சினிமா
Published:Updated:

முதல்வர் வேட்பாளர்கள் மூன்று பேரின் ஸ்கேன் ரிப்போர்ட்!

கமல், சீமான், தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல், சீமான், தினகரன்

- அகஸ்டஸ்

ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் களம் கண்டனர். ஸ்டாலின் முதல்வராகிவிட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு கூட்டணிகளைத் தாண்டி வேறு எவருக்கும் சட்டமன்றத்தில் நுழையும் வாய்ப்பை மக்கள் வழங்கவில்லை. சரி, சீமான், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோரின் பர்பாஃமன்ஸ் எப்படி? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைத் தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் குறித்து சீமான் நிச்சயம் பெருமைப்படலாம். சட்டமன்றத்தில் வேண்டுமானால் 18 எம்.எல்.ஏ-க்களுடன் மூன்றாவது பெரிய கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக 29,67,853 வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக நிலைத்து நிற்கிறது நா.த.க. சீமான் தான் போட்டியிட்ட திருவொற்றியூர்த் தொகுதியில் வாங்கிய வாக்குகள் 48,597. அவரது கட்சி வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வாங்கியவர் அவர்தான் என்றாலும், அவர் உட்பட யாரும் இரண்டாவது இடம்கூடப் பெற முடியவில்லை.

சில கட்சிகளைப்போல தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செல்வாக்காக இருக்காமல், தமிழகம் முழுக்கக் கணிசமான ஆதரவைப் பெற்றிருக்கிறது நா.த.க. இந்தத் தேர்தலில் பத்தாயிரத்துக்கும் மேல் நா.த.க வாக்குகள் பெற்ற தொகுதிகள் 166. இதில் 21 தொகுதிகளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருக்கின்றனர். ஆவடியில் விஜயலட்சுமியும், தூத்துக்குடியில் வேல்ராஜும் முப்பதாயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றனர்.

நா.த.க வாங்கிய வாக்குகள் யாருடைய வெற்றி வாய்ப்பை பாதித்தது, யாருக்கு இதனால் சாதகம் எனத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பலரும் கணக்குகள் போடலாம். தமிழர் நலன், மாநில உரிமைகள் என நாம் தமிழர் கட்சி இப்போது பேசும் சில விஷயங்களை இதற்குமுன்பு தொடர்ச்சியாகப் பேசிவந்தது தி.மு.க. இளம் வாக்காளர்கள் பலர் தி.மு.க பக்கம் வருவதற்கு அணை போட்டது நா.த.க.

நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களின் மனதில் எழும் கேள்வி... அடுத்தது என்ன? தனித்துப் போட்டி என்பதில் தீர்மானமாக இருக்கிறார் சீமான். ‘வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கே வாக்களிப்பது, மற்ற கட்சிகளைக் கண்டுகொள்வதில்லை’ என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் பெரும்பாலான மக்கள். இந்த இடைவெளியை நிரப்பும் சக்தி சீமானுக்கு இல்லை என்பதே உண்மை.

‘நிச்சயம் எங்கள் கட்சி தமிழகத்தில் பத்துத் தொகுதிகளில் ஜெயிக்கும்’ என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் உறுதியாகச் சொல்லிவந்தார் கமல்ஹாசன். தேர்தலுக்குப் பிறகும்கூட அப்படித்தான் நம்பினார். நாள் முழுக்க கோவைத் தெற்குத் தொகுதியில் முன்னிலையில் இருந்தாலும், கடைசி நிமிடங்களில் தோல்வியடைய நேரிட்டது அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

முதல்வர் வேட்பாளர்கள் மூன்று பேரின் ஸ்கேன் ரிப்போர்ட்!

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக தமிழகம் முழுக்க பிரசாரத்துக்குச் சுற்றிச் சுழன்று சென்றார் கமல்ஹாசன். சின்னச்சின்னக் கட்சிகளை இணைத்து ஒரு வானவில் கூட்டணி அமைத்தார். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிவந்த சரத்குமாரும், அவர் மனைவி ராதிகாவும்கூட பிரசாரத்தில் இணைந்தார்கள். ஆனாலும், பெருநகரங்களைத் தாண்டி வேறு எங்குமே கமல் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தமிழகம் முழுக்க 39 தொகுதிகளில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. இவற்றில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் தொகுதிகள் 18. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் 8. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாநகரங்களில் உள்ள தொகுதிகள் 13. இதைத் தாண்டி எங்குமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் இல்லை என்பது கசப்பான உண்மை.

முதல்வர் வேட்பாளர்கள் மூன்று பேரின் ஸ்கேன் ரிப்போர்ட்!

ம.நீ.ம இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது ஒன்பது தொகுதிகளில்! கோவைத் தெற்குத் தொகுதியில் 51,481 வாக்குகள் பெற்ற கமல்ஹாசன் இரண்டாம் இடம் பிடித்தார். ம.நீ.ம பெற்றிருக்கும் உச்சம் என்றால் இதுதான். கமல் கோவையைத் தேர்வு செய்யக் காரணமாக இருந்த மகேந்திரன், சிங்காநல்லூரில் 36,885 வாக்குகள் பெற்றார். மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசிப் புகழ்பெற்ற பத்மப்ரியா மதுரவாயல் தொகுதியில் 33,401 வாக்குகள் பெற்றார். முப்பதாயிரத்தைத் தாண்டியவர்கள் இந்த மூவர் மட்டுமே.

கமல் பெரிதும் நம்பிக்கையுடன் நிறுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பொன்ராஜ், சரத்பாபு, நடிகை பிரியா போன்றவர்களால் ஓரளவே வாக்குகள் பெற முடிந்தது. கிராமங்களிலிருந்து தொடங்கி கட்சிக் கட்டமைப்பை உருவாக்காத ஒரு கட்சி, தேர்தல் அறுவடையை எதிர்பார்க்க முடியாது என்பது ம.நீ.ம உணர்த்தும் உண்மை.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கும் இன்னொருவர், டி.டி.வி.தினகரன். வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்று கணித்து, கோவில்பட்டியில் போய் நின்றார் அவர். ஆனால், கிடைத்தது 12,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்விதான். இரண்டாம் இடம் பிடிக்க முடிந்தது என்பதே அவருக்கான ஆறுதல்.

முதல்வர் வேட்பாளர்கள் மூன்று பேரின் ஸ்கேன் ரிப்போர்ட்!

தினகரனின் அ.ம.மு.க பத்தாயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்ற தொகுதிகள் 30. அவற்றில் பெரும்பாலான தொகுதிகள் தென் மாவட்டங்களிலும் தஞ்சை டெல்டா மாவட்டங்களிலுமே இருக்கின்றன. வட மாவட்டங்களிலும் கொங்குப் பிரதேசத்திலும் அந்தக் கட்சி ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. தினகரனைப் போலவே உசிலம்பட்டியில் மகேந்திரன் 55,491 வாக்குகள் வாங்கினார். ஆனாலும், அவருக்குக் கிடைத்தது மூன்றாம் இடம்தான். காரைக்குடியில் தேர்போகி பாண்டி, மன்னார்குடியில் எஸ்.காமராஜ், கடையநல்லூரில் அய்யாதுரை பாண்டியன், மேலூரில் செல்வராஜ், நாங்குநேரியில் பரமசிவ ஐயப்பன், சாத்தூரில் ராஜவர்மன், திருவையாற்றில் கார்த்தி, திருவாடானையில் ஆனந்த் எனச் சிலர் 30,000 வாக்குகளைத் தாண்டி வாங்கினர். இதில் அவரவரின் சொந்தச் செல்வாக்கும் சேர்ந்திருக்கிறது என்பதே உண்மை.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நடந்த இடைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் அபாரமாக வென்றார் தினகரன். அ.ம.மு.க-வுக்குக் கிடைத்த முதல் வெற்றி அது. அந்தத் தொகுதியில் இம்முறை டாக்டர் காளிதாஸ் என்ற நல்ல வேட்பாளரை நிறுத்தினார் தினகரன். அவர் பெற்றது வெறும் 1,852 வாக்குகள். அ.தி.மு.க உள்கட்சி மோதலில் தினகரன் பக்கம் நின்று எம்.எல்.ஏ பதவியை 18 பேர் இழந்தனர். அவர்களில் ஒருவர்கூட சட்டமன்ற வாசலை அதன்பின் தொட முடியவில்லை. அவர்களில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மட்டுமே பாப்பிரெட்டிபட்டியில் அதிகபட்சமாகப் பதினைந்தாயிரத்துக்கும் மேலான வாக்குகள் வாங்கினார். மற்றவர்களால் அதைக்கூடத் தொட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

முன்னாள் அமைச்சர் சண்முகவேலு இப்போதும் தினகரன் பக்கம் நிற்கும் விசுவாசி. மடத்துக்குளம் தொகுதியில் அவர் வாங்கியது வெறும் 6,515 வாக்குகள். முன்னாள் அமைச்சர் செந்தமிழன் சைதாப்பேட்டைத் தொகுதியில் நின்றார். மாவட்டச் செயலாளராக இருந்து, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற விசுவாசியான அவருக்குக் கிடைத்தது 2,112 வாக்குகள். சீமான் கட்சியும் கமல்ஹாசன் கட்சியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கிய பல தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் தடுமாறினர்.

முதல்வர் வேட்பாளர்கள் மூன்று பேரின் ஸ்கேன் ரிப்போர்ட்!

கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க தரவில்லை எனக் கூட்டணியை முறித்துக்கொண்டு தினகரனுடன் வந்து கடைசி நிமிடத்தில் கைகோத்தது தே.மு.தி.க. பேசவே முடியாத நிலையில் இருந்தாலும், தன் முகத்தைக் காட்டிக் கையசைத்தபடி கட்சிக்காக பிரசாரம் செய்தார் விஜயகாந்த். தேர்தலில் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.

விஜயகாந்த் முதன்முதலில் வென்ற விருத்தாசலம் தொகுதியைத் தேடிச் சென்று நின்றார், அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த். அங்கு அவர் வாங்கிய 25,908 வாக்குகள்தான், அந்தக் கட்சி வேட்பாளர் ஒருவர் வாங்கிய அதிக வாக்குகள். அவரையும் சேர்த்து அந்தக் கட்சி சார்பில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர்கள் மூன்றே பேர். திருக்கோவிலூரில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேசன் 13,997 வாக்குகள் வாங்கினார். மணப்பாறையில் கிருஷ்ணகோபால் 10,719 வாக்குகள் வாங்கினார்.

விஜயகாந்த் ஏற்கெனவே ஒருமுறை ஜெயித்த தொகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ரிஷிவந்தியம். இங்கு இம்முறை கூட்டணியில் அ.ம.மு.க நின்றது. சுமார் பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சியால் வாங்க முடிந்தது. மாநிலத்திலேயே மிகப்பெரிய சோழிங்கநல்லூர்த் தொகுதியில் மற்ற கட்சிகள் கணிசமான வாக்குகள் வாங்கின. தே.மு.தி.க பெற்றது 3,838 வாக்குகள்.

தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் தே.மு.தி.க இருக்கிறது.