Published:Updated:

“ஆரம்பிக்கலாங்களா?!” - ம.நீ.ம 2.0... வேகமெடுக்கும் கமல்ஹாசன்!

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

‘விக்ரம்’ படத்தில் கிடைத்த வருமானத்தில், வரி போக மீதப் பணத்தில் பெரும்பகுதியைக் கட்சி வளர்ச்சிக்காகச் செலவிடத் தலைவர் திட்டமிட்டிருக்கிறார்.

“ஆரம்பிக்கலாங்களா?!” - ம.நீ.ம 2.0... வேகமெடுக்கும் கமல்ஹாசன்!

‘விக்ரம்’ படத்தில் கிடைத்த வருமானத்தில், வரி போக மீதப் பணத்தில் பெரும்பகுதியைக் கட்சி வளர்ச்சிக்காகச் செலவிடத் தலைவர் திட்டமிட்டிருக்கிறார்.

Published:Updated:
கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமல்ஹாசன்

சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிஸியாக இருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மீண்டும் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலை மனதில்வைத்து, செயற்குழுவைக் கூட்டியவர், காலியாக இருக்கும் கட்சிப் பதவிகளை நிரப்ப உத்தரவிட்டிருக்கிறார். மாநிலம், மாவட்டம், வட்டம் என அடுத்தடுத்து நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையும் நடத்துகிறார்.

தொடர் தோல்விகள்...

மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் களம் கண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பல தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து 3-வது இடத்தையும் பிடித்தது. ஆனால், முறையான நிர்வாகிகள் நியமனம் இல்லாததாலும், மக்கள் பிரச்னைகளுக்காகக் களப் போராட்டங்களை முன்னெடுக்காததாலும், அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிருந்தே விலகியது.

பின்னர் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ம.நீ.ம., ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. 200-க்கும் அதிகமான இடங்களில் டெபாசிட்டுகளை இழந்தது. கமல்ஹாசன் மட்டும் கோவை தெற்குத் தொகுதியில் 2-வது இடத்தைப் பிடித்தார். அந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகினர். அதேபோல, 20-க்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்கள், ஏராளமான ஒன்றிய, நகர, பேரூராட்சிச் செயலாளர்கள் இடங்களும் காலியானதால், அடிமட்டமே ஆட்டம் கண்டது. அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

“ஆரம்பிக்கலாங்களா?!” - ம.நீ.ம 2.0... வேகமெடுக்கும் கமல்ஹாசன்!

புதிய உத்தரவுகள்... புதிய முழக்கம்...

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் செயற்குழுவைக் கூட்டி, 12 தீர்மானங்களைப் போட்டிருக்கிறார் கமல். அந்தச் செயற்குழுவில் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து, கமல் மிக நீண்ட உரை ஆற்றியிருக்கிறார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும் பேசியிருக்கிறார். 2024 தேர்தலுக்குத் தயாராகும் வண்ணம் ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகள் அமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல, மாணவர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர் அணி, இளைஞர் அணி, விவசாய அணி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணிகளில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு ஆறு மாதங்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்க மாநிலச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக கமலுக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ஓராண்டுக்குப் பிறகு தலைவரின் செயல்பாடு எங்களுக்கு புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் கிடைத்த வருமானத்தில், வரி போக மீதப் பணத்தில் பெரும்பகுதியைக் கட்சி வளர்ச்சிக்காகச் செலவிடத் தலைவர் திட்டமிட்டிருக்கிறார். சினிமா நடத்திக்கொண்டே இடைவெளியில் அவர் அரசியல் செய்ததால்தான், கட்சியை நினைத்தபடி வளர்க்க முடியவில்லை. இனி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக, ‘விக்ரம்’ படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்த ஒரு மாஸை, அப்படியே, அரசியலில் மடை மாற்ற எல்லா முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். அப்போதுதான் எளிய மக்களிடம் கட்சியைக் கொண்டு போக முடியும். அதேபோல, நகர்ப்புற மக்களைக் கவர ஐடி அணியை பலப்படுத்தி, தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவிருக்கிறோம்” என்றனர்.

சி.கே.குமரவேல் - முரளி அப்பாஸ்
சி.கே.குமரவேல் - முரளி அப்பாஸ்

ம.நீ.ம பொதுச்செயலாளராக இருந்து கட்சியைவிட்டு வெளியேறிய சி.கே.குமரவேல் நம்மிடம் பேசுகையில், “பன்முகம்கொண்ட சிறந்த நடிகரான கமலை, இன்னும் சினிமாக்காரராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். தற்போதைய சுற்றுப்பயணம்கூட அரசியல்வாதியாக இருக்காது. சினிமாக்காரராகவே இருக்கும். கட்சித் தலைவர் முழு நேரமாகவும், நிர்வாகிகள் பகுதி நேரமாகவும் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், மய்யத்தில் அது தலைகீழாக நடக்கிறது. சினிமாவின் நீட்சியாகவே அரசியலை அவர் பார்க்கிறார். அதுதான் எங்களுக்குப் பிரச்னையாக இருந்தது. இதையெல்லாம் தாண்டி ம.நீ.ம திட்டம் சக்சஸானால் மகிழ்ச்சிதான்” என்றார்.

ம.நீ.ம மாநில செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, “அமைப்புரீதியாக 117 மாவட்டங்களையும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய எட்டு மண்டலங்களைக் கொண்டிருக்கிறது ம.நீ.ம. அந்த நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார் நம்மவர். எங்கள் கட்சியை நகர்ப்புறங்களில் அறியப்பட்ட அளவுக்கு கிராமங்களிலும் கொண்டு செல்ல, கிராமங்களை ஒன்றிணைத்து சுற்றுப்பயணத்தை வடிவமைக்கச் சொல்லியிருக்கிறார். அதன்படி, அரக்கோணம், தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளை ஒருங்கிணைத்து பயணத்தை வடிவமைக்கிறோம். மாவட்டத் தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் இருக்கும். எல்லா வடிவங்களிலும் அர்த்தபூர்வமான அரசியல் கட்சியாக ம.நீ.ம நிச்சயம் உருப்பெறும். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இயங்கவிருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் சில இடங்களையாவது கைப்பற்றும்” என்றார் நம்பிக்கையுடன்.

ஆரம்பிக்கட்டும்... பார்க்கலாம்!