Published:Updated:

ரூ.1 கோடி நிவாரணம், அகவிலைப்படி, ரேபிட் டெஸ்ட் கிட்: கொரோனா அரசியல்கள் குறித்து கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

"மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத இந்தச் சூழலில், `அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது' என்று மத்திய - மாநில அரசுகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்கு அடிப்படை பொருளாதார அறிவுகூட இல்லை என்பதையே காட்டுகிறது'' என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இந்திய அரசியலை, `கொரோனாவுக்கு முன் - கொரோனாவுக்குப் பின்' என இரண்டாகப் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது!

ஊரடங்கு காலகட்டமான `கொ.பி' அரசியலில், தினம் தினம் ஆளுங்கட்சிகள் அதிரடி அறிவிப்புகள் வெளியிடுவதும், இதற்காகவே காத்திருந்ததுபோல் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்து எதிர் அறிக்கை வெளியிடுவதுமாக... கொதிக்கிறது கள நிலவரம்!

`காலதாமதமான ஊரடங்கு, கொரோனா இறப்புகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம், ரேபிட் கிட் கொள்முதலில் ஊழல், அகவிலைப்படி உயர்வில் கை வைக்காதே....' என தினம் தினம் ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கை அம்புகளைத் தொடுத்துவருகின்றன எதிர்க்கட்சிகள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையடுத்து, `கொரோனா காலத்திலும் அரசியல் செய்கிறீர்களே இது நியாயம்தானா....' என்று எதிர்க்கட்சியை நோக்கி ஆளும் கட்சியினர் குமுறுவதும், `கொரோனா பாதிப்பிலும்கூட இப்படி ஊழல் செய்கிறீர்களே...' என எதிர்க்கட்சிகள் எகிறுவதுமாக அதிரி புதிரியாகியிருக்கிறது அரசியல்!

கண்ணுக்குத் தெரியாத கொரோனா எதிரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிவரும் வேளையில், இப்படி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் `இவர்களிருவரில் யார் அரசியல் செய்கிறார்கள்....' என்ற கேள்விக்கும் விடைதெரியாமல் தலை சுற்றி நிற்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில், தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

``இந்தியாவில், கொரோனா தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசைப் பாராட்டாமல், தொடர்ந்து விமர்சித்துவருகிறீர்களே.... நியாயம்தானா?''

``இந்தக் கேள்வியே தவறானது. இந்தியாவில், முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு (30-4-2020) 89 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இப்போதுவரையில், `ஒருவருக்கு தொற்று இருக்கிறதா - இல்லையா என்பதை உறுதிசெய்யும் சோதனைக் கருவிகளை நாம் கண்டுபிடிக்கவும் இல்லை; வெளிநாட்டிலிருந்து இறக்குமதியும் செய்யவில்லை. அதனாலேயே லட்சக்கணக்கான பேர்களை வெறும் சந்தேகத்தின் பேரிலேயே வீடுகளிலும் பிற இடங்களிலும் அடைத்துவைத்திருக்கிறோம்.

தற்போது நம் கைவசம் இருக்கும் பி.சி.ஆர் கருவிகளின் மூலம் 10 லட்சம் பேர்களில் வெறும் 49 பேருக்கு மட்டுமே சோதனை செய்யமுடிகிறது. இது தமிழ்நாட்டு விகிதாசாரம். கேரளாவில், இதே விகிதம் 240 பேர்களாக இருக்கிறது. இந்தியா முழுக்க கொரோனா பரிசோதனை என்பது நாளொன்றுக்கு சராசரியாக 30,000 பேர்களுக்கு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 130 கோடி எண்ணிக்கையில் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நம் நாட்டில், தினம்தோறும் குறைந்தபட்சம் 1 லட்சம் பேருக்காவது இந்தப் பரிசோதனையை செய்தாக வேண்டும். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்தளவில் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆக, ஏவுகணை செலுத்தக்கூடிய அளவுக்கு வல்லமை பொருந்திய நம் நாட்டில், சாதாரணமாக ஒரு ரத்தப் பரிசோதனையை செய்துபார்க்கக்கூட இந்த அரசால் முடியவில்லையே ஏன்... என்றுதான் கேள்வி கேட்கிறோம்!''

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

``கொரோனா நோய்த் தடுப்பை இந்தியா மற்றும் தமிழகம் சிறப்புற செய்துவருவதாக உலக சுகாதார நிறுவனமே பாராட்டுவதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்?''

``மத்திய அரசாங்கம் நல்லது செய்தால், அதைப் பாராட்டுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. `கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா எந்தவகையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது' என்பதைக் குறிப்பிட்டு அல்லவா உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருக்க வேண்டும்? வெறுமனே, `நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள்' என்று சொல்வது மட்டுமே தகுதியாகிவிடுமா என்ன?

`எவ்வளவு பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது' என்பதை வைத்துத்தான் இந்த அரசு `நல்லது செய்திருக்கிறதா...' என்று பார்க்கமுடியும். எனவே, உலக அளவில், பரிசோதனை மூலமாக தொற்றை உறுதி செய்வதில், இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை நாங்கள் சுமத்தவில்லை.

இவ்வளவு நாள்களைக் கடந்துவிட்ட இந்தச் சூழலிலும்கூட, நாடு முழுக்க மொத்தம் 3,000 வென்டிலேட்டர் கருவிகள் மட்டுமே உள்ளன. `ரேபிட் கிட் வாங்கப்போகிறோம்' என்று இத்தனை நாள்களாக சொல்லிச்சொல்லி வாங்கிவந்த ரேபிட் கிட் கருவிகளும் இப்போது தரமற்றவை என்று ஒதுக்கப்பட்டுவிட்டன.

சீனாவில் நம் நாட்டின் தூதரகம் இருக்கிறது; நமக்குத் தேவையான உளவு நிறுவனங்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் 7 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை வாங்குவதற்கு முன்பே, சோதித்துப் பார்த்து தெரிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டது யாருடைய தவறு? `ரேபிட் கிட், ரேபிட் கிட்' என்று சொல்லிச்சொல்லி இத்தனை காலம் ஓடிவிட்டப்பிறகு, இப்போது `கருவிகள் சரியில்லை' என்று திருப்பி அனுப்புகிறீர்கள். இதற்கும் ஒரு மாத காலம் ஓடிவிடும். இதற்கிடையே, வாங்கியதில் ஊழல் இருப்பது வேறு தனி பிரச்னை! ஆக, ஓர் அவசர சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அடிப்படைகூட நம் மத்திய அரசுக்குத் தெரியவில்லையே என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், `மத்திய அரசு, சிறப்பாக செயல்படுகிறது' என்று நீங்களே உங்களுக்கு சான்றிதழ் கொடுத்துக்கொண்டால் எப்படி?''

``தமிழகத்தை விடவும் அதிக விலைக்கு ஆந்திர அரசு ரேபிட் கிட்களை வாங்கியுள்ளது. ஆனாலும் அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் அரசைப் பாராட்டுகிறாரே?''

``மாநில அரசுகள் அதிக விலையில் வாங்கினார்களா அல்லது குறைந்த விலையில் வாங்கினார்களா என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. ஏனெனில், மத்திய அரசுதான் இவ்விஷயத்தில் தவறுகள் செய்திருக்கின்றன. `அந்தந்த மாநிலங்களே கருவிகளை வாங்கிக்கொள்ளக் கூடாது; நாங்கள்தான் வாங்கிக் கொடுப்போம்' என்று சொல்லிய மத்திய அரசு, `ஒரு ரேபிட் கிட் விலை 600 ரூபாய்' என்று அவர்களே விலை நிர்ணயமும் செய்துகொண்டார்கள். ஆனால், பில் தொகையில், ஒரு ரேபிட் கிட்டின் விலை 245 ரூபாய் என்றுதான் வருகிறது. இதைச் சுட்டிக்காட்டித்தான் டெல்லி உயர்நீதிமன்றமும் மத்திய அரசைக் கேள்வி கேட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானபிறகும்கூட அந்தத் தீர்ப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யவிடாமல் 3 நாள்கள் முடக்கிவைத்திருந்திருக்கிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய ஊழல் இது...!''

`சரக்கை வெச்சுட்டு உசுருக்குப் போராடுறோம்’ -ரூ.1 கோடி மதிப்பிலான பாட்டில்களோடு குமுறும் ஓட்டுநர்கள்
எடப்பாடி பழனிசாமி - விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி - விஜயபாஸ்கர்

``கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்திய சீனாவைப் பாராட்டுகிற நீங்கள், 4 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்திய அரசைக் குற்றம் காண்பதென்பது அரசியல்தானே...?''

``நீங்கள் சொல்வது தவறானது. சீனாவிலுள்ள வுகான் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்கும், நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. ஏனெனில், ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே, `வுகானில் உள்ள வெளியாட்கள் எவ்வளவு பேர், அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி' என்பன போன்றவற்றையெல்லாம் முறைப்படி கணக்கெடுத்து நிறைவேற்றியபிறகே... அங்கே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வுகானை விட்டு ஒரு சிறிய எறும்புகூட வெளியே செல்லமுடியாது - உள்ளே வரவும் முடியாது என்பதைப் போன்ற கட்டுப்பாடு மிக்க ஊரடங்கு உத்தரவு அது. அதனால்தான் அங்கே கொரோனாவை முழுதாக வெற்றி பெற முடிந்தது.

ஆனால், இங்கே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு என்பது, அமைச்சரவை சகாக்களுக்குக்கூட தெரியாமல் பிரதமரே நேரடியாக வந்து அறிவித்த `பண மதிப்பிழப்பு நடவடிக்கையை'ப் போன்று திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்று. அதாவது, `முழு ஊரடங்கு' என்று முதல் நாள் அரசிடமிருந்து அறிக்கை வருகிறது. மறுநாளே, `முழு ஊரடங்கின்போது செயல்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பட்டியல்' என்று இன்னொரு அறிக்கை வெளிவருகிறது.

அடுத்து, திடீரென எந்தவித முன்னேற்பாடும் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், எல்லா நகரங்களிலும் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்ல தவித்துக்கிடந்ததையும் போட்டியிட்டு கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணித்ததையும் பார்க்கமுடிந்தது. கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் இந்த காலகட்டத்தில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளோடு மட்டும் இடம்பெயரவில்லை... கொரோனாவோடும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

`4 நாள் முழு ஊரடங்கு' என்று முந்தைய நாள் அறிவித்ததால், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஒன்று சேர்வதுபோல், மக்கள் ஒன்றுகூடி பொருள்களை வாங்கிச் சென்ற காட்சிகளைப் பார்த்தீர்கள்தானே.... இனி 4 நாள்கள் தனிமையில் இருந்துதான் என்ன பிரயோஜனம்? இது எப்படி முழு ஊரடங்காகும்? மொத்தத்தில், `கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசுக்கு ஒரு நிலையான - தெளிவான கொள்கை இல்லை' என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை!''

``உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா பாதிப்பு, வல்லரசு நாடுகளையே திணறடித்து வருகிறதுதானே?''

``திணறடிப்பது குறித்தே நாங்கள் பேசவில்லையே... திட்டமிடப்படாமல் செயல்படுகிறது இந்த அரசு என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். அவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளான சீனா, எப்படி வெளியே வந்தது? தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எந்தவித திணறலும் இல்லாமல் தற்காத்துக்கொண்டனவே...! அன்றாடம் கூலியை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் 20 கிலோ அரிசியும் மட்டுமே போதுமானதா? இந்த உதவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுமொத்தத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்? ஆக, தெளிவான திட்டமிடல் எதுவும் இல்லாத மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``அரசுக்கு வருவாய் அளிக்கக்கூடிய நிதி ஆதாரங்கள் அனைத்தும் இந்த ஊரடங்கினால் தடைபட்டிருக்கும் சூழலில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்திருக்கும் நடவடிக்கையைக்கூட கண்டிக்கிறீர்களே ஏன்?''

``இதுவரை மத்திய அரசு செய்திருக்கும் முட்டாள்தனங்களிலேயே கிரீடம் வைக்கிற அளவுக்கான முட்டாள்தனம் இதுதான். இன்றைய பொருளாதாரச் சூழல் என்பதே மக்களிடையே பணப்புழக்கம் இல்லை என்பதுதான். இந்த நேரத்தில், பொருளாதாரச் சீர்திருத்தம் செய்துகொண்டிருக்கக் கூடாது. அதாவது வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது ஒட்டடை அடித்துக்கொண்டிருக்கக் கூடாது; தண்ணீர் ஊற்றி முதலில் தீயை அணைக்க வேண்டும்.

புதிது புதிதாக தொழிற்சாலைகளைத் திறந்தாலும் மக்களிடையே பணப்புழக்கம் இல்லையென்றால், உற்பத்திப் பொருள்களை சந்தையில் வாங்குவதற்கு ஆள் இருக்காது. அதனால்தான் `உடனடியாக 100 நாள் வேலை திட்டத்தைச் செயல்படுத்துங்கள்; அவர்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிடுங்கள்' என்றெல்லாம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த அரசுக்கு ஆலோசனை கூறினார். இதன்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை எப்போதும்போல் கொடுத்துவருவதோடு மேற்கொண்டும் சம்பள உயர்வு, பென்ஷன் மற்றும் 100 நாள் வேலை போன்ற சமூகத் திட்டங்கள் வழியே மக்களிடையேயான பணப்புழக்கத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும்; இதன்மூலம்தான் சரிவிலிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். மாறாக, ஏற்கெனவே கொடுத்துவந்த அகவிலைப்படியையும் நிறுத்துவதென்பது இன்னும் மோசமான நிலைக்கே இட்டுச்செல்லும். இந்த சாதாரணப் பொருளாதார அறிவுகூட இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது!''

``இந்தப் பொருளாதாரச் சூழலில், `கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துபோனவர் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என்ற அனைத்துக்கட்சிக் கூட்டத் தீர்மானமெல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?''

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி
அரியவகை புற்றுநோய், 6 கீமோ, வாழ்வதற்கான சிறிய வாய்ப்பு... புற்றிநோயிலிருந்து மீண்ட நடிகர் இர்ஃபான்!

``அன்றைய தினம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதுவும் ஒன்று! அப்படியொரு கருத்தோட்டம் ஏற்பட்டது... எனவே, தீர்மானம் இயற்றினோம். மற்றபடி இதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது இல்லை. நாங்கள் என்ன சாசனமா வெளியிட்டிருக்கிறோம்? கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்துபோனவர்களுக்கு அரசால், எவ்வளவு நிவாரணம் கொடுக்கமுடியுமோ அதைக் கொடுத்துவிட்டுப் போங்களேன்...!''

அடுத்த கட்டுரைக்கு