Published:Updated:

`கமல்ஹாசன் ஆகிய நான்... சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை!’ -கமலின் கொரோனாவுக்கு பிறகான இந்தியா

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`உலக நாடுகள் அனைத்துக்கும் முன் மாதிரியாக நம்பிக்கையின் முன்னோடியாக சிலருக்கு புரியும்படி சொல்வதென்றால் சரியான காரணங்களுக்காக விஷ்வ - குருவாக மாறுவோம்’ - கமல்ஹாசன்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படாத சில பகுதிகளில் ஏப்ரல் 20 (இன்று), முதல் சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் 20 -க்குப் பிறகு.. விவசாயம் முதல் ஐ.டி வரை! - கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் துறைகள் எவை?

இந்தத் தளர்வு அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தளர்வு எதற்கு எனப் பலரும் கேள்வி எழுப்பினர். தெலங்கானாவில் மே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதோடு தளர்வும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவுக்குப் பிறகான இந்தியா எப்படிச் செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தொடர்பாக பிரதமர் மோடிக்கு, கமல் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் பா.ஜ.க-வினர் சிலர் அதைக் கிண்டல் செய்யவும் தவறவில்லை.

மோடி-கமல்
மோடி-கமல்

இந்த நிலையில், இன்று கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவை புனரமைப்பது தொடர்பாக விரிவாக தனது பார்வையை தெரிவித்துள்ளார் கமல். ``இரண்டாம் உலகப் போருக்குப்பின் மனித இனத்துக்கு வந்திருக்கும் இந்தப் பேராபத்தை எதிர்கொள்ள நம்மை ஆள்பவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள், எப்படி கையாளப் போகிறீர்கள் என்ற கேள்விகளுடன் நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கான வரவேற்புக்கு நன்றி” என்ற கமல், ``நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா எனக் கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அந்த அதிகாரத்தை வழங்கியவர்கள் நாம். நமது கடமையை தொடர்ந்து செய்வோம்” என்றார்.

``நிலைமையைக் கையாண்டவிதத்தைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும், கட்சி பேதங்கள் விடுத்து அனைத்து மாநில அரசுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், மத்திய அரசுடன் கைக்கோத்தும் செயல்படவைத்து, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இந்த ஆரோக்கியமான பழக்கம், கொரோனா பாதிப்புக்கு பின்னரும் தொடர்ந்து தண்ணீர்ப் பங்கீடு, புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு, கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனவெறி, சுகாதாரப் பிரச்னைகள் ஆகிய நீண்டகால பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவுகளை எட்ட வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவை புனரமைக்கும் திட்டத்தில் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது சுகாதாரத்துறையின் மேல்....

சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை..!

இந்தியா முழுவீச்சில் போராட்டம் நடத்தியது 50 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் சுகாதாரமில்லாததால், உயிரிழப்பவர்கள், வருடத்துக்கு 16 லட்சம் பேர். இந்த நிலையிலும் ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்புக்கான நிதி என்பது நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நிதியைவிட அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பது ரூபாய் 4,71,378 கோடிகள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%. ஆனால், நம் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்குக்கான நிதி 1 சதவிகிதத்தைச் சுற்றித்தான் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்கு 8%, பாதுகாப்புத்துறைக்கு 3.1% நிதியை ஒதுக்கிறது. நமது நாட்டில் இன்னும் பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்துக் கொள்வது வேதனையானது.

உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தைக் காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன் பின்னர்தான் பொருளாதாரமும் பாதுகாப்புத்துறையும். உடல் நலத்திலும் சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத நாடு, நமது ராணுவத்தின் வீரத்தையும் ஆற்றலையும் காட்டி போருக்குத் தயார் என்று அறைகூவுவது கொலைக் குற்றத்துக்குச் சமமாகும். தயார் நிலையில் இருக்கும் பாதுகாப்புத்துறை நாட்டுக்கு நல்லதுதான் என்றாலும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதைப் பொருட்படுத்தாது. அதனால்தான் இந்தியா பேரிடர், பெருநோய் காலத்திற்கென அதிகபடியான நிதியை தனியாக ஒதுக்கீடு செய்து முன்னேற்பாடுகளைச் செய்வது உடனடி தேவையாகிறது.

சுகாதாரம்
சுகாதாரம்

உழவுக்கு வந்தனை செய்வோம்!

காந்தி அவர்கள் சொன்னதுபோல், கிராமங்களில்தான் இந்தியாவின் உயிர் உள்ளது. கொரோனாவாலும் பொருளாதார மந்த நிலையாலும், லட்சகணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். வேலைவாய்ப்புகள் குறைந்த இந்த நிலையை மாநில அரசுகள் உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்தலாம், இந்தியாவின் புகழ்பெற்ற விவசாயம், வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில்நுட்பங்களையும் இணைக்க வேண்டிய நேரம் இது.

விவசாயம்
விவசாயம்

பசுமை புரட்சிக்குப் பின் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் விட்டிருந்த விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான நேரம் இது, பசுமைப்புரட்சிக்குப் பின் நமக்கு இப்போது தேவைப்படுவது பசுமை+ புரட்சி. அதாவது விவசாயமும் விவசாயம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தேவைப்படும் புரட்சி.

அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துவோம்!

இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் உழைக்கும் மக்களில் 80% அமைப்பு சாரா தொழிலாளர்கள். ஐரோப்பிய யூனியனின் 14%, வடக்கு அமெரிக்காவின் 20%, கிழக்கு ஆசியாவின் 26%, சீனாவின் 50-60% உடன் பார்க்கும்போது, இந்தியாவை உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் 5வது நாடாக உயர்த்தியிருக்கும் விஷயம். வேலைக்கான உத்தரவாதமோ, தொழிலாளர் நல விதிகளின் பாதுகாப்போ, ஓய்வூதியமோ, காப்பீடு திட்டமோ, விடுமுறையோ இன்றி பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் இவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒழுங்குபடுத்துதல் என்பது இன்னும் நடக்கவில்லை. இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துவது என்பதை தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்கள் முன்னேற்றத்துக்கு இதுவே வழி.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

வருமான சமத்துவமின்மையை சீர்செய்தல் மற்றும் வறுமை ஒழிப்பு!

வருமானத்தில் சமத்துவமின்மை உலகம் முழுவதும் இருக்கும் பிரச்னைதான் என்றாலும், அதன் கொடிய வேர்கள் நம் நாட்டில் ஆழமாக ஊன்றி இருக்கிறது. புள்ளி விவரங்களை நம்பவேண்டுமென்றால், நம் நாட்டின் பொருளாதாரத்தில் 77% சொத்துகள், 10% மக்களின் கையில் உள்ளது. இந்த சமத்துவமின்மை சரி செய்யப்பட வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய சவால், வறுமைதான் என்பதை கொரோனா மீண்டும் உறுதி செய்திருக்கிறது, பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள், ஆனால் பட்டினியால் உயிரிழக்க மட்டர்கள். நிவாரண உதவி என்பது நடந்த தவறுகளை ஈடுகட்டும் முயற்சிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருபுறம் மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் கொரோனா வைரஸ். மறுபுறம் இந்தியாவுக்கு கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு வளர்ந்த நாடாக முன்னிற்கும் பெரும் வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது.

கமல்
கமல்

கமல்ஹாசன் ஆகிய நான், வளமான வாழ்க்கை எல்லோருக்கும் என்ற நிலைபாடுடன் தனிமனிதனின் சுகாதார மற்றும் பொருளதார அடிப்படைகளைத் தீர்த்து வைக்கும் புரட்சிகரமான திட்டத்திடன் எனது சொந்த மாநிலமான தமிழகத்தைப் புனரமைக்க உறுதி கொள்கிறேன். வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டுக் கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும் நேரம் இது. உலக நாடுகள் அனைத்துக்கும் முன் மாதிரியாக நம்பிக்கையின் முன்னோடியாக சிலருக்குப் புரியும்படி சொல்வதென்றால் சரியான காரணங்களுக்காக விஷ்வ - குருவாக மாறுவோம்” என்றார்

கமலின் கொரோனாவுக்குப் பிறகான இந்தியா குறித்து வாசகர்களான நீங்கள் உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள் மக்களே....!
அடுத்த கட்டுரைக்கு