Election bannerElection banner
Published:Updated:

கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு - திரை அரசியல் முதல் கள அரசியல் வரை!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாத்திகராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரை ``இந்துக்களுக்கு எதிரானவர் கமல்" என்று ஒரு தரப்பினரும், ``மறைமுக இந்துத்துவம்தான் கமலின் கொள்கை" என்று மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

பிறப்பும் பின்னணியும்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், 1954-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தார் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்களும், நளினி என்ற ஓர் அக்காவும் இருக்கிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

படிப்பும் கலையும்:

தொடக்கக் கல்வியை பரமக்குடியில் முடித்தவர், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பின் 1967-ம் ஆண்டு, சென்னை புரசைவாக்கத்திலுள்ள சர் எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புவரை படித்தார். மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம், சிறுவயது முதலே அவர் படிப்பைவிட, கலையின் மீதே அதீத ஆர்வம்கொண்டிருந்ததுதான். அதனால் `டி.கே.எஸ்’ என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். பின் `சிவாலயா' என்ற நடனக்குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கியவர் சில மாதங்கள் அதில் செயல்பட்டார். அதன் பின்னர் திரைப்படத்துறையில் நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து கலைப் பணியாற்றினார். நடனக் கலைஞராவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

பன்முக நாயகன்:

நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நடிகராக...

1960-ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ கமலின் முதல் திரைப்படம். தனது 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஜனாதிபதியின் கைகளால் தங்கப்பதக்கத்தைப் பெற்றார். அன்று தொடங்கி `கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படத்தில் முதல் கதாநாயகன், `அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகன், `தசாவதார’த்தில் உலகநாயகன் எனத் தொடர்ந்து இன்றுவரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம் என ஆறு மொழிகளில் சுமார் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை நான்கு தேசிய விருதுகளும், 10 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளும், 19 ஃபிலிம்ஃபேர் விருதுகளும், கேரள, ஆந்திர அரசின் விருதுகள், இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள், செவாலியே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

நடன ஆசிரியராக...

எம்.எஸ்.நடராஜன் மாஸ்டரிடம் `குச்சுப்புடி', தங்கப்பன் மாஸ்டரிடம் `பரதம்', `கதகளி’ என கற்றுத்தேர்ந்த கமல்ஹாசன், `நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் `சவாலே சமாளி’ படத்தில் சிவாஜிக்கும் `அன்புத்தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இயக்குநராக...

`ஹே ராம்’, `சாச்சி 420’, `விருமாண்டி’, `விஸ்வரூபம்’, `விஸ்வரூபம்-II’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

திரைக்கதை ஆசிரியராக...

`விக்ரம்’, `மகாநதி’, `ஆளவந்தான்’, `ஈநாடு’, `உன்னைப்போல் ஒருவன்’, `தூங்காவனம்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

தயாரிப்பாளராக...

தனது 100-வது படமான `ராஜபார்வை ’தொடங்கி, `விக்ரம்’, `தேவர் மகன்’, `குருதிப்புனல்’, `ஹே ராம்’, `விருமாண்டி’, `விஸ்வரூபம்-II’ என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பின்னணிப் பாடகராக...

`சிகப்பு ரோஜாக்கள்’, `நாயகன்’, `அவ்வை சண்முகி’, `அன்பே சிவம்’, `புதுப்பேட்டை’, `மன்மதன் அம்பு’ எனப் பல்வேறு திரைப்படங்களில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக...

விஜய் தொலைக்காட்சியில் 2017-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை நான்கு சீஸனாக வெளிவந்த `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு - ரைஸ் மில் வேலை முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை

இலக்கியவாதியாக...

1980-களில் `மய்யம்’ என்ற பத்திரிக்கையைத் தன் ரசிகர் மன்றத்தினர் மூலம் ஆரம்பித்து நடத்திவந்தார். அதேபோல் அரசியல், சினிமா, காஷ்மீர் பிரச்சனை, போதை விழிப்புணர்வு எனப் பல தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி `தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இதயம் பேசுகிறது வார இதழில் `தாயம்’ என்ற தொடர்கதையையும் ஆனந்த விகடன் இதழில் `என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரையும் எழுதியிருக்கிறார். மேலும், கவிதை எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பதிலும் அதிக ஈடுபாடுகொண்டவராகவும் கமல் விளங்குகிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

திரை அரசியலும் கள அரசியலும்:

`ஹே ராமி’ல் மத அரசியல், `விருமாண்டி’யில் சாதி அரசியல், `நாயகனி’ல் இன அரசியல், `அன்பே சிவ’த்தில் வர்க்க அரசியல், `விஸ்வரூப’த்தில் உலக அரசியல் எனத் தான் இயக்கிய, தயாரித்த, கதை எழுதிய படங்களில் மறைமுகமாக `திரை’ அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், நேரடியாகக் களத்தில் இறங்கி அரசியல் செய்யத் தொடங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலிருந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் வரிசையில் கமல்ஹாசனும் நேரடி அரசியலில் குதித்தார்.

பிறந்தது புதிய கட்சி:

ட்விட்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, பேட்டிகளில் தொடர்ந்து மாநில அரசியலை விமர்சித்துவந்த கமல் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

2018-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரரைச் சந்தித்து ஆசி பெற்றார். கலாம் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்த கமலுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்கிறது என்று குற்றம்சாட்டிய கமல், ``பள்ளிக்குச் செல்வதைத்தான் தடுக்க முடியும். பாடம் படிப்பதை அல்ல!" என்று முழங்கிய கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மதுரை பொதுக்கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் சட்ட அமைச்சரும், டெல்லி சட்டமன்ற உறுப்பினருமான சோம்நாத் பாரதி, விவசாயச் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் `மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ``மக்களின் நீதியை மய்யமாகவைத்துத் தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். எந்தப் பக்கமும் ஒரேயடியாகச் சாய்ந்துவிட மாட்டோம். அதற்குத்தான் மய்யம் என்று கட்சிக்குப் பெயர்வைத்துள்ளோம் ” என்று கட்சிப் பெயருக்கான விளக்கத்தைக் கூறினார்.

பின்னர் கட்சியின் கொள்கை, கொடி அறிமுக விளக்கம், கட்சிப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து என முழுமை பெற்றது கமலின் முதல் கூட்டம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தல்:

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி ஆரம்பித்த ஓர் ஆண்டுக்காலத்திலேயே 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தனித்துக் களமிறக்கினார். போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும், பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தும், மற்ற இடங்களில் கணிசமான வாக்குகளையும் பெற்றது மக்கள் நீதி மய்யம். தனது முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் 3.7% சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த 18 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிட்டது, வெற்றிபெறவில்லை என்றாலும், தனது வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொண்டது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சட்டமன்றத் தேர்தல்:

2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் முதலிய கட்சிகளுடன் இணைந்து, பல சிறு கட்சிகளுடனும் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் முதன்முறையாகக் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்! - முழுமையான தொகுப்பு

சாதனைகளும் விமர்சனங்களும்:

தனிப்பட்ட முறையில் திரைத்துறையில் யாராலும் சாதிக்க முடியாத பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் கமல். பன்முகத் திறமைகொண்டிருக்கும் கமல், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி எண்ணற்ற பொது நலப்பணிகளைச் செய்திருக்கிறார். கமலின் நற்பணி மன்றத்தினர் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஜோடிக் கண்களை தானம் செய்திருக்கின்றனர். 2002-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் நாள், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாகப் பதிவு செய்திருக்கிறார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், `ஹ்ருதயராகம் 2010’ திட்டத்தின் தூதுவராக இருந்த கமல்ஹாசன் ஆதரவற்றோர் இல்லத்தையும் அமைத்தார். 2010-ம் ஆண்டு, சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டி வழங்கினார். 2017-ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமலின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கை என்பது பெரும்பாலானோரால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறது. மேலும், அவர் அரசியல்ரீதியிலான நடுநிலை (மய்யம்) என்ற நிலைப்பாடும் ஏனைய அரசியல்வாதிகளால் விமர்சனம் செய்யப்படுகிறது. நாத்திகராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரை ``இந்துக்களுக்கு எதிரானவர் கமல்’’ என்று ஒரு தரப்பினரும், ``மறைமுக இந்துத்துவம்தான் கமலின் கொள்கை" என்று மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு