Published:Updated:

நீட் விலக்கு மசோதா ரத்து... ஆளுநரின் பதவியை ரத்து செய்ய கோருவதே நியாயம்!

ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் ஆளுநராகப் பதவியேற்றவுடன், நீட் விலக்கு கோரும் சட்டத்துக்கு முடிவு எதுவும் தெரிவிக்காமல் காலம் கடத்திவந்தார்

நீட் விலக்கு மசோதா ரத்து... ஆளுநரின் பதவியை ரத்து செய்ய கோருவதே நியாயம்!

தமிழ்நாட்டில் ஆளுநராகப் பதவியேற்றவுடன், நீட் விலக்கு கோரும் சட்டத்துக்கு முடிவு எதுவும் தெரிவிக்காமல் காலம் கடத்திவந்தார்

Published:Updated:
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த வருடம், செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டவரைவை விவாதிக்கும் நேரத்தில் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய பா.ஜ.க-வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும், பிற கட்சிகள் அனைத்தும் சட்டவரைவை ஆதரித்து வாக்களித்ததால், சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி அவ்வரைவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டம் நிறைவேறிய சில நாள்களில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவர், இந்திய காவல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட பழங்குடியினருடன் ஒன்றிய அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நாகாலாந்தில் ஓய்வு உபசார நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அந்த அளவுக்கு நாகாலாந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தார்.

தமிழ்நாட்டில் ஆளுநராகப் பதவியேற்றவுடன், நீட் விலக்கு கோரும் சட்டத்துக்கு முடிவு எதுவும் தெரிவிக்காமல் காலம் கடத்திவந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இது பற்றிக் கருத்து தெரிவித்தபோதும், மௌனத்தையே பதிலாக அளித்தார். ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, நீட் விலக்கு சட்டத்தைப் பற்றி, சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்கப்போவதாக அறிவித்தார்.

நீட் விலக்கு மசோதா ரத்து... ஆளுநரின் பதவியை ரத்து செய்ய கோருவதே நியாயம்!

இதற்குள் உச்ச நீதிமன்றம், தடை உத்தரவுகளையெல்லாம் நீக்கி 2021-ம் வருட நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது. இதனால், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கூடவே, ‘நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற்றுத் தருவோம்’ என்கிற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வியும் எழுந்தது. இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து மனுவையும் அளித்தனர். இந்தச் சூழலில்தான் தமிழக ஆளுநர் ரவி, நீட் விலக்கு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பினார். அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று, நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அது ஏழை மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நன்மை பயக்கும். இரண்டு, உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு சட்டம் செல்லும் என்று அறிவித்ததுடன், அதனால் மாணவர்களுக்கு நன்மைதான் என்று வேலூர் மருத்துவக் கல்லூரி வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

மாணவர்கள் நலனுக்கு சட்டவிலக்கு விரோதமானதா என்பதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சட்டமன்றமே தவிர ஆளுநர் அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவில் சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது இப்படிப்பட்ட காரணங்களைக் கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. வேலூர் கிறிஸ்தவ மருத்துக் கல்லூரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு யாதெனில், சிறுபான்மை நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை அந்நிறுவனங்களின் உரிமைக்கு உட்பட்டவை என்று அரசமைப்பு சட்டத்தில் 30(1) பிரிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரி நடத்தும் மாணவர் சேர்க்கை, தகுதியின் அடிப்படையில் நடத்தப்பட்டுவருகிறது. அதில் ஒன்றிய அரசு தலையிடுவதற்கு உரிமை இல்லை. எனவே நீட் தேர்விலிருந்து சிறுபான்மை நிறுவனங்களுக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான்.

நீட் விலக்கு மசோதா ரத்து... ஆளுநரின் பதவியை ரத்து செய்ய கோருவதே நியாயம்!

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ‘நீட் தேர்வு அனைத்துவிதமான மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்; சிறுபான்மை நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது’ என்று கூறிவிட்டது. மேலும், நீட் தேர்வால் முறையான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கருத்து தெரிவித்தது. ஒரு வழக்கில் கூறப்படும் கருத்துகள், அதில் எழுப்பப்படும் வினாக்களை ஒட்டியே இருக்கும். அதை இதர வழக்குகளுக்குத் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்னை என்னவென்றால், நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதிலிருந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகள் சட்டத் திருத்தம் செய்து அதிலிருந்து விதிவிலக்கு பெற முடியுமா என்பதே ஆகும். இதுவரை இப்படிப்பட்ட வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதையும் அளிக்கவில்லை.

மேலும், மாநில அரசின் நீட் தேர்வு விலக்கு சட்டம், ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு கோருவதால், அப்படிப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. எனவே, மாநில ஆளுநர் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அதுவரை தனது இசைவை ஒத்திவைத்திருக்க வேண்டுமேயொழிய, தன்னிச்சையாக சட்டவரைவை மறுபரிசீலனைக்கு அனுப்புவதற்கு அதிகாரம் இல்லை. இதையொட்டி எழுந்த விவாதத்தில், பா.ஜ.க-வினர் ‘மாநில ஆளுநர் தபால்காரர் அல்ல’ என்று வாதாடிவருகிறார்கள். தபால்காரருக்கு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தபால்களை உரியவர்களிடம் சேர்க்கும் கடமை உள்ளது. ஆனால், மாநில ஆளுநர் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தன்னிச்சையாக சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு அனுப்பியிருப்பது எப்படி இருக்கிறதென்றால், தபால்காரர் உரிய விலாசத்தில் தபாலை ஒப்படைக்காமல் போகிற வழியில் அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் செல்வதுபோல் உள்ளது. அப்படிப்பட்ட தபால்காரரை, அஞ்சல் இலாகா வீட்டுக்குத்தான் அனுப்பிவைக்கும். அதேபோல்தான், இப்போது ஆளுநரையும் வீட்டுக்கு அனுப்புவதே நியாயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism