Published:Updated:

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.க-வில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

``தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.க-வில் நான் இணைந்தேன்’’ என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு...

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலகிய, அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவந்த அவர், அ.தி.மு.க-வில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.

``தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.க-வில் நான் இணைந்தேன்’’ என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு...

முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில்
முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில்

``தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில், 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி, உங்களுக்கு நல்லாட்சியா?''

``ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. விசாரணை கமிஷனும் விசாரித்துவருகிறது. பெருந்துறையில் விவசாயிகளை கருணாநிதி அரசு சுட்டுக் கொன்றது. ஆனால், அது குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரித்து நீதி வழங்க மறுத்தால்தான் அது அரச பயங்கரவாதம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடுச் சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.''

``காங்கிரஸ் இனத்துக்கு எதிரி, பா.ஜ.க மனிதகுலத்துக்கு எதிரி எனப் பேசிவந்த நீங்கள் இன்று, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறீர்களே?''

``பா.ஜ.க-வால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை முதல்வர் நிச்சயம் தடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 7.5 விழுக்காடு மருத்துவ உள் இட ஒதுக்கீடு விவாகரத்தில் ஆளுநரை எதிர்பார்க்காமல் முதல்வர் அரசாணை பிறப்பித்ததைப்போல, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அ.தி.மு.க விட்டுக் கொடுக்காது என நம்புகிறேன்.''

``விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட நீங்கள், அவரைத் தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்திருக்கிறீர்களே..?’’

``அதே ஜெயலலிதாதான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அந்த அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், 2009-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க ஏன் அது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை... ஏன், ஈழத்தில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் என வைகோ இப்போதும் நாடாளுமன்ற வளாகத்தில் பேசுகிறார். ஆனால், இப்போதும் கூட தி.மு.க அப்படிச் சொல்லவில்லையே... அதனால், ஜெயலலிதாவின் புலிகள் குறித்த நிலைப்பாட்டை கால வரிசையில் பார்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.’’

``கடந்த காலத்தில், ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி எனக் கடுமையாக விமர்சித்த உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?’’

``நீதிமன்றத் தீர்ப்பை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. அப்படியென்றால், நானும் பல நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்து இங்கே பேச முடியும். ஆனால், நான் தற்போது அவற்றைப் பற்றிப் பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். ஜெ வழக்கில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினராக எனது பார்வை வேறானது.’’

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

``தமிழ்த் தேசியம்தான் உங்களின் கொள்கை எனச் சொல்லிப் பயணித்த நீங்கள், தற்போது மீண்டும் திராவிட இயக்கத்தில் இணைந்திருப்பது பின்னடைவுதானே?’’

``தமிழ்த் தேசியத்துக்கான அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்துகிறது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இன்றும் அ.தி.மு.க அரசு ஏழு பேர் விடுதலையை ஆதரித்தேவருகிறது. பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க-வை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.''

``சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?''

``சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்வது, `சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள்’ என்பதே...’’

திருவொற்றியூரில் சீமான் முதல் ரஜினியின் `விவசாய’ தேர்தல் அறிக்கை வரை... கழுகார் அப்டேட்ஸ்

``சீமானுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?’’

``நான் அறிவுரை சொல்லிக் கேட்கும் நிலையில் அண்ணன் சீமான் இல்லை.’’

``நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த அழுத்தம், மிரட்டல்கள் காரணமாகத்தான் நீங்கள் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பதாக உங்கள் நண்பர் குகன்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே..?’’

``என் நண்பராக அவர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். எனக்கு அப்படி எந்த அழுத்தமும் வரவில்லை.’’

சீமான்
சீமான்

``வெளிநாடுகளிலிருந்து சீமானுக்கு வரும் நிதி, உங்களுக்குக் கைமாறியதால்தான் உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறதே..?’’

``அயல் நாடுகளிலிருந்து நான் பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நடு ரோட்டில் நின்று தீக்குளிக்கவும் நான் தயார்.’’

அடுத்த கட்டுரைக்கு