Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: கோவை மக்களைக் கவர்வாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மக்களிடம் கமல் தன்னைக் கட்டமைத்துக்கொள்வார்’ என்பது ம.நீ.ம தொண்டர்களின் நம்பிக்கை

மயிலாப்பூரில் போட்டியிடுவார், ஆலந்தூரில் களமிறங்குவார் என்றெல்லாம் பேச்சுகள் றெக்கைகட்டிப் பறந்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ம.நீ.ம-வுக்கு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் கிடைத்தது (1,44,829 வாக்குகள்) கோவையில்தான். ம.நீ.ம-வின் டாக்டர் மகேந்திரனே இவ்வளவு வாக்குகளைப் பெற்றதால், தனது வெற்றி எளிதாக இருக்கும் என்றெண்ணி கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார் கமல்.

இந்தத் தொகுதியில் பா.ஜ.க – காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. `தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மக்களிடம் கமல் தன்னைக் கட்டமைத்துக்கொள்வார்’ என்பது ம.நீ.ம தொண்டர்களின் நம்பிக்கை. ம.நீ.ம நிர்வாகிகள் சிலரோ, ``தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் `பிக் பாஸ்’ மூலம் நெருக்கமாகிவிட்டார் கமல். ‘இம்முறை அவருக்கு வாக்களித்துத்தான் பார்ப்போமே’ என்ற மனநிலை இளைஞர்களிடமும் பெண்களிடமும் ஏற்பட்டுள்ளது. இதுவே பெரிய வெற்றிதான்’’ என்கிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

2016 சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்குத் தொகுதியில் தனித்துக் களமிறங்கிய பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன், 33,113 வாக்குகள் பெற்றிருந்தார். இம்முறை அ.தி.மு.க செல்வாக்குடன் களமிறங்குவதால், எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வானதி. தொகுதியில் கணிசமான அளவுக்கு வட இந்தியர்கள் வசிக்கிறார்கள். டெல்லி பா.ஜ.க தலைவர்கள் வந்து பிரசாரம் செய்யவைத்தால், அவர்களது வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என்பது வானதியின் ஓட்டுக் கணக்கு. அதேவேளையில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அம்மன் அர்ஜுனன் கோவை தெற்குத் தொகுதியைக் குறிவைத்து வேலை பார்த்துவந்தார். கடைசி நேரத்தில் தொகுதி பா.ஜ.க-வுக்குச் சென்றதால், அர்ஜுனன் தரப்பு அப்செட். கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு களேபரம் செய்தார்கள். ‘அ.தி.மு.க உள்ளடி வேலை செய்துவிடுமோ’ என்று கலக்கத்தில் இருக்கிறது வானதி தரப்பு.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் மயூரா ஜெயக்குமார், 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார். `தற்போது தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. ஆளும்தரப்புமீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, இம்முறை வெற்றி உறுதி’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மயூரா ஜெயக்குமார். சிறுபான்மை வாக்குகளை ம.நீ.ம., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சிகள் கணிசமாகப் பிரிப்பதால், மயூராவின் மனக்கோட்டையில் ஓட்டை விழ வாய்ப்பு இருக்கிறது. ‘வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம்’ என்று இரண்டு தேசியக் கட்சிகளும் கனவில் மிதந்த நிலையில்தான், கமலின் என்ட்ரி அவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமார்

அதனாலேயே, ``கமல் எப்போதாவதுதான் களத்துக்கு வருவார். நாங்கள் எப்போதும் இங்குதான் இருப்போம்’’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது பா.ஜ.க. கமலுக்கு செக் வைக்கும்விதமாக, நடிகை கௌதமியை பிரசாரக் களத்துக்கு அழைத்துவரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். “அதீத நம்பிக்கையின் காரணமாக, தொகுதிக்குள் கமல் சரிவர பிரசாரம் செய்யவில்லையென்றால், அது வானதிக்குச் சாதகமாகிவிடும்” என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தால் மட்டுமே, கமலுக்கான வெற்றி வாய்ப்புகள் தென்படும்!

-

அடுத்த கட்டுரைக்கு