Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

கடமை தவறும் மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை!

மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் டி‌.எஸ்.பி-யைத் தவிர மற்ற அனைவருமே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதிப்பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள்மீது லஞ்சப் புகார் வந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களைத் தப்பிக்கவைத்துவிடுகிறார்கள். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு லஞ்சத்தில் புரண்ட மின்வாரிய உயரதிகாரி ஒருவரைத் தப்பிக்கவைத்து சர்ச்சையில் சிக்கினார், பெண் இன்ஸ்பெக்டர். சமீபத்தில் தாலுகா அலுவலகம் ஒன்றுக்கு ரெய்டுக்குப் போனபோது, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த தாசில்தார் உள்ளிட்ட சிலரை மட்டும் காலையிலேயே அலெர்ட் செய்துவிட்டு, மாலையில் ரெய்டு நடத்தி வேறு சமூகத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ-வை மட்டும் கைதுசெய்திருக்கிறார்கள். இதையடுத்து, “பல ஆண்டுகளாக இதே மாவட்டத்தில் நங்கூரம் போட்டிருக்கும் இவர்களை, இடமாற்றம் செய்தால் மட்டுமே இந்த நிலை மாறும்” என்று குமுறுகிறார்கள் அரசு ஊழியர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘நாங்க போலீஸ்... அடிக்காதீங்க!’’

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட படுகை கிராமத்தில், காவலர் ஒருவரும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் மதுக்கடத்தலைப் பிடிப்பதற்காக ரோந்து சென்றுள்ளார்கள். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் டூ வீலரில் இரண்டு மூட்டை மணலை எடுத்துவந்திருக்கிறார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அந்த நபரை போலீஸார் அடித்துள்ளார்கள். இதைப் பார்த்து ஊர்க்காரர் ஒருவர், ‘‘யாரோ வெளியூர்க்காரனுங்க நம்ம ஆளை அடிக்கிறானுங்க’’ என்று சத்தம்போடவே, அங்கே கூடியவர்கள் போலீஸாரை அடித்து உதைத்திருக்கிறார்கள். ‘‘நாங்க போலீஸ்தான்... அடிக்காதீங்க...’’ என்று அவர்கள் அடையாள அட்டையைக் காட்டியும் விடவில்லையாம். ஒருவழியாக தப்பிச் சென்ற போலீஸார் உயரதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்ல, போலீஸைத் தாக்கிய ஐந்து பேரை ‘நன்கு கவனித்து’ மணல் கடத்தல் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அள்ளிச் செல்லும் அதிகாரி மனைவி... அலறும் வணிகர்கள்...

மேற்கு மாவட்ட நகரம் ஒன்றில் சமீபத்தில் முக்கியப் பொறுப்புக்கு வந்திருக்கும் காக்கி உயரதிகாரி வசூல் வேட்டையில் கில்லாடி என்றால், அவரின் மனைவியும் புகுந்து விளையாடுகிறாராம். இரண்டு காக்கிகள் பாதுகாப்புடன் அடிக்கடி ஷாப்பிங் செல்பவர் அள்ளவேண்டியதை அள்ளிக்கொண்டு பில் கொடுக்காமல் இடத்தை காலி செய்துவிடுகிறார். இதையடுத்து, உயரதிகாரியின் மனைவி ஷாப்பிங் வருகிறார் என்றாலே அலறும் கடைக்காரர்கள், இதை யாரிடம் புகார் அளிப்பது என்று புரியாமல் குமுறுகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மிரட்டல் பிரமுகர் - போலீஸ் கூட்டு... அதிர்ந்துபோன ஒப்பந்ததாரர்...

கடலூர் முதுநகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு செம்மண் குவாரியில் 2,000 லோடு செம்மண் எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டிருக்கிறார். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பிரமுகர் ஒருவர், ‘‘லோடுக்கு 200 ரூபாய் எனக்குக் கொடுக்கணும். இல்லைன்னா லாரியைக் கொளுத்திடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். இதையடுத்து அந்த ஒப்பந்ததாரர் முதுநகர் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மிரட்டல் பிரமுகருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்த தலைமைக் காவலர், ‘‘கேக்கற காசைக் கொடுத்துட்டுப் போவியா… லாரியைக் கொளுத்திடுவோம்னு சொல்றாங்கல்ல...’’ என்று கூலாகச் சொல்ல, அதிர்ந்துபோய் திரும்பியிருக்கிறார் ஒப்பந்ததாரர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

சட்டவிரோத பார்கள்... கல்லாகட்டும் இன்ஸ்பெக்டர்!

கரூர் நகரின் தென்கிழக்கு திசையிலிருக்கும் காவல் நிலைய ஆய்வாளர், அங்கு நடக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்காமல், அவற்றிலிருந்து வருமானம் பார்ப்பதையே ‘ராஜ’தந்திரமாக வைத்திருக்கிறார். ‘‘மாவட்டத்திலேயே அதிக அளவு சட்டவிரோத லாட்டரி விற்பனை இந்தப் பகுதியில்தான் நடக்கிறது. கஞ்சா விற்பனை, ஹோட்டல்களில் சட்டவிரோத பார்கள் சக்கைபோடு போடுகின்றன’’ என்று பட்டியலிடும் சமூக ஆர்வலர்கள், ‘‘பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள ஐந்து ஹோட்டல்களில் வெளிப்படையாக நள்ளிரவு வரை பார்கள் இயங்கிவருகின்றன. இங்கு பார் நடக்கும் விவகாரம் தெரியாமல் வெளியூர்களிலிருந்து உணவு சாப்பிட வருபவர்களுடன் ‘குடிமகன்கள்’ தகராறு செய்வதால் ஹோட்டல்களில் அடிக்கடி பிரச்னை ஏற்படும். இது பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து சொன்னால் ‘ஹோட்டல்களுக்குப் பிரச்னை வராத அளவுக்கு, கூட்டத்தை க்ளியர் பண்ணிட்டு வாங்க’ என்று போலீஸாரை அனுப்பிவைக்கிறார் ஆய்வாளர். அவருக்கு மாதந்தோறும் வரவேண்டிய மாமூல் வந்துவிடுவதால், எதையும் கண்டுகொள்வதில்லை’’ என்று புலம்புகிறார்கள்.