Published:Updated:

`உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படும் மேதை மோடி’ - நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

``சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது" என்றும் அருண் மிஸ்ரா கூறியுள்ளார்.

`நீதித்துறையும் மாறிவரும் உலகமும்’ என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அருண் மிஸ்ரா
அருண் மிஸ்ரா
ANI

மாநாட்டின் நன்றி உரையில் பேசிய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, ``கண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில்தான் எங்களுடைய அக்கறை உள்ளது. உலக அளவில் சந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை வித்தகர் நரேந்திர மோடி அவர்களின் உரைக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவிக்கிறோம். அது, மாநாட்டில் உள்ளார்ந்த விவாதங்களை உருவாக்கவும் நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலக மக்கள் அனைவரும் நம் நாடு எப்படி இயங்குகிறது என்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது. அரசியலமைப்புகளுக்கு உட்பட்டு அமைதியான, பாதுகாப்பான மற்றும் பயங்கரவாதம் இல்லாத ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. நீதித்துறைதான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு, சட்டங்களை நிறைவேற்றும் மன்றங்கள் என்பது இதயம், நிர்வாகம் என்பது மூளை. ஒரு மாநிலத்தில், இந்த மூன்று உறுப்புகளும் சேர்ந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் என்பது வெற்றிபெறும்” என்று பேசியுள்ளார்.

மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்
மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்

மேலும், ``இப்போது நாம் 21வது நூற்றாண்டில் இருக்கிறோம். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் சேர்த்து தேவைப்படுகிறது. அநீதி மற்றும் சமத்துவமின்மை போன்ற உணர்வுகள் அதிக அளவில் உருவாகியுள்ளன. கொரோனா வைரஸைப்போல ஆபத்தான ஒன்றாக மாறுவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``உலக அளவில் விவாதங்களை ஏற்படுத்திய சில முக்கியமான தீர்ப்புகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் மக்களும் இந்த தீர்ப்புகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை உண்மை மற்றும் சேவைக்காகவே அர்ப்பணித்தார். அவையே நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. தன்னுடைய முதல் வழக்கு குறித்து காந்தி தனது சுயசரிதையில் மிக விரிவாக எழுதியுள்ளார்” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு