Published:Updated:

`கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க; நாங்க விட மாட்டோம்!'- கொந்தளிக்கும் கி.வீரமணி

கி.வீரமணி
கி.வீரமணி

ஏழு துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இது தான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.

`மோடி தயாரித்த பட்ஜெட்டை நிதியமைச்சர் படித்திருக்கிறார் அவ்வளவுதான். இந்த பட்ஜெட்டை யார் தயார் செய்தது என்று கூடிய விரைவில் வெளிவரும். 7 துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை' என மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார், கி.வீரமணி.

கி.வீரமணி
கி.வீரமணி

அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிக்காகவும் வந்திருந்தார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அங்கு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.``பா.ஜ.க திட்டமிட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை அசாதாரணச் சூழலில்தான் வைத்திருக்கிறார்கள். அதோடு, மாநில உரிமைகளையும் மக்களின் உரிமைகளையும் பறித்த வண்ணமாக இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, குடியுரிமைச் சட்டம் என உச்சக்கட்ட சட்டங்களைப் புகுத்தி, மக்களைப் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உலக நாடுகள் கண்டிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய யூனியன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், என்ன விலை கொடுத்ததாவது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒழிப்போம், விரட்டுவோம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் சமூக நீதியையும் காப்பாற்ற வேண்டும்.

கி.வீரமணி
கி.வீரமணி
ஏழு துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.
கி.வீரமணி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை அலட்சியப்படுத்தினால், தேர்தல் காலத்தில் கடுமையான விளைவை பா.ஜ.க சந்திக்க வேண்டியிருக்கும்.

கிராமங்களில் ஒரு பாட்டுப் பாடுவார்கள். `ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஈரும் பேனும்' என்று. அதுபோல ஒய்யாரக் கொண்டை, வெளியில் தாழம்பூ உள்ளே இருப்பது ஈரும் பேனும். இதுதான் தற்போது உள்ள மத்திய பட்ஜெட். தற்போதுள்ள மத்திய பட்ஜெட்டுக்கு யாரும் கை கொடுக்கவில்லை என்றால், திருவள்ளுவர் கைகொடுப்பாரா அல்லது ஏதாவது தமிழ் வேஷம் போடலாமா என்று நினைக்கிறார்கள். இந்த ஒப்பனை விரைவில் கலையும். அடித்தளமில்லாத ஒரு பொருளாதாரக் கொள்கையை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலைவாய்ப்புகூட புதிதாக ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் பிரதமர் சுற்றினாலும் போதிய முதலீடுகள் இங்கு வந்ததாகவும் இல்லை.

புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் தெரியவில்லை. இதுவரை 7 துறைகளில் மூன்றரைக்கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. அதுமட்டுமல்லாமல், இப்போது பல துறைகளை தனியாரிடம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். விதை நெல்லை எடுத்து விருந்து வைத்ததுபோல வந்திருக்கிறது. விவசாயிகள் வேதனை இன்றளவும் குறையவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலையின்மை என்பது படமெடுத்து ஆடுகிறது. எந்தப் பிரச்னைக்கும் அடிப்படையில் தீர்வு கொடுக்காமல் இருக்கிறது இந்த பட்ஜெட்.

கி.வீரமணி
கி.வீரமணி

இதைத் தமிழக அரசு பாராட்டிக்கொண்டிருக்கிறது. அதுதான் வேதனையாக இருக்கிறது. புதிய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பிரதமர் ஒரு கூட்டம் கூட்டினார். நிதியமைச்சர் இல்லாமல் அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. நிதியமைச்சருக்கே தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகியிருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மோடி தயார் செய்த அறிக்கையை நிதியமைச்சர் படித்திருக்கிறார், அவ்வளவுதான். இந்த பட்ஜெட்டை யார் தயாரித்தது என்று பின்னால் தெரியவரும்'' என்றார். மேலும், ``கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு நாங்கள் விட மாட்டோம்'' என்று ஆவேசமாகப் பேசினார் கி.வீரமணி.

அடுத்த கட்டுரைக்கு