Published:Updated:

ஜெயலலிதா மரணம்: ``நான் கால தாமதம் செய்யவில்லை" - விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

முதல்வர் ஸ்டாலின், நீதிபதி ஆறுமுகசாமி

``ஒரு வருடத்துக்குள் 149 சாட்சிகளை நாங்கள் விசாரித்திருக்கிறோம். இதில் ஒவ்வொருவருடைய சாட்சியமும் அதிக பக்கங்களைக்கொண்டது." - நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம்: ``நான் கால தாமதம் செய்யவில்லை" - விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி

``ஒரு வருடத்துக்குள் 149 சாட்சிகளை நாங்கள் விசாரித்திருக்கிறோம். இதில் ஒவ்வொருவருடைய சாட்சியமும் அதிக பக்கங்களைக்கொண்டது." - நீதிபதி ஆறுமுகசாமி

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், நீதிபதி ஆறுமுகசாமி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, 2017-ல் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக, கடந்த மார்ச் மாதம் முழு விசாரணையும் நடந்து முடிந்தது. இதற்கிடையில் 14 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் இந்த விசாரணையில், 149 சாட்சிகளிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. மேலும், இறுதிக்கட்ட விசாரணையாக ஓ.பி.எஸ்., சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியிருந்தது.

ஜெயலலிதா- அப்போலோ
ஜெயலலிதா- அப்போலோ

இருப்பினும் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான 600 பக்க விசாரணை அறிக்கையை, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் இன்று காலை 10:30 மணியளவில் சமர்ப்பித்தார்.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி ஆறுமுகசாமி, ``இதில் கால தாமதம் நான் செய்ததாகக் கூறுகிறார்கள். முதல் ஒரு மாதம் சட்டப்படி இந்த ஆணையத்தால் அறிவிப்புவிடப்பட்டது. அதன் பிறகு விசாரணையைத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு வருடத்துக்குள் 149 சாட்சிகளை நாங்கள் விசாரித்திருக்கிறோம். இதில் ஒவ்வொருவருடைய சாட்சியமும் அதிக பக்கங்களைக்கொண்டது. அதில் 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், தமிழில் 608 பக்கங்களும் எழுதியிருக்கிறேன். சாட்சியத்தோடு, அதன் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். அதை வெளியிடலாமா என்று அரசாங்கம்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது" என்று கூறினார். இந்த நிலையில் அடுத்த நடக்கவிருக்கும் அமைச்சரவையில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.