Published:Updated:

``அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை..?'' - ரஜினி, ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

``அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை..?'' - ரஜினி, ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

Published:Updated:
கே.பாலகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்குப் பின்னர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ``இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அரசியல் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். அதைப் பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது'' என்றார். இவரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், ``அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை... இனியும் பொறுப்போமா... தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார். மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்துகொள்ள முடியாது' எனவும் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.

ரஜினி
ரஜினி

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படியிருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேசவேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது... இதன் மூலம் அரசியல் சட்ட விதிகளுக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஓர் அரசியல் கூடமாக மாற்றப்பட்டிருப்பது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாறியிருந்தது, கண்டனத்துக்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்தப் போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப்போகிறோம்?'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.