Published:Updated:

தி.மு.க-வா... சசிகலா ஆதரவா? - செங்கோட்டையனின் கணக்கு என்ன?

செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
செங்கோட்டையன்

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மொழி உணர்வோடு, இன உணர்வோடு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் ஆட்சி செய்துவருகின்றன

தி.மு.க-வா... சசிகலா ஆதரவா? - செங்கோட்டையனின் கணக்கு என்ன?

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மொழி உணர்வோடு, இன உணர்வோடு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் ஆட்சி செய்துவருகின்றன

Published:Updated:
செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
செங்கோட்டையன்

``தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் ஆள முடியாது” என்று அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சட்டமன்றத்தில் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் தி.மு.க அரசை வெகுவாகப் பாராட்டியவர், “மிகவும் கண்ணியத்துடன் சட்டமன்றம் நடைபெறுகிறது” என்று சான்றிதழும் அளித்தார். சமீபகாலமாக அ.தி.மு.க உட்கட்சிக் கூட்டங்களில் தனது அதிருப்தியையும், அதிரடியான கருத்துகளையும் தெரிவித்துவரும் செங்கோட்டையன், சட்டமன்றத்தில் பா.ஜ.க-வை எச்சரிக்கும்விதத்தில் பேசியிருப்பதை அ.தி.மு.க இரட்டைத் தலைமையே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறது ராயப்பேட்டை வட்டாரம். செங்கோட்டையனின் கணக்குதான் என்ன?

அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இப்போதுவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் செங்கோட்டையன். போக்குவரத்து, வருவாய், வனம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி எனப் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன்தான் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து, கட்சியில் பெரிய பதவி எதிலும் இல்லாத நிலையில், மதுசூதனன் மறைவுக்குப் பிறகு கட்சியின் அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

தி.மு.க-வா... சசிகலா ஆதரவா? - செங்கோட்டையனின் கணக்கு என்ன?

இதையடுத்து, உட்கட்சிக் கூட்டங்களில் ‘கட்சியில் சீனியரான என்னை யாரும் மதிப்பதில்லை’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்திவந்தார் செங்கோட்டையன். சில மாதங்களுக்கு முன்பாக, ‘வழிகாட்டுதல் குழுவுக்கு என்ன அதிகாரம் என்பதை வரையறுக்க வேண்டும். அவர்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்’ என்று செங்கோட்டையன் முன்வைத்த கோரிக்கைகள் இரட்டைத் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான், சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் செங்கோட்டையன்.

அவர் பேசியதன் பின்னணி குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்... ``அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும்வரைக்கும் செங்கோட்டையன் அமைதியாகத்தான் இருந்தார். கட்சிக்குள் எடப்பாடி, வேலுமணி ஆகியோரின் ஆதிக்கத்தை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஆட்சி பறிபோய், தொடர்ச்சியாக நடந்த இரண்டு உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருந்தும், பல முக்கியப் பொறுப்புகளை வகித்தும் தற்போது கட்சியில் பெரிய பதவியில் இல்லை என்பது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்துக்கொண்டேயிருந்தது.

தி.மு.க-வா... சசிகலா ஆதரவா? - செங்கோட்டையனின் கணக்கு என்ன?

அணிகள் இரண்டாகப் பிரிந்தபோது சசிகலா அணியில் செங்கோட்டையன்தான் அவைத்தலைவராக இருந்தார். அதனால், மதுசூதனன் மறைவுக்குப் பிறகு அவைத்தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அவரது எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட பன்னீர் தரப்பும் அவரிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. ‘நீங்கதான் அவைத்தலைவரா கண்டிப்பா வரணும்’ என்றெல்லாம் அவரிடம் உசுப்பேற்றியது. ஆனால், சீனியரான செங்கோட்டையன் அவைத்தலைவராக வருவது இப்போது இல்லாவிட்டாலும் பின்னாளில் சிக்கல்தான் என்பதை உணர்ந்த எடப்பாடி தரப்பு, பன்னீருடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்மகன் உசேனைத் தற்காலிக அவைத்தலைவராக்கிவிட்டது.

கட்சிக்குள் தனது சீனியாரிட்டிக்கு மரியாதை இல்லை என்கிற வருத்தம் ஒருபுறம் என்றால், எடப்பாடி - பன்னீர் இருவரும் தங்களது சுயநலத்துக்காக பா.ஜ.க-விடம் கட்சியை அடமானம் வைத்ததில், ஆரம்பத்திலிருந்தே செங்கோட்டையனுக்கு விருப்பம் இல்லை. ஜெயலலிதா எப்படி வெளியில் பா.ஜ.க-வை எதிர்ப்பதுபோலக் காட்டிக்கொண்டு, உள்ளே அண்டர்ஸ்டாண்டிங்கோடு இருந்தாரோ அப்படியொரு நிலைப்பாட்டைத்தான் இப்போதைய தலைமையும் எடுத்திருக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. தவிர, கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க வளர்ந்துவருவதையும் அவர் ரசிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், கண்டிப்பாக அ.தி.மு.க-வைக் காலி செய்துவிட்டு அந்த இடத்தில் பா.ஜ.க அமர்ந்துகொள்ளும் என்பது அவரது எண்ணம். அதனால்தான் மிகவும் அழுத்தமாகத் தனது கருத்தைச் சட்டமன்றத்தில் பதிவு செய்தார். இந்தப் பேச்சு பற்றி சிலர் அவரிடம் கேட்டபோது, ‘எனது துறையில் நான் எதையும் பெரிதாகச் சம்பாதிக்கவில்லை. அதனால், ரெய்டைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்” என்றவர்கள், மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்...

தி.மு.க-வா... சசிகலா ஆதரவா? - செங்கோட்டையனின் கணக்கு என்ன?

``எ.வ.வேலு, முத்துச்சாமி, செந்தில் பாலாஜிபோல செங்கோட்டையன் தி.மு.க-வுக்குப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு ஏற்ப தி.மு.க-வினரும் சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் பழகி வருகின்றனர். முதல்வருக்கும்கூட அவர்மீது மிகுந்த மதிப்புண்டு. தி.மு.க-வுக்குச் சென்றால் அமைச்சர் முத்துசாமிதான் செங்கோட்டையனுக்கு எதிராகச் செயல்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது செங்கோட்டையனை தி.மு.க-வுக்கு அழைப்பதே முத்துசாமிதான். இன்னும் சொல்லப்போனால், ‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள்... மறு தேர்தலில் வெற்றிபெறவைத்து மந்திரியாக்குகிறோம்’ என்பதுவரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இங்கே இப்படியென்றால் சசிகலா தரப்பிலிருந்தும் ‘எம்.எல்.ஏ-க்களை இழுத்து வாருங்கள்... உங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்குகிறோம்’ என்று பேசிவருகிறார்கள். விரைவில் அவர் ஒரு முடிவை எடுப்பார்” என்று விவரித்தார்கள்.

இது குறித்து விளக்கம் கேட்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைப் பலமுறை தொடர்புகொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அ.தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச் செல்வனிடம் கேட்டபோது, ``திராவிட இயக்கங்கள்தான் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழகத்தை ஆட்சி செய்துவருகின்றன. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மொழி உணர்வோடு, இன உணர்வோடு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் ஆட்சி செய்துவருகின்றன. ஆனால், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் மாநில உரிமைகளைச் சில நேரங்களில் மறந்துவிடுகின்றன. அதனால்தான் அண்ணன் அப்படிப் பேசியிருக்கிறார். மற்ற விஷயங்கள் குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism