Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

வீட்டை எழுதிக்கேட்ட அதிகாரி... காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண்!

சென்னையின் பிரபல ஏரியாவை நினைவூட்டும் பெயர்கொண்டது ஒரு புதுச்சேரி மாநிலக் காவல் நிலையம். அதில் பணிபுரியும் ‘லட்டு’ கடவுளின் பெயரைக்கொண்ட அந்த அதிகாரி, கல்லாகட்டுவதில் கில்லாடியாம். கொடுக்கல் வாங்கல் விவகாரம் ஒன்றில், ஜாமீன் கையெழுத்து போட்ட பெண் ஒருவரை விசாரணைக்கு அழைத்த அந்த அதிகாரி, ‘‘பணத்தைக் கொடு அல்லது உன் வீட்டை எழுதிக்கொடு’’ என்று மிரட்டியிருக்கிறார். ‘‘ஜாமீன் கையெழுத்து போட்டதற்காக வீட்டை எழுதிக் கொடுத்தால், நாங்கள் எங்கே போவது?’’ என்று அந்தப் பெண் கேட்க, ‘‘வீட்டை எழுதித் தரலைன்னா உன் பசங்க, உன் வீட்டுக்காரர் எல்லார் மேலேயும் கேஸ் போட்டுடுவேன்’’ என்று மிரட்டியிருக்கிறார் அந்த அதிகாரி. மிரட்டல் தொடர, வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருந்த கழிவறையைச் சுத்தப்படுத்தும் மருந்தை காவல் நிலையத்திலேயே குடித்து மயக்கமாகிவிட்டார் அந்தப் பெண். உடனே பெண் காவலர் ஒருவர் மூலம், அவரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த அந்த அதிகாரி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வீட்டில் மருந்து குடித்ததாக மருத்துவமனைச் சான்றிதழையே மாற்றிவிட்டாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

அளவுக்கு மீறிய டார்ச்சர்... வி.ஆர்.எஸ் வாங்கும் போலீஸார்!

மேற்கு மாவட்டத்தில் ஆயுதங்களைக் கையாளும் காவல்துறை பிரிவில், ‘மன்னர்’ பெயரைக்கொண்ட உயரதிகாரி ஒருவர் பணிபுரிகிறார். தனக்கு விசுவாசமான காக்கிகளுக்கு விடுப்பிலிருந்து அனைத்திலும் தாராளம் காட்டும் அவர், அவருக்கு செட் ஆகவில்லையென்றால் படுத்தி எடுக்கிறாராம். அவர்களை ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்வதால், இவரின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் வி.ஆர்.எஸ் பெற்று சென்றுவிட்டாராம். மற்றோர் ஆய்வாளரும் வி.ஆர்.எஸ்-க்கு விண்ணப்பித்துள்ளார். மனிதர் கட்டிங்கிலும் புகுந்து விளையாடுகிறாராம். ஏலத்துக்கு வரும் வாகனங்களிலிருந்து, அமைச்சர், வி.ஐ.பி பாதுகாப்புப் பணி என்று அனைத்திலும் கனஜோராக கல்லாகட்டுகிறார் என்கின்றன காக்கி வட்டாரங்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

பாலியல் புகார் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து... சர்ச்சையில் நீலகிரி காக்கி!

நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா, கேரளா இரு மாநிலங்களுக்கும் அருகிலிருக்கும் முக்கிய ஊரில் செயல்பட்டுவருகிறது ஒரு தனியார் பள்ளி. அப்பள்ளியின் நிறுவனர் தன்பாலின ஈர்ப்புகொண்டவர் என்றும், பல மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 19 வயதான முன்னாள் மாணவர் ஒருவரிடம் அந்த நிறுவனர் சமீபத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். தன் தந்தையுடன் வந்த அந்த மாணவர், காவல் நிலையத்தில் பாலியல் புகாரளிக்க... விசாரணை என்ற பெயரில் இரு தரப்பையும் அழைத்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், பஞ்சாயத்துப் பேசி முடித்திருக்கிறார். பள்ளி நிறுவனரிடம் பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு, அவருக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார். புகாரளித்த மாணவனை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்திருக்கிறார். ஆனாலும், வாபஸ் கடிதத்திலும் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலைத் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் குறிப்பிட்டு, ‘ஆனாலும் வாபஸ் பெறுகிறேன்’ என அந்த மாணவன் கையெழுத்திட்டிருக்கிறார். அந்தக் கடிதம் தற்போது நீலகிரி எஸ்.பி அலுவலகம் வரை சென்றிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் பல மாணவர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மதுவிலக்கு காவல் நிலையங்கள்... மாதம் பத்தாயிரம் ரூபாய் இலக்கு!

ஆன்மிக தலமொன்றின் பெயரை முன்பாதியாகக் கொண்ட டி.எஸ்.பி ஒருவர், கடலோர மாவட்டம் ஒன்றில் பணிபுரிகிறார். பணம் பெறாமல் எந்தவொரு புகாரையும் அவர் விசாரிப்பதில்லையாம். இவருக்குக் கூடுதலாக மதுவிலக்கு பிரிவும் கொடுக்கப்பட, மனிதர் புகுந்து விளையாடி வருகிறாராம். இவரின் கன்ட்ரோலில் இருக்கும் அனைத்து மதுவிலக்கு காவல் நிலையங்களிலிருந்தும், மாதம்தோறும் தலா 10,000 ரூபாய் மாமூல் வந்துவிட வேண்டும் என்று கறார் காட்டுகிறாராம். இவர் விசாரிக்க அதிகாரமில்லாத, சிவில் பிரச்னை என்று முடித்துவைக்கப்பட்ட புகார் ஒன்றை மீண்டும் கையிலெடுத்து, ஒரு தரப்பிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு, எதிரணியை மிரட்ட... அந்த விஷயம் தற்போது உயரதிகாரிகளுக்குப் புகாராகச் சென்றுள்ளதாம். மதுவிலக்கு மாமூல் விவகாரத்தில் சிக்காத அந்த டி.எஸ்.பி., இந்தப் பஞ்சாயத்தில் சிக்கி விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில்.

ஜூனியர் வாக்கி டாக்கி

சல்யூட் கேட்கும் டி.எஸ்.பி-யின் துணைவியார்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவருடைய துணைவியார், அடுத்தடுத்த குற்றச்சாட்டு வலையில் சிக்கிவருகிறார். தினமும் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகிவிடும் அவர், அங்கு புகார் கொடுக்க வருபவர்களிடமிருந்து தானே புகாரைப் பெற்றுக்கொள்வதுடன், ‘நடவடிக்கை எடுப்பாங்க... நீங்க போகலாம்’ என்று திருப்பி அனுப்பிவிடுகிறார். அதுமட்டுமல்லாமல், அலுவலகத்திலுள்ள ஏட்டு முதல் எஸ்.ஐ வரையிலான அதிகாரிகள் இவருக்கு சல்யூட் அடிக்கவில்லை யென்றால், கடுமையாக பனிஷ்மென்ட்டும் கிடைக்குமாம். ‘‘இந்தத் தகவலை எஸ்.பி ஆபீஸ் வரைக்கும் கொண்டுபோயிட்டோம். இருந்தாலும் பிரயோஜனமில்லை. ஒருவேளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்கும் முக்கிய அதிகாரிங்கிறதால நடவடிக்கை எடுக்க யோசிக்கிறாங்களோ என்னவோ’’ என்கிறார்கள் டி.எஸ்.பி அலுவலக காக்கிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism