Published:Updated:

`அவரும் சீக்கிரம் ப்ராப்பர் கவரேஜுக்கு வந்துடுவார்' - கள்ளக்குறிச்சி பிரபுவை எதிர்நோக்கும் விஜயபாஸ்கர்!

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசாபதி தற்போது அ.தி.மு.க-வில் இணைந்தது போல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விரைவில் அ.தி.மு.க-வில் இணைவார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டையில் நகராட்சி சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்மா பூங்கா, பொதுமக்கள் வசதிக்காக மினி தண்ணீர் டேங்க் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``அ.ம.மு.க-விலிருந்து விலகி தற்போது மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்துள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சிறிது காலம் அவுட் ஆஃப் கவரேஜில் இருந்தார். தற்போதுதான் அவர் ப்ராப்பர் கவரேஜுக்கு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் அ.ம.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வர உள்ளனர். குறிப்பாக, அதில் எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி பிரபுவும் அ.தி.மு.கவில் விரைவில் இணைய உள்ளார்.

கள்ளக்குறிச்சி பிரபு
கள்ளக்குறிச்சி பிரபு
vikatan

பட்ஜெட் மானியக் கோரிக்கையின்போது சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வளர்ந்த நாடுகளுக்கு இணையான புதிய அறிவிப்புகள் வெளியாகும். நிதி ஆயோக் தவறான புள்ளி விவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, சுகாதாரத்துறை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை அனைத்து செக்டாரிலும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. உலக வங்கி தமிழக சுகாதாரத் துறைக்கு 2,784 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜப்பான் பைக்கா நிறுவனம் ஆயிரத்து 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறையில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. 10 சதவிகித மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்" என்றார்.