Published:Updated:

'மநீம ஆலோசனைக் கூட்டம், ராகுல் யாத்திரை' - கமலின் 2024 'பிளான்' என்ன?!

மநீம நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ராகுலின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பு என அதிரடிகாட்டத் தொடங்கியிருக்கிறார், கமல்ஹாசன். அவரின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 'பிளான்' என்ன..?

'மநீம ஆலோசனைக் கூட்டம், ராகுல் யாத்திரை' - கமலின் 2024 'பிளான்' என்ன?!

மநீம நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ராகுலின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பு என அதிரடிகாட்டத் தொடங்கியிருக்கிறார், கமல்ஹாசன். அவரின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 'பிளான்' என்ன..?

Published:Updated:

மக்கள் நீதி மய்யம்:

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. அப்போது கமல் போட்டியிடவில்லை. அவரின் கட்சியின் வேட்பாளர்களும் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் மநீம-வுக்கு 3.72% வாக்குகள் கிடைத்தன. பின்னர் 2021-ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலையும், அந்தக் கட்சி சந்தித்தது.

இந்த முறை கோவை தெற்கில் கமல் போட்டியிட்டார். மேலும் பெரும்பாலான இடங்களுக்கு நேரடியாகச் சென்று, கமல் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. கோவை தெற்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கமல் தோல்வியடைந்தார். பின்னர் நடிப்பதில் ஆர்வம் செலுத்திவருகிறார். மறுபுறம் இதைப் பிற அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

யாருடன் கூட்டணி?

இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து கமல்ஹாசன் அளித்த பேட்டியில், "நாங்கள் என்ன கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரியவரும். நான் எந்த திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தைப் புரிந்துகொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது புரிந்துவிடும்" என்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஜோடோ யாத்திரையில் பங்கேற்பு:

பின்னர் பேசிய அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, "ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லியில் வருகிற 24-ந் தேதி அவரது தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்' என்றார்.

முன்னதாக இதில் திரைப்படப் பிரபலங்களான பூஜா பட், ஸ்வாரா பாஸ்கர், அமோல் பலேகர் போன்றோர் பங்கேற்றிருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் எல் ராம்தாஸ், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டவர்களும் பேரணியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்தான் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ராகுலின் ஜோடோ யாத்திரையில் கமல் பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

திமுக - காங் கூட்டணியில் விரிசல்?!

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "கடந்த தேர்தலில் காங்கிரஸ், மநீம கட்சியிடம் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று தெரிவித்தது. மேலும் 2021-ம் ஆண்டில் டெல்லியில் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துப் பேசியிருந்தார். காங்கிரஸுடன் அவருக்குச் சுமுகமான உறவு இருக்கிறது. தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்ற போக்கு இருக்கிறது. 10 எம்.பி தொகுதிகள் ஒதுக்குவது என்பதைத் தேவையில்லாத ஒன்றாக, அந்தக் கட்சி கருதுகிறது.

அவர்களிடம் திமுக சார்பில் 30 எம்பி-க்களாவது வெற்றிபெற்று டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. திமுக பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில், இது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு நிலை வரும் பட்சத்தில் காங்கிரஸ் ஒரு தனி அணியாகச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனுடைய முன்னோட்டமாகத் தேவையான அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்கிறபோது காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, மநீம போன்ற கட்சிகள் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் ஆலோசனை!

கடந்த வாரம் டெல்லியில் இருக்கும் விஷ்ணு பிரசாத் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் கமலின் மநீம-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தகவல். தற்போது வெளிப்படையாகவே ராகுலுடன் அவர் பயணம் செய்கிறார் என்கிறபோது இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகத்தான் இருக்கும். மேலும், திமுக கமலின் மநீம-வை ஏற்கும் வாய்ப்புகள் குறைவுதான். அந்த வழியில் வரும் காங்கிரஸ் இனி திமுக கூட்டணியில் தொடர்வது சரியாக இருக்காது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.

அதற்கான முன்னோட்டமாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். திரைப்படத்துறையைப் பொறுத்தவரை இணக்கமான போக்கு இருக்கும். அரசியல் என்று வரும்போது எதிர்காலத்தைத்தான் பார்ப்பார்கள். மேலும் தற்போது திமுக மீதான அதிருப்தி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேர்தலின்போது அந்தக் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருக்கும் பட்சத்தில், தனியாகத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று நினைக்கிறார்கள். மேலும் ஸ்டாலின் புதுவையில் `திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்’ என்று பேசியிருப்பதன் மூலம் முரண்பாடு இருக்கிறது என்பது தெரிகிறது" என்றார்.

விக்ரம்
விக்ரம்

ரெட் ஜெயன்ட்:

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள் சிலர், "உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸுடனும் இருக்கும் தொடர்பைக் கருத்தில்கொண்டு, ஆளும் திமுக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை கமல்ஹாசன் எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த `விக்ரம்-2’ படத்துக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கமல்ஹாசன் எதிர்பார்க்கவில்லை.

இதற்கு ரெட் ஜெயன்ட்தான் காரணம். `இந்தியன்-2’, `பிக் பாஸ்’ எனத் திரையுலகில் தொடர்ந்து பிசியாக இருக்கிறார். மேலும் விஜய் உள்ளிட்ட தற்போதைய முன்னணி நட்சத்திரங்களின் படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனுக்கு திமுக சில இடங்களை உறுதிசெய்யலாம். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது" என்றனர்.