Published:Updated:

`உங்ககிட்ட எந்தப் பிரச்னைக்கும் வரமாட்டோம்.. வாழவிடுங்க!’ -கதறும் காடுவெட்டி குருவின் தாய்

காடுவெட்டி குருவின் தாய்
காடுவெட்டி குருவின் தாய்

கட்சிக்காக உழைத்த என் மகனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலைமையா? வன்னியர் சங்கத்துக்காக போராடிய என் மகனின், குடும்பமே இன்று நடுத்தெருவில் நிற்கிறது.

`பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினரின் தூண்டுதலின் பெயரில்தான் என்னோட மூணு பேரன்களையும் அரிவாளால் வெட்ட வந்திருக்கிறார்கள். வன்னியர் சங்கத்திற்காகப் போராடிய காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கா இந்த நிலைமை... உங்களிடம் எந்த வம்பு தும்புக்கும் வரமாட்டோம். எங்க குடும்பத்தை நிம்மதியாக வாழவிடுங்க” என காடுவெட்டி குருவின் தாய் கண்ணீர் மல்க கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

மதன், கனலரசன்
மதன், கனலரசன்

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு மாத காலம் சிகிச்சைக்குப் பிறகு, காடுவெட்டி குரு காலமானார். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இன்று வரையிலும் அவர்களது குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம், கடந்த திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதற்காகப் பல கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை. குருவின் சமாதி அமைந்துள்ள இடத்தில் அவரின் மகன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் மட்டுமே நினைவஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. ஊரடங்கை காரணம் காட்டி மற்றவர்கள் யாரும் அஞ்சலி செலுத்தக் கூடாது என தடை விதித்தது காவல்துறை.

`உங்ககிட்ட எந்தப் பிரச்னைக்கும் வரமாட்டோம்.. வாழவிடுங்க!’ -கதறும் காடுவெட்டி குருவின் தாய்

இந்த நிலையில், நேற்று இரவு குருவின் மகன் கனலரசன் ஊருக்குள் நடந்த பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காகச் சென்றபோது அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது. இதில், குருவின் மருமகனான மனோஜின் அண்ணன் மதன் என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருபது தையல்கள் போடப்பட்டன. மேலும், கனலரசன் மற்றும் மனோஜுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது மூன்று பேருமே தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ``அன்புமணி ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது” என கனலரசன் போலீஸாரிடம் புகார் கூறியுள்ளார்.

ஏற்கெனவே குருவின் குடும்பத்துக்குள் பல்வேறு சலசலப்பு நிலவி வந்த சூழலில், இன்று குருவின் தாயார் கல்யாணியம்மாள் ராமதாஸைக் கடுமையாக விமர்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

காடுவெட்டி குருவின் தாய்
காடுவெட்டி குருவின் தாய்

அந்த வீடியோவில், ``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்க. இப்போ, என் குடும்பத்தையும் அழிக்க பாக்குறாங்க. இந்த ஊர்ல உள்ள சின்னபிள்ளை, தனிவீட்டு ரவி, காமராஜ், இவங்களிடம் பணத்தைக்கொடுத்து அடிக்க வைச்சிருக்காங்க. பிரச்னை நடந்த இடத்துல என்னோட பேரனை (குருவின் மகன்) வெட்டுங்கடான்னு சொல்லிச் சொல்லி வெட்ட முயற்சி செஞ்சிருக்காங்க” என அழத்தொடங்கிறார். அழுகையைத் தேற்றிக்கொண்டு, ``இந்தக் கிராமத்தையே எங்களுக்கு எதிரா திருப்பி நிறுத்தி வச்சிருக்காங்க.

 காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு

கட்சிக்காக உழைத்த என் மகனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலைமையா? வன்னியர் சங்கத்துக்காக போராடிய என் மகனின், குடும்பமே இன்று நடுத்தெருவில் நிற்கிறது. இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா? நாங்க உங்களிடம் எந்தப் பிரச்னைக்கும் வரமாட்டோம். எங்களை நிம்மதியா வாழவிடுங்க” எனக் கண்ணீருடன் கதறும், வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரியலூர் பா.ம.க மாவட்டச் செயலாளர் ரவியிடம் பேசினோம், ``கிராமத்துல பசங்களுக்குள் நடந்த பிரச்னைய கனலரசன் தட்டிக்கேட்கச் சென்றபோது அடிதடியாக மாறியிருக்கிறது. இதில் எங்கிருந்து வந்தது பா.ம.க. அவர்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனே ராமதாஸ் மற்றும் அன்புமணியை இழுத்துப் பேசினால் மக்கள் எங்கள் மீது வெறுப்பாவார்கள் என்ற விதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பதிலளிக்க முடியாது” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு