தனர். ஆனால் கமிஷனர் வாய்ப்பு சங்கர் ஜிவாலுக்கு கிடைத்திருக்கிறது. அதைப் போல தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். டி.ஜி.பி திரிபாதி விரைவில் ஓய்வுபெற உள்ளதால் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு அல்லது ஷகில் அக்தர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு