Published:Updated:

`அமித் ஷா கைது முதல் பினராயி விஜயன் விசாரணை வரை..!' - யார் இந்த கந்தசாமி ஐ.பி.எஸ்?

மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் அமித் ஷா. அவர் மீதும் இந்த வழக்கில் பல குற்றச்சாட்டுகள் இருக்கவே வாரன்ட் பெற்று அவரைக் கைதுசெய்கிறார் கந்தசாமி ஐ.பி.எஸ். அப்போது சி.பி.ஐ-க்கு பல பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு தீர்ப்பு 2018-ம் ஆண்டு வெளியானது. கேரள கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கின் தீர்ப்பு அது. 1992-ல் மர்மமான முறையில் இறந்துபோன அபயா தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்று வழக்கு தொடர்ந்த அபாயவின் பெற்றோர் நீதிக்காகக் காத்திருந்தனர். 28 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையில் இருவர் கொலையாளிகள் எனத் தீர்ப்பு வெளியான தினத்தில், நீதிக்காகக் காத்திருந்த அபாயாவின் பெற்றோர் தாமஸ், லீலாமா இருவரும் உயிருடன் இல்லை. சி.பி.ஐ விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட அந்த வழக்கு விசாரணையை, 16 வருடங்கள் கழித்து கையிலெடுத்து துரிதப்படுத்தியதில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த கந்தசாமி ஐ.பி.எஸ்.

அபயா
அபயா

ஒரு மாநிலம் சிறந்த மாநிலமாகத் திகழ முதல்வர், அமைச்சர்களைப்போலவே சிறந்த அதிகாரிகளும் காரணமாகின்றனர். அரசின் அதிகாரமிக்க பொறுப்புகளில் பணிசெய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், செயற்படுத்துவதிலும் தலையாய பங்குவகிக்கின்றனர். தமிழக அரசியலில் மக்களுக்கென வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் எப்படி ஒரு கட்சியின், தலைவரின் பங்கு இருக்கிறதோ பின்னணியில் ஓர் அதிகாரியின் பங்கும் இருக்கும். அப்படி, பொதுவெளியில் தங்கள் பெயர் வராமல் மக்களுக்காகச் சேவை செய்யும் அதிகாரிகள் உள்ளனர். சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் தலைமைச் செயலர், அட்வகேட் ஜெனரல், உள்ளிட்ட பல பொறுப்புகளுக்குப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது வழக்கமாக நடக்கும் அரசியல் செயல்பாடுதான். நேற்றைய தினம் ஒன்பது ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் கவனம்பெற்றவர் கந்தசாமி ஐ.பி.எஸ். லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாகப் பணியமர்த்தப்பட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்., இதற்கு முன் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பலரையும் விசாரணைக்கு அழைத்தவர். பல வருடங்களாக முடிக்கப்படாமல் இருந்த வழக்கு விசாரணையை முடித்துக்காட்டியவர்.

அமித் ஷா
அமித் ஷா

குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கு:

2005-ம் ஆண்டு, மகாராஷ்டிராவிலுள்ள சங்லி பகுதியில் ஒரு என்கவுன்ட்டர் நடந்தது . லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும், சொராபுதீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கவுசர் பீ என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். சொராபுதீன் கூட்டாளி துல்சிராம் பிரஜாபதியும் குஜராத் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அந்த என்கவுன்ட்டர் போலியானது எனக் கூறி வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையில் பல அரசியல் புள்ளிகள், உயரதிகாரிகள் எனப் பலரும் சம்பந்தப்பட்டிருந்ததால் விசாரணை மந்தமாகவே இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கை கையில் எடுக்கிறார் கந்தசாமி ஐ.பி.எஸ். நீதிமன்றத்தின் உதவியுடன் பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார். குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் அமித் ஷா. அவர் மீதும் இந்த வழக்கில் பல குற்றச்சாட்டுகள் இருக்கவே வாரன்ட் பெற்று அவரைக் கைதுசெய்கிறார் கந்தசாமி ஐ.பி.எஸ்.

கந்தசாமி ஐ.பி.எஸ்
கந்தசாமி ஐ.பி.எஸ்

அப்போது சி.பி.ஐ-க்குப் பல பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சி.பி.ஐ அலுவலகத்தின் மீது கற்கள் எறியப்பட்டன. மாநிலத்தை ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரைக் கைதுசெய்து வழக்கில் சமபந்தப்பட்ட பலரையும் திக்குமுக்காட வைத்தார் கந்தசாமி ஐ.பி.எஸ். அதன் பின் அமித் ஷா ஜாமீன் பெற்றார். அந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே வேறு மாநிலத்துக்குப் பணி மாறுதல் ஆனார் கந்தசாமி ஐ.பி.எஸ். 2018-ல் தீர்ப்பு வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனப் பல காவல்துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் சதித் திட்டம் தீட்டுதல், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2008-ம் ஆண்டு கோவாவில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஸ்கேர்லெட் கீலிங் வழக்கிலும் விசாரணையில் இறங்கியவர் கந்தசாமி ஐ.பி.எஸ். அந்த வழக்கில் 10 வருடங்கள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதேபோல கந்தசாமி ஐ.பி.எஸ் விசாரணையில் இறங்கிய மற்றுமொரு வழக்கு லாவ்லின் ஊழல் வழக்கு. அந்த வழக்கில் இப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயனும் சம்பந்தப்பட்டிருந்தார். அவர் அப்போது கேரள மின்சாரத்துறை அமைச்சர். 1998-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில், மூன்று நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி.லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அதில் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், லாவ்லின் ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு தருவதாகக் கூறிய ரூ.92.3 கோடியைத் தரவில்லை எனவும் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. விசாரணை நடத்தி சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து, ஆதாரங்களைத் திரட்டியது. அப்போது அந்த விசாரணையைச் செய்தவர் கந்தசாமி ஐ.பி.எஸ். 2012-ல் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின் அந்த வழக்கில் பினராயி விஜயன் உள்ளிட்ட ஐந்து பேர் போதிய ஆதாரமில்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கந்தசாமி ஐ.பி.எஸ்
கந்தசாமி ஐ.பி.எஸ்

இப்படிப் பல வழக்குகளில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் பதவிகளில், அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் தயங்காமல் விசாரணைக்கு அழைத்து துணிச்சலானவராகப் பெயர் பெற்றவர் கந்தசாமி ஐ.பி.எஸ். 1989 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான கந்தசாமி ஐ.பி.எஸ் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி -ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசின் அடக்குமுறைகளுக்கு துணை நின்று மக்களுக்கு எதிராக செயல்பட்ட பல அதிகாரிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவது நாடெங்கிலும் நடந்துள்ளது. ஆளும் அரசின் கட்டுப்பாடுகளை, அழுத்தங்களை மீறி மக்கள் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் சிலரை காலம் நம் கண்முன் காட்டியிருக்கிறது. அதிகார மையம் அரசியல்வாதிகள் என்றாலும், அதிகாரிகளின் கைகளில் மக்களுக்கு நன்மை பயக்கும் பலவும் உண்டு. மக்களின் எதிர்பார்ப்பு அமைச்சர்களின் பதிவியேற்பைப்போலவே அதிகாரிகளின் பணி நியமனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு