அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கட்சிப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு... காங்கிரஸின் சமூகநீதி அஸ்திரம் எடுபடுமா?

காங்கிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கிரஸ்

தனித்தொகுதிகளைக் குறிவைத்து காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் யுத்திகள் பா.ஜ.க-வின் நுண் அரசியலை (Social Engineering) ஒத்ததாகவே இருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன்.

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் மாநாடுகளில் தொடர்ந்து ஆறு முறை தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப்போனார் பெரியார். இதனால் 1925-ல் அவர் அந்தக் கட்சியிலிருந்தே விலகினார். இப்போது கட்சிப் பதவிகளில் பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள், இளைஞர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க முடிவெடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்காக ராய்பூர் மாநாடு, கட்சி விதிகளில் 85 திருத்தங்களைச் செய்திருக்கிறது.

கூடவே, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க ரோஹித் வெமுலா பெயரில் புதிய சட்டம் கொண்டுவருவது, விட்டுக்கொடுத்து அகில இந்திய அளவில் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடம் தனக்கிருக்கும் இடைவெளியைக் குறைக்கும் காங்கிரஸின் முயற்சி பலிக்குமா?

காங்கிரஸ்
காங்கிரஸ்

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், “காலம் காலமாக காங்கிரஸ் அபிமானிகளாக இருந்த பட்டியல், பழங்குடி, சிறுபான்மையின சமூக மக்களின் வாக்குகளைக்கூட காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு தேர்தல்களில் இழந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 131 தனித்தொகுதிகளில், வெறும் 10 தொகுதிகளில்தான் காங்கிரஸ் வென்றது. எனவே, கட்சி தோல்வியுற்ற 121 தனித்தொகுதிகளில் 56 தொகுதிகளைக் குறிவைத்து சிறப்புத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திவருகிறோம். சிறுபான்மையினர், பழங்குடியினர், பட்டியல் சமூகத்தினர் மத்தியில் இருக்கும் பா.ஜ.க-மீதான அதிருப்தியைப் பரவலாக்கி, அவர்களை மீண்டும் காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். ‘தலைமைத்துவ மேம்பாட்டுப் பணி’ என்று பெயரிடப்பட்ட அந்தத் திட்டத்தின்படி, உள்ளூர் அளவில் இருக்கும் பழங்குடி மற்றும் பட்டியல் சமூகத் தலைவர்களைக் கண்டறிந்து அவர்களை காங்கிரஸில் இணைத்து, அரசியல் பயிற்சி அளித்துவருகிறோம். சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைப் பொறுத்து, வரும் தேர்தலில் வாய்ப்பளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள், நடப்பு நிலவரம் குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது” என்றார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

“தனித்தொகுதிகளைக் குறிவைத்து காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் யுத்திகள் பா.ஜ.க-வின் நுண் அரசியலை (Social Engineering) ஒத்ததாகவே இருக்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மாறாமல் இருந்ததாலேயே காங்கிரஸ் கட்சி, மக்களைவிட்டும், தொண்டர்களைவிட்டும் நீண்ட தூரம் விலகிச் சென்றது. அதற்கான பலனையும் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அனுபவித்துவருகிறது. அதேநேரத்தில் பாரத் ஜோடோ யாத்திரை, ராய்பூர் மாநாடு போன்றவை பெரியண்ணன் மனப்பான்மையிலிருந்து காங்கிரஸ் வெளிவருவதற்கான அறிகுறிகளாகவே தெரிகின்றன. கட்சிப் பொறுப்புக்கு இட ஒதுக்கீடு என்பதை அகில இந்திய அளவில் புதிய விஷயமாகப் பார்க்கிறேன். புது ரத்தம் பாய்ச்சும் எந்தக் கட்சியும் பொலிவுபெறும். பார்த்துப் பார்த்து தேர்தல் களத்தை அணுகும் பா.ஜ.க-வைப் பார்த்து காங்கிரஸும் அப்படிச் செய்யத் தொடங்கியிருக்கிறது. இது நல்ல மாற்றம். தேர்தலிலும் பலன் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்” என்றார்.

லட்சுமணன், ஜோதிமணி
லட்சுமணன், ஜோதிமணி

‘பெரியார் காட்டிய பாதைக்கு காங்கிரஸ் வந்திருக்கிறதா அல்லது பா.ஜ.க-வைப் பார்த்து காப்பியடிக்கிறதா?’ என்று கரூர் எம்.பி ஜோதிமணியிடம் கேட்டோம். “நாங்கள் யாரையும் காப்பியடிக்கவில்லை. காங்கிரஸின் தொடர் தோல்விகளுக்குக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் கட்டமைப்புரீதியான தொய்வும், முக்கியக் காரணம் எனக் கருதுகிறோம். அதைச் சரிசெய்ய அனைத்துச் சமூகங்களிலிருந்தும் காங்கிரஸுக்கு தலைவர்களை உருவாக்கவேண்டியது அவசியம். Leadership Development Mission திட்டத்தை நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். சமீபத்தில் நடந்த பஞ்சாப், தெலங்கானா தேர்தல்களில் பரீட்சார்த்த முறையில் அதைப் பின்பற்றினோம். நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதையே இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் செயல்படுத்தத் தொடங்கியிருக் கிறோம்” என்றார்.

137 வயது காங்கிரஸிடம் அசைவு தெரிகிறது. ராகுலின் வேகத்துக்கு அது ஈடுகொடுக்கிறதா என்று பார்ப்போம்!