Election bannerElection banner
Published:Updated:

கமல்ஹாசன்: 2019 கொடுத்த துணிச்சல்! - கடைசி நேரத்தில் கைநழுவிய வெற்றி! #TNelections2021

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதுமே மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்தது. இந்த துணிச்சலில்தான், இந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார் கமல்.

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா என்பதே கேள்விக்குறியாகத்தான் இருந்தது. அப்படியே போட்டியிட்டாலும் மயிலாப்பூர் தொகுதி அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமான ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது. கூடவே கமல்ஹாசனை எதிர்த்து, பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் வானதி சீனிவாசன் இத்தொகுதியில் போட்டியிட்டதும் தமிழகம் தாண்டிய கவனத்தை ஈர்த்தது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கப்பட்டது. ஓராண்டு கழித்து வந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், நகர்ப்புறங்களில் கிடைத்த கணிசமான வாக்குகள் அக்கட்சிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக கோவை தொகுதியில் 11.60 சதவீத வாக்குகளையும் பெற்றது மக்கள் நீதி மய்யம். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார்.

கமல்
கமல்

கொங்கு மண்டலம் முழுவதுமே மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்தது. இந்த துணிச்சலில்தான், இந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார் கமல். எதிர்பார்த்தது போன்றே படித்தவர்கள், திமுக அதிமுகவுக்கு மாற்றான வேறு ஒரு கட்சி வேண்டும் என்ற நினைப்பில் உள்ள வாக்காளர்கள், இள வயது வாக்காளர்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் கமலுக்கு வரவேற்பு காணப்பட்டது. மேலும் முதல்வர் வேட்பாளராகவும் கமல்களமிறங்கியதால், அதிமுக அதிருப்தி வாக்குகளை இம்முறை கமல்ஹாசன் அறுவடை செய்து விடுவார் எனச் சொல்லப்பட்டது. குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அதிகம் இல்லாமல் வட இந்தியர்கள், சிறுபான்மை இன மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கும் பகுதி என்பதும் கமலுக்கான ப்ளஸ் பாயின்ட்டாகவே பார்க்கப்பட்டது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அம்மன் அர்ச்சுனன் 59,788 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42,369 வாக்குகளும் பெற்றனர். இந்த முறையும் இத்தொகுதியில் திமுக போட்டியிடாத நிலையில், கமல்ஹாசனுக்கும் வானதி சீனிவாசனுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி காணப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அதே சமயம் தொகுதி தங்கள் கையை விட்டு, கூட்டணி கட்சியான பாஜகவுக்குப் போனதில் அப்செட்டான அதிமுகவினர், தேர்தலில் வானதிக்குப் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. போதாக்குறைக்கு அதிமுக வாக்குகளில் அமமுக வேட்பாளரும் சேதாரத்தை ஏற்படுத்தினார். பாஜகவுக்கும் போதிய செல்வாக்கு இல்லாத நிலையில், கமல்ஹாசனுக்கே சாதகம் என சொல்லப்பட்டது. ஒருவேளை திமுக இந்தத் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் கமல்ஹாசன் கடும் போட்டியை எதிர் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்ற கருத்தும் நிலவியது.

கமல்
கமல்

ஆனால் இன்று காலை தொடங்கி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது முதலில் காங்கிரஸ் வேட்பாளரான மயூரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அதன் பிறகு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது கமலுக்கும் ஜெய குமாருக்கும் கடும் போட்டி நிலவியது . ஆனால், பிற்பகலுக்குப் பிறகு வானதி ஸ்ரீனிவாசனுக்கும் , கமலுக்கும் இடையே போட்டி நிலவியது. கடைசி சுற்று வரையிலும் இருவருக்கும் இடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போட்டி நிலவியது . இரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை சமூக வலைத்தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இறுதியில் கமல்ஹாசன் தான் போட்டியிட முதல் தேர்தலில் வானதி சீனிவாசனிடம் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு