Published:Updated:

மூன்றாவது அணி... முந்துவது யார்?

கமல், சீமான்
பிரீமியம் ஸ்டோரி
கமல், சீமான்

பெயரளவில்கூட தங்களை மூன்றாவது அணி என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் கமல்ஹாசன்.

மூன்றாவது அணி... முந்துவது யார்?

பெயரளவில்கூட தங்களை மூன்றாவது அணி என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் கமல்ஹாசன்.

Published:Updated:
கமல், சீமான்
பிரீமியம் ஸ்டோரி
கமல், சீமான்

தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்வதில், பல கட்சிகளுக் கிடையே கடும் மல்யுத்தமே நடக்கிறது. ‘தி.மு.க - அ.தி.மு.க இரண்டுமே ஊழல் கட்சிகள்’ என்று விளாசியெடுக்கிறார் கமல். ‘மதவாதத்துக்கு எதிரான போரைத் தொடுத்திருக் கிறோம். அந்நியர் அபகரிப்பிலிருந்து மண்ணை மீட்போம்’ என்று மேடைக்கு மேடை முழங்குகிறார் சீமான். ‘அ.தி.மு.க-வை மீட்டெடுப்பது’ என்கிற பழைய பல்லவியை தினகரன் பாடினாலும், அவரும் ஒரு கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார். இதற்கிடையே, அ.தி.மு.க-வுடன் ஒட்டி உறவாடிய தே.மு.தி.க., திடீரென ‘அ.தி.மு.க-வை டெபாசிட் இழக்கவைப்போம்’ என்று வெடித்துச் சிதறுகிறது. தனித்துக் களமாடவும் அக்கட்சி தயாராகிறது. பிரதான கட்சிகளுக்கு மாற்றாகக் களமிறங்கும் மூன்றாவது அணியில், ‘முந்துவது யார், இவர்களால் யாருக்கு பாதிப்பு?’ என்பதுதான் இன்றைய அரசியலில் அனலடிக்கும் கேள்வி!

மூன்றாவது அணி... முந்துவது யார்?

ஒற்றை பிம்பம்... வலுவில்லாத கிராமப்புறக் கட்டமைப்பு... சறுக்கலில் கமல்!

பெயரளவில்கூட தங்களை மூன்றாவது அணி என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தான் கட்டமைத்திருக்கும் கூட்டணிக்கு ‘முதல் கூட்டணி’ என்று பெயரிட்டிருக்கிறார் அவர். தி.மு.க-வுடன் பிணக்கு ஏற்பட்டபோது காங்கிரஸ் கட்சியும், அ.ம.மு.க-வுடன் சீட் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டபோது எஸ்.டி.பி.ஐ கட்சியும் கூட்டணிக்காக கமலை நாடியதே, அவர் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கின்றன. இந்தத் தேர்தலில், கட்சிகள் விரும்பும் மாற்று கூட்டணியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது கமலின் முதல் வெற்றி என்றே சொல்லலாம். “நகர்ப்புறங்களில் கமல் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க-வுக்குப் பாதகமாகும். நாடாளுமன்றத் தேர்தலில் 3.8 சதவிகிதம் பெற்ற ம.நீ.ம., இம்முறை பா.ஜ.க எதிர்ப்பு அரசியல், திராவிடக் கட்சிகளை விரும்பாதவர்களின் வாக்குகள் மூலமாகத் தன் வாக்குகளை கனிசமாக அதிகப்படுத்திக்கொள்ளும். ஆனால், கட்சியின் கட்டமைப்பை கிராமப்புறங்களில் வலுப்பெறச் செய்யவில்லை என்பது கட்சிக்குச் சறுக்கல். குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றிருந்தாலும்கூட, அதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும். அதையும் நழுவவிட்டுவிட்டது ம.நீ.ம” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதே சறுக்கலைத்தான் ம.நீ.ம நிர்வாகிகளும் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

நம்மிடம் பேசிய ம.நீ.ம மூத்த நிர்வாகிகள் சிலர், “கமல் என்கிற ஒற்றை மனிதரின் பிம்பத்துக்காக வாக்குகள் திரளுமே தவிர, ஒரு கட்டமைப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதற்கு நிர்வாகிகளோ, தலைவர்களோ கட்சியில் இல்லாதது பின்னடைவுதான். ஒவ்வோர் ஊரிலும் கொடிக்கம்பமும், கிளைக் கழகங்களும் கட்சிகளுக்கு முக்கியம். ம.நீ.ம-வில் இப்படி ஒரு கட்டமைப்பு இன்னும் வலுவாகவில்லை. பரமக்குடி மைந்தனான கமல்ஹாசனே, இந்தத் தேர்தலில் ஆலந்தூரைக் குறிவைத்திருப்பது கட்சியின் கிராமப்புறக் கட்டமைப்பு வலுவில்லாததால்தான். சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்களுக்கு சீட் ஒதுக்கியிருப்பது, வரவேற்பைப் பெற்றிருந்தாலும் கட்சிக்குள் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சங்கைய்யா சொல்யூஷன்ஸ் என்கிற அமைப்புதான் கமலுக்குத் தேர்தல் ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த விஜய் டி.வி மகேந்திரன், சுரேஷ் ஐயர் ஆகியோரின் டீம் சொல்படிதான் கமல் நடந்துகொள்கிறார். வேட்பாளர் தேர்வில்கூட இவர்கள் அளித்த ஆலோசனைப்படிதான் சீட்டுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சரத்குமார், பாரிவேந்தருக்கு தலா 40 சீட் அளித்திருப்பதைத் தவிர்த்திருந்தால், ‘சொந்தமாக வேட்பாளர்களைக்கூட திரட்ட முடியவில்லையா?’ என்கிற விமர்சனத்தை கமல் உடைத்திருக்கலாம்” என்கிறார்கள்.

மூன்றாவது அணி... முந்துவது யார்?

‘அண்ணன்தான்... தலைவனில்லை’ - சீமானின் பிரச்னை சீமானே!

தமிழ்த் தேசியம், கூட்டுப்பண்ணை விவசாயம் என்பதையும் தாண்டி இளைஞர்களோடு, அரசியல் அதிகாரமில்லாத சமூகங்களை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது சீமானின் அரசியல். தன்னுடைய பிரசாரத்தின் வாசகத்தையே, ‘எளிய மக்களின் பெருங்கோபமும் பேராற்றலும்’ என்று வைத்திருக்கிறார் சீமான். சீட் விவகாரத்தில் பெண்களுக்குச் சரிசமப் பகிர்வை அளித்திருக்கும் சீமான், 12 பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தவரை வேட்பாளர்களாகக் களமிறக்கியிருக்கிறார். 16 மொழிவழிச் சிறுபான்மையினர், ஏழு மீனவர்கள், வண்ணார், குயவர், குறவர், பண்டாரம், அருந்ததியர் என அரசியல் அதிகாரமில்லாத சமூகங்களுக்கு வேட்பாளர்களாக வாய்ப்பளித்து, தனக்கென ஒரு சமூக அரசியலைக் கையிலெடுத் திருக்கிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளால் கைவிடப்பட்ட சமூகங்களைக் கையிலெடுப்பதே சீமானின் வியூகமாக இருக்கிறது. ஒன்றரைக் கோடி இளைஞர்கள், கடைநிலை, இடைநிலை சமுதாயத்தினர், பெண்கள் ஆகியோரின் வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் அடித்தள வாக்குகளாகத் திரளச் செய்வதுதான் வியூகத்தின் பின்னணி” என்றார். கிராமப்புறங்களில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வந்தாலும், தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்காதது அக்கட்சிக்கு இந்தத் தேர்தலில் சறுக்கல்தான். அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கி, பல்வேறு சமூகங்களைத் தனக்கு ஆதரவான நிலைக்கு நகர்த்தி வாக்குகளாகத் திரட்ட சீமான் முயல்கிறார். ஆனால், கடந்த காலங்களில் மொழிவாரி சிறுபான்மையினர்மீது அவர் தொடுத்த தாக்குதல்கள், சொந்தக் கட்சியினர் மீதே அவர் சீறிய விவகாரங்கள் சீமானுக்குச் சறுக்கலாக அமைந்திருக்கின்றன.

“நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, நம்ப முடியாத விஷயங்களை வாக்குறுதிகளாக அவர் சொல்வது கேட்பதற்குச் சுவையாக இருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலையில் வாக்காளர்கள் இல்லை என்பதே யதார்த்தம். சீமானை இன்னும் அண்ணனாகத்தான் கட்சிக்காரர்கள் பார்க்கிறார்களே தவிர, ஒரு தலைவனாக இன்னும் அவர்கள் ஏற்கவில்லை. அவர்களே ஏற்காதபோது, மக்கள் தன்னை தலைவனாக ஏற்க வேண்டும் என்று சீமான் எதிர்பார்ப்பது வேடிக்கை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுப் பல பஞ்சாயத்துகளில் வெற்றிபெற்றனர். இந்தத் தேர்தலில், தி.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்புள்ள இளைஞர்களின் வாக்குகளையும், அ.தி.மு.க-வுக்குச் செல்ல வாய்ப்புள்ள தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் சீமானால் பிரிக்க முடியும். இதனால், அவரது வாக்கு சதவிகிதம் ஏழாக உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர், நாம் தமிழர் கட்சியின் அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் சிலர். சீமான் ஏற வேண்டிய படிகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

மூன்றாவது அணி... முந்துவது யார்?

மாற்றுச் சமூகத்தினருக்கு இடமில்லை... திட்டமில்லாத தினகரன்!

சட்டப்படி சாத்தியமில்லாத, ‘அ.தி.மு.க-வை மீட்டெடுப்பது’ என்கிற ஒற்றை இலக்குதான் அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனின் கைவசமிருக்கிறது. ஒரு கட்சியை மீட்டெடுப்பது என்கிற இலக்கை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்குவதெல்லாம் அசாத்திய துணிச்சல்தான். எஸ்.டி.பி.ஐ., ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., மருதுசேனை, கோகுல மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சமைத்து, தனக்கென ஓர் அணியை உருவாக்கியிருக்கிறார் தினகரன். “தென் தமிழகத்திலும் டெல்டாவிலும் அ.ம.மு.க-வுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 10,000 என்ற எண்ணிக்கைக்குக் குறைவில்லாத வாக்குகள் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில், 5.1 வாக்கு சதவிகிதத்தை எட்டினோம். 21 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் மூன்றாமிடம் பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகிதத்தைத் தாண்டுவதுதான் எங்கள் இலக்கு. அ.தி.மு.க தோல்வியடைவது எங்களால்தான் இருக்க வேண்டும் என்பதில் திண்ணமாகப் பணியாற்றுகிறோம். அப்படி நடந்தால் மட்டுமே எங்களது பலம் என்னவென்பது அ.தி.மு.க தலைவர்களுக்குப் புரியும்” என்றார் அ.ம.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவர்.

சசிகலா எபிசோடால் முக்குலத்தோர் சமூகத்தினரும், சசிகலா ஆதரவாளர்களும் கொதிப்பான மனநிலையில் இருப்பது தினகரனின் வாக்குவேட்டைக்குக் களத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால், சசிகலா வெளிப்படையாக அ.ம.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிக்காததும், அதிக அளவில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அ.தி.மு.க சீட் அளித்திருப்பதும், தினகரனின் வியூகத்தில் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. மாற்று சமூகத்தினரை, இடம் தந்து அரவணைக்கும் வடிவிலான வியூகத்தை இப்போதுவரை தினகரன் முன்னெடுக்காததும் அவருக்கு மைனஸ்தான். அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் நிச்சயமாக அ.தி.மு.க-வுக்குத்தான் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும். இதையே அடிப்படையாக வைத்து, மூன்றாவது பெரிய கட்சியாக தினகரனால் அ.ம.மு.க-வை கட்டியெழுப்ப முடியுமா என்றால்... சந்தேகம்தான்!

இன்றைய சூழலில், தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று சக்தியாக மூன்று கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. மார்ச் 11-ம் தேதி இரவு வரை தனித்துப் போட்டியிடப்போவதாக தே.மு.தி.க அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் தனித்துக் களமிறங்கும் பட்சத்தில், அ.தி.மு.க-வால் ஏமாற்றப்பட்ட உணர்வில் தே.மு.தி.க-வினரும், விஜயகாந்த் மீது மதிப்புகொண்ட மொழிவாரி சிறுபான்மையினரும், அவரது ஆதரவாளர்களும் அக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடும். அப்படியும், தங்களது முதல் தேர்தல் வாக்கு சதவிகிதமான 8 சதவிகிதத்தை தே.மு.தி.க தொடுமா என்பதே பெரிய சந்தேகம்தான்.

மூன்றாவது அணி... முந்துவது யார்?

வழக்கமாகத் தேர்தல், ‘வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போவது யார்?’ என்கிற கேள்விக்கான பதிலை மையமிட்டதாகவே இருக்கும். ஆனால், இம்முறை, ‘பிரதானமான இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக, வலுவாக உருவாகும் மூன்றாவது இடம் யாருக்கு?’ என்கிற கேள்விக்கான பதிலையும் எதிர்நோக்கியதாக இருக்கிறது. மூன்று அணிகளில் முந்துவது யார் என்பதை வாக்காளர்கள்தான் தீர்மானிக்கப்போகிறார்கள். விடை, மே 2-ம் தேதி தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism