Election bannerElection banner
Published:Updated:

`அண்ணாமலையுடன் டான்ஸ், குஷ்புவின் ஆசை, ஜெயலலிதாவுடன் தீபாவளி!' - கலா மாஸ்டர் ஷேரிங்ஸ்

அண்ணாமலையுடன் கலா
அண்ணாமலையுடன் கலா

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தபோது, ஜீப்பில் இருந்தபடியே நடனமாடியா கலா மாஸ்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்தும், பி.ஜே.பி-யில் இணைந்தது குறித்தும் அவரிடம் பேசினோம்.

சமீபத்தில் பி.ஜே.பி-யில் இணைந்த நடன இயக்குநர் கலா, அக்கட்சியின் வேட்பாளர்கள் சிலருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தபோது, ஜீப்பில் இருந்தபடியே நடனமாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்தும், பி.ஜே.பி-யில் இணைந்தது குறித்தும் கலா மாஸ்டரிடம் பேசினோம்.

குஷ்புவுடன் கலா
குஷ்புவுடன் கலா

``சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரிஞ்சதெல்லாம் டான்ஸ் மட்டும்தான். அதைத் தவிர வேறு எதைப் பத்தியும் எனக்குப் பரிச்சயம் இல்ல. டான்ஸ் மாஸ்டரா புகழ் பெற்றாலும்கூட, எனக்குப் பெரிய அடையாளம் கொடுத்தது `மானாட மயிலாட' நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சி வெற்றிகரமா ஓடிட்டு இருந்த நேரம். கலைஞர் குடும்பத்துடன் நான் நெருக்கமா இருந்ததா பேச்சு உலாவுச்சு. அப்போ போயஸ் கார்டன்லதான் என்னோட வீடு இருந்துச்சு. என்னோட அப்பா இறந்ததால 2010-ம் வருஷம் நாங்க தீபாவளி கொண்டாடல. தீபாவளி நாள்ல நானும் என்னோட தங்கை பிருந்தாவும் சாலையில நடந்து போயிட்டிருந்தோம்.

ஜெயலலிதா மேடம் வீட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு, `ஜெயலலிதா மேடம் உள்ளேதான் இருக்காங்க. பார்க்குறீங்களா?'ன்னு கேட்டாங்க. நாங்க ஆவலுடன் சம்மதம் சொல்ல, மேடம்கிட்ட அனுமதி வாங்கிட்டு எங்களை உள்ளே அனுப்பினாங்க. என்னையும் பிருந்தாவையும் வாஞ்சையுடன் கூப்பிட்டு உபசரிச்ச ஜெயலலிதா மேடம் எங்களை ஆசீர்வாதம் செய்தாங்க. `உன்னோட டான்ஸ் ஷோ நல்லா போயிட்டு இருக்குனு கேள்விப்பட்டேன். உன்னோட வளர்ச்சியைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு'ன்னு என்னை வாழ்த்தினாங்க. அவங்க பக்கத்துல இருந்த சசிகலா மேடமும் அன்புடன் பேசினாங்க.

கருணாநிதியுடன் கலா
கருணாநிதியுடன் கலா

வீட்டுப் பணியாளர்கள் பட்டாசு வெடிக்கிறதைப் பார்த்து ரசிச்ச ஜெயலலிதா மேடம், எல்லோரையும் கவனமுடன் பட்டாசு வெடிங்கன்னு ரொம்பவே அக்கறையா சொல்லிட்டே இருந்தாங்க. அவங்க கூட நானும் பிருந்தாவும் அரைமணிநேரம் உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்துல கலைஞர் டிவியில நான் வேலை செஞ்சது ஜெயலலிதா மேடத்துக்குத் தெரியும். ஆனா, அரசியல் பாகுபாடு இல்லாம என்னோட திறமைக்கு மதிப்பு கொடுத்துப் பாராட்டி பெருந்தன்மையுடன் நடந்துகிட்டாங்க. அதேபோல கலைஞர் ஐயாவும் மக மாதிரி என்மேல அன்பு காட்டினது தனிக்கதை. ஜெயலலிதா மேடத்திடமும், கலைஞர் ஐயாகிட்டயும் எனக்கு நல்ல மதிப்பு இருந்தப்பவே அ.தி.மு.க, தி.மு.க-வுல சேரவும் எனக்கு அழைப்புகள் வந்துச்சு. அப்போ அரசியல் கட்சியில சேரும் ஆர்வமெல்லாம் எனக்கு இல்ல.

இந்த நிலையில, சில வருஷத்துக்கு முன்னாடி டி.டி.வி.தினகரன் சார் தனியா கட்சி தொடங்கினாரு. அவர்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சு. அவர் கட்சிக்காகப் பிரசாரம் செய்யச் சொல்லிக் கேட்டார். நானும் ஒத்துகிட்டு, சில நாள்கள் பிரசாரமும் செஞ்சேன். அப்புறம் அரசியல்ல பெரிசா ஆர்வம் இல்லாமதான் இருந்தேன். சில மாசத்துக்கு முன்னாடி, விமான பயணத்துல வானதி சீனிவாசன் மேடத்தைப் பார்த்தேன். `நீங்க பி.ஜே.பி-யில் இணைஞ்சு வேலை செஞ்சா நல்லா இருக்குமே'னு கேட்டாங்க.

வானதியுடன் கலா
வானதியுடன் கலா

உழைப்பால பெரிய உயரத்தைத் தொட்ட மோடி சார் மேல எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. அந்தக் கட்சியில எல்லோருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதனாலதான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பி.ஜே.பி-யில் சேர முடிவெடுத்தேன். சில மாசத்துக்கு முன்னாடி பி.ஜே.பி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சார் மதுரை வந்திருந்தார். அவர் முன்னிலையிலதான் பி.ஜே.பி-யில இணைஞ்சேன். இந்தக் கட்சியில எனக்கு உரிய மதிப்பு கிடைக்குது" என்று சிரித்தபடியே கூறும் கலா, தேர்தல் பிரசார வைரல் வீடியோ குறித்துப் பேசினார்.

``வானதி சீனிவாசன் மேடத்துடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவங்களுக்காக கோவை தெற்குத் தொகுதியில அஞ்சு நாள்கள் பிரசாரம் செஞ்சேன். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை என்னோட தம்பி மாதிரி. அவருக்காக அரவக்குறிச்சி தொகுதியில குக்கிராமங்கள் பலவற்றிலும் பிரசாரம் செஞ்சேன். நான் பிரபலமான நடிகையில்ல. ஆனாலும், `மானாட மயிலாட' நிகழ்ச்சி கொடுத்த ரீச்சுல, கிராமத்து மக்கள் என்னை அடையாளம் கண்டு ரொம்பவே வரவேற்பு கொடுத்தாங்க. `எங்க கூட வந்து டான்ஸ் ஆடுங்க'ன்னு மக்கள் கேட்டாங்க. எங்களோட பிரசார பாடல் ஒலிக்க, ஜீப்ல இருந்தபடியே டான்ஸ் ஆடினேன். அண்ணாமலையையும் டான்ஸ் ஆட ஊக்கப்படுத்தினேன்.

ஒருகட்டத்துல மக்களோட ஆரவாரம் அதிகரிக்கவே, ஜீப்ல இருந்து கீழ இறங்கியும் டான்ஸ் ஆடினேன். மக்கள் பலரும் என்னுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தாங்க. அந்த வீடியோதான் ஃபேஸ்புக்ல வைரலாகியிருக்கு. அது நல்ல முறையில வைரலாக்கபட்டிருக்கா அல்லது கலாய்ச்சு பகிரப்பட்டிருக்கான்னு எனக்குத் தெரியல. ஆனா, எப்படி இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எனக்குத் தெரிஞ்ச டான்ஸ் மூலமா, எந்த வகையில மக்கள் என்னை ஏத்துக்கிட்டாலும் சந்தோஷம்தான்.

குறிப்பா, என்னோட உடன்பிறவா தங்கை குஷ்பு முதல் முறையா தேர்தல்ல போட்டியிடுறா. அவளுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில பிரசாரம் செஞ்சேன். என்னோட தங்கச்சிக்காக பிரசாரம் செஞ்சது ஸ்பெஷல் சந்தோஷம். அவ ஜெயிச்சா, அவளைவிடவும் அவ குடும்பத்தினரைவிடவும் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.

குஷ்புவுடன் கலா
குஷ்புவுடன் கலா
`கு.க.செல்வத்தின் வாய்ப்பை நான் பறிச்சேனா?' - குஷ்பு சொல்லும் லாஜிக்

அரசியல்ல மக்களுக்கு உண்மையாவும் நேர்மையாவும் சேவை செய்யணும்னு அவளுக்குப் பெரிய ஆசை உண்டு. ஆனா, அதுக்கான வாய்ப்புகள் அவளுக்கு இதுக்கு முன்பு இருந்த இடங்கள்ல கிடைக்கல. இப்போ பி.ஜே.பி-யில ரொம்பவே நிறைவுடன் வேலை செய்றா. குஷ்பு ஜெயிச்சு மக்கள் பிரதிநிதியானா ரொம்பவே நல்லா இருக்கும். அது நடக்கும்னு அவளும் நானும் ரொம்பவே நம்புறோம். மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பைத் தெரிஞ்சுக்க ஆவலுடன் இருக்கோம்" என்று முடித்தார் கலா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு