Published:Updated:

“சோனியா காந்தி, ‘தற்காலிகத் தலைவர்’ என்பது ஒரு டெக்னிக்கல் வார்த்தை மட்டுமே!”

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

- சமாளிக்கிறார் கே.எஸ்.அழகிரி

“சோனியா காந்தி, ‘தற்காலிகத் தலைவர்’ என்பது ஒரு டெக்னிக்கல் வார்த்தை மட்டுமே!”

- சமாளிக்கிறார் கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

வேளாண் சட்டம் வாபஸ், பெட்ரோல் விலைக்குறைப்பு எனத் தேர்தல் அரசியலை எதிர்கொள்ளும் வியூகங்களில் முந்திச் செல்கிறது பா.ஜ.க. ஆனால், எதிர்க்கட்சி வரிசையிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ, ‘உட்கட்சிப் பிரச்னைகளிலிருந்தே மீள முடியாமல் கரைந்துகொண்டிருக்கிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்தோம்...

“தேர்தலை எதிர்கொள்ளும் உத்தியாகவே மத்திய பா.ஜ.க அரசு, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றிருக்கிறது என்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி, தேர்தலை எதிர்கொள்ள முயன்றதாகவே தெரியவில்லையே?’’

“ ‘பா.ஜ.க செயல்படுகிறது; காங்கிரஸ் கட்சி செயல்படவில்லை’ என்பது போன்ற பொய்ப் பிரசாரத்தை பா.ஜ.க வெற்றிகரமாகச் செய்துவருகிறது. அதற்கு ஊடகமும் துணை போகிறது. உதாரணமாக, சமீபத்திய மழை வெள்ளத்தின்போதுகூட பாதிக்கப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு சத்தியமூர்த்தி பவனிலேயே உணவு வழங்கினோம். அது குறித்துப் பெரிதாக எந்தப் பத்திரிகைச் செய்தியும் இல்லை. ஆனால், அதேநாளில், தமிழக பா.ஜ.க-வினர் தண்ணீரே இல்லாத சாலையில் படகு ஓட்டிச் சென்றதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. அகில இந்திய அளவில், எங்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டிருக்கும் பணிகளில், நிர்வாகிகள் அனைவரும் திறம்படச் செயல்பட்டுவருகிறார்கள். எனவே, தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும் தயாராகத்தான் இருக்கிறது!’’

“ஹத்ராஸ் சம்பவத்தின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறை மிக மோசமாக நடத்தியபோதும்கூட, காங்கிரஸ் கட்சியில் எந்தவிதச் சலனமும் இல்லையே?’’

“பிரியங்கா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக உ.பி காவல்துறை செய்த அராஜகங்களுக்கு எதிராக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் உங்கள் கவனத்துக்கு வரவில்லை. மாறாக, ‘பஸ்களைத் தீவைத்துக் கொளுத்துவது, கடைகளை அடித்து நொறுக்குவது, ஆட்டோவை ஓட விடாமல் தடுப்பது என வன்முறை நிகழ்த்தினால் மட்டுமே அது வெற்றிகரமான போராட்டம்’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது தவறு.’’

“ ‘பா.ஜ.க-வின் பலம் என்னவென்பதை காங்கிரஸ் கட்சி இன்னமும் புரிந்துகொள்ளவில்லை’ என்று அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சொல்கிறாரே?’’

“பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக வர விரும்பினார். அதற்காகத் தலைவர்களையும் அணுகினார். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைமை அவரை அரசியல் ஆலோசகராக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, காங்கிரஸ்மீது அவருக்கிருக்கும் வருத்தத்தை, இது போன்று சாபத்தை ஏவிவிட்டுவருகிறார். பிரசாந்த் கிஷோரின் இந்தச் சாபத்தை மட்டுமே வைத்து ‘100 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று சொல்வது அறியாமை!’’

“சோனியா காந்தி, ‘தற்காலிகத் தலைவர்’ என்பது ஒரு டெக்னிக்கல் வார்த்தை மட்டுமே!”

“ ‘காங்கிரஸ் கட்சியைத் திறம்பட வழிநடத்திச் செல்வதற்கே நிலையான தலைவர் இல்லை’ என்று கட்சியின் மூத்த தலைவர்களே குமுறிவருகின்றனர்தானே?’’

“காங்கிரஸ் கட்சி விதிகளின்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூடுகிறபோதுதான் சட்டபூர்வமாக காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். சோனியா காந்தி, ‘தற்காலிகத் தலைவர்’ என்பது ஒரு டெக்னிக்கல் வார்த்தை மட்டுமே. மற்றபடி சோனியா காந்தி இருக்கிறவரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்தான். இந்த உண்மைகள் கட்சியிலுள்ள தலைவர்கள் அனைவருக்குமே தெரியும். அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்திலேயே ‘அனைவரும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளைச் சொல்லலாம். ஊடகம் வழியே எந்தக் கருத்தையும் சொல்ல வேண்டாம்’ என சோனியா காந்தி தெரிவித்துவிட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.’’

“தமிழக ஆளுநர், ‘அதிகார வரம்பை மீறுகிறார்’ என்கிறது தமிழக காங்கிரஸ். தமிழக அரசோ, ‘இது இயல்பான நடைமுறைதான்’ என்கிறது. இரண்டில் எது உண்மை?’’

“தி.மு.க ஒரு கருத்து சொல்கிறது, அ.தி.மு.க ஒரு கருத்து சொல்கிறது என்பதற்காக, காங்கிரஸ் கட்சி தன் கருத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. ஓர் ஆளுநர், மாநில அரசின் நடைமுறைகளை முதலமைச்சர் அல்லது தலைமைச் செயலாளரோடு பேசித் தெரிந்துகொள்ளலாம். சட்டம், ஒழுங்கு பிரச்னையை டி.ஜி.பி-யிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மாறாக, தலைமைச் செயலகத்துக்குள் ஆய்வுசெய்கிறேன் என்று ஓர் ஆளுநர் சொன்னால், அது தவறு. ஏனென்றால், ஆளுநருக்கு அந்த உரிமை இல்லை. இதைத்தான் நாங்களும் எடுத்துச் சொன்னோம்.’’

“ ‘தமிழகத் தேர்தல் வெற்றி, மாநில காங்கிரஸ் தலைமையால் வந்தது இல்லை. இது தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி’ என்று கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?’’

“என்னால்தான் வெற்றி வந்தது என்று நானே சொல்லிக்கொள்ளவில்லையே... ஒரு வெற்றி அல்லது தோல்வி என்பது தனிமனிதரால் வருவது அல்ல. எல்லாவற்றுக்குமே ஆயிரம் காரணங்கள் உண்டு. அந்த வகையில், தமிழகத் தேர்தல் வெற்றியின் பின்னணியில், ராகுல் காந்தி வருகை, மு.க.ஸ்டாலின் பிரசாரம், தி.மு.க - காங்கிரஸ் என இந்த இரண்டு இயக்கங்களினுடைய கொள்கை, எழுச்சி எனப் பல காரணங்கள் இருக்கின்றன.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism