Election bannerElection banner
Published:Updated:

குமரி: காங்கிரஸ் மனநிலை இழந்த கட்சி - ஜே.பி.நட்டா!

அருமனையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம்
அருமனையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம்

கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எதிர் எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். ஆனால், இங்கும், அசாம் மற்றும் மேற்குவங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கைகுலுக்கி கூட்டணி வைத்துள்ளது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குஞ்சாலிவிளையில் இருந்து திறந்த வாகனத்தில் பா.ஜ.க-வுக்கு வாக்கு சேகரித்தார். விளவங்கோடு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஜெயசீலன் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்களிக்கும்படி அங்கு திரண்டிருந்த மக்களிடம் பரப்புரை செய்தார்.

பின்னர் அருமனை சந்திப்பில் ஜே.பி.நட்டா பேசுகையில், ``நண்பர்களே, கன்னியாகுமரி நாடாளுமனற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சீனியர் தலைவர். மேலும் இந்த பகுதியில் பிரபலமான ஜெயசீலன், விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இருவருக்கும் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள். உங்கள் கைத்தட்டல் இவர்களின் வெற்றியை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது. இந்த கூட்டத்தை பார்க்கும்போது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

ஜே.பி. நட்டா பிரசாரம்
ஜே.பி. நட்டா பிரசாரம்

காங்கிரஸ் கட்சி மனநிலை இழந்துவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எதிர் எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். ஆனால், இங்கும், அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கைகுலுக்கி கூட்டணி வைத்துள்ளார்கள். அசாமில் பயங்கரவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். காங்கிரஸ் மனநிலை இழந்துவிட்டதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு கூற முடியாது.

காங்கிரசும், தி.மு.க-வும் குடும்ப அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது காங்கிரஸ், தி.மு.க கட்சிகள். 2ஜி ஊழல் என்பது மாறன் குடும்பம் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல். 3 ஜி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர். 4 ஜி என்றால் நான்கு தலைமுறையாக நாட்டை சுரண்டிய நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர். அவர்களுக்கு மக்கள் நலன் பற்றி கவலை இல்லை, சுயநலம் மட்டும்தான் உள்ளது.

காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் தமிழர் நலனுக்கு எதுவும் செய்யாமல், துரோகம் செய்துவிட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாசுகட்டுப்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கொண்டுவந்தார். அப்போது கூட்டணியில் இருந்த தி.மு.க பேசாமல் இருந்தது. அவர்கள் அமைதியாக இருந்ததற்கு 2ஜி ஊழல்தான் காரணம் . மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜே.பி.நட்டா பிரசாரம்
ஜே.பி.நட்டா பிரசாரம்

தமிழ்நாட்டுக்காக மோடி நிறைய திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். தமிழ் ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால், தமிழர்கள் பாதித்த யாழ்ப்பாணம் பகுதியில் நேரில் சென்று தமிழர்களை சந்தித்து, அவர்கள் பரிதாப நிலையை பார்த்து பிரதமர் மோடி வீடுகள் கட்டிக்கொடுத்தார். தமிழக வீரங்கணை நிர்மலா சீதாராமனை நாட்டின் நிதி அமைச்சராக மாற்றியுள்ளார். அவரை பாதுகாப்புத்துறைக்கு அமைச்சராக்கி அழகுபார்த்தார். அதேபோல், ஜெய்சங்கரை வெளியுறவுத்துறை அமைச்சராக்கி இலங்கை விவகாரங்களை கவனிக்கச்செய்தார்.

தி.மு.க ஆதரவு பெற்ற கருப்பர் கூட்டம் தமிழர்களின் கடவுளான முருகனை இழிவுபடுத்தி பேசினார்கள். அதற்காக பா.ஜ.க வேல் யாத்திரை நடத்தியது. முருகனை பற்றி கூறிய கருத்தை தமிழக மக்கள் எதிர்த்ததால் ஸ்டாலின் இப்போது வேல் ஏந்தி பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாத்திகம் கூறிய தி.மு.க இன்று ஆத்திகம் பேசி வாக்கு சேகரித்து வருகிறது. தமிழகத்தில் அருமனை பகுதி ரப்பர் விவசாயம் அதிகம் உள்ளது. ரப்பர் தொழிற்சாலை கொண்டுவர பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரியுங்கள்.

அருமனையில் ஜே.பி.நட்டா பிரசாரம்
அருமனையில் ஜே.பி.நட்டா பிரசாரம்

நான் அமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு திட்டங்களை கேட்டு இரு கரங்களை கூப்பியவாறு வருவார் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். மதுரையில் எய்ம்ஸ் மற்றும் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் அனுமதி அளிக்கப்படுள்ளது. கன்னியாகுமரியில் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள். தேர்தல் காரணமாக நான் சில சிஷயங்களை விரிவாக சொல்லவில்லை. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு