Published:Updated:

'அதை மட்டும் செய்திடாதீங்க' ; வேண்டுகோள் விடுத்த சீமான்... மௌனம் காத்த சசிகலா!

சசிகலா - சீமான் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர்.

'அதை மட்டும் செய்திடாதீங்க' ; வேண்டுகோள் விடுத்த சீமான்... மௌனம் காத்த சசிகலா!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர்.

Published:Updated:
சசிகலா - சீமான் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை வாசத்துக்குப்பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. தமிழக எல்லையான ஓசூரிலிருந்து சென்னை வரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அவரின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால், வெளியாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்குப் பிறகு நேற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியில் வந்தார் சசிகலா.

சசிகலா
சசிகலா

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபடவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர்.

சசிகலாவைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா,

''சசிகலா எனும் சாதனைத் தமிழச்சியைப் பார்க்க வந்தேன். தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறார் சசிகலா” என்றார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவுடன் உரையாடினார். ஆனால், வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இந்தநிலையில், அவர் என்ன பேசினார் என்பது குறித்து ‘நாம் தமிழர்’ வட்டாரத்தில் விசாரித்தோம்:

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

''இப்போது மட்டுமல்ல, ஏற்கெனவே சசிகலா அம்மையார் பரோலில் வந்தபோதே அண்ணன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். ஆனால், அப்போது வெளியில் யாருக்கும் தெரியாது. நேற்று பேசியது, 2009 காலகட்டத்தில் எங்கள் அண்ணனும் தொடர்ச்சியாக சிறையில் இருந்திருக்கிறார். தற்போது , சசிகலா அம்மையாரும் நான்காண்டுகளாக சிறையில் இருந்துவிட்டு வந்திருக்கிறார். அதனால், சிறைசார்ந்த அனுபவங்களை அண்ணன் பகிர்ந்துகொண்டார். சசிகலா அம்மையாரிடமும் அவரின் சிறை அனுபவத்தை மிகப் பொறுமையாக அண்ணன் கேட்டுக்கொண்டார். அதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது. அரசியல் ரீதியாக அண்ணன் ஒரேயொரு கோரிக்கையைத்தான் முன்வைத்தார். 'மத்திய பா.ஜ.கவால் கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து விட்டீர்கள். இப்போது இருப்பது போலவே தேர்தல், அதனைத் தொடர்ந்து சில காலம் இருந்தால் போதும். மத்தியில் அடுத்தும் பா.ஜ.கதான் ஆட்சிக்கு வரும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. நிச்சயமாக, அ.தி.மு.கவைக் காப்பாற்றிவிடலாம்.

அதனால், தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள். கண்டிப்பாக அவர்கள், அ.தி.மு.க, அ.ம.மு.க என்கிற இரண்டு கட்சிகளையுமே அழிக்கத்தான் நினைப்பார்கள். அதனால் , பா.ஜ.க ஆதரவு என்கிற நிலைக்கு மட்டும் ஒருபோதும் சென்றுவிடாதீர்கள்' என கோரிக்கை வைத்தார். சசிகலா அதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டாரே தவிர பதிலேதும் சொல்லவில்லை. சசிகலா அம்மையாரின் கணவர் நடராஜன் தமிழ் அமைப்புகளுக்கு பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். அந்தவகையில் இது மரியாதையான சந்திப்பு'' என்கிறார்கள் அவர்கள்.

சசிகலா - சரத் சந்திப்பு
சசிகலா - சரத் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறார். சசிகலாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருப்பதால், அவர்களின் உரையாடல் கொரோனா தொடர்பாகவே இருந்திருக்கிறது. தவிர, ''ஒன்றிரண்டு சீட்டுக்களுக்காக இந்தமுறை யாருடனும் கூட்டணிக்குச் செல்லப்போவதில்லை. ஒருவேளை அப்படியொரு சூழல் உருவானால், குறிப்பிட்ட தொகுதிகளில் தனியாகப் போட்டியிடப் போகிறோம்'' என்கிற தகவலையும் சசிகலாவிடம் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாக அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து, ஜெயலலிதா மரணத்தின்போது, 'ஓ.பி.எஸ்ஸுக்குத் துணை நிற்பேன், சசிகலாவை சிறைக்கு அனுப்புவேன்' என ஆவேசமாகப் பேசிவந்த டிராஃபிக் ராமசாமி, கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தும், சசிகலாவைப் புகழ்ந்தும் யு-ட்யூப் சேனல்களில் பேசிவந்தார். இந்தநிலையில் நேற்று சசிகலாவைச் சந்தித்த டிராஃபிக் ராமசாமி, 'எம்.ஜி.ஆர் உடனான அவரின் சந்திப்பு, ராஜாஜியுடனான அவரின் அரசியல் அனுபவங்களை சசிகலாவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி

தொடர்ந்து, ''உங்களைக் குற்றவாளியாக்கியதே தவறு. எடப்பாடி பழனிசாமிதான் தொடர்ந்து உங்களை குற்றவாளியாக விளம்பரப்படுத்தி வருகிறார். துணையாக இருந்ததற்குத்தான் நீங்கள் தண்டனை அனுபவித்திருக்கிறீர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே அப்படித்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள்'' என உருக்கமாகப் பேசியிருக்கிறார் டிராஃபிக் ராமசாமி. பதிலுக்கு சசிகலாவும்'' என்ன உதவியென்றாலும் அழையுங்கள்...நான் உங்களுடன் இருக்கிறேன்'' என அக்கறையாகப் பேசி அனுப்பி வைத்திருக்கிறார்.

ஒருபுறம் இந்த சந்திப்புகள் மரியாதை நிமித்தமாகப் பார்க்கப்பட்டாலும் ' ஊழல் குற்றவாளியைப் போய்ச் சந்திக்கிறார்கள்' என பாரதிராஜா, சீமான், டிராபிக் ராமசாமியின் மீது கடுமையான விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் சிலர் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.