Published:Updated:

`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது?’-பிரதமருக்கு கமல் கடிதம்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக்குடிசைகூட இல்லாத ஏழைகள், வீட்டில் உணவு செய்வதற்குக்கூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கொரோனா இந்தப் பெயர் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகநாடுகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

வீடுகளில் விளக்கேற்றிய மகக்ள்
வீடுகளில் விளக்கேற்றிய மகக்ள்

வீட்டில் உணவு செய்வதற்குக்கூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகள் எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும் எனக் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். `லாக்டவுன்’ என்ற அறிவிப்பை கேட்ட பிறகு, ஒரு நிமிடம் திகைப்பிற்குள்ளானாலும். பிரதமர் என்கின்ற முறையில் நீங்கள் சொல்வது சரியானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில், உங்களை நம்பலாம் என்கின்ற முடிவிற்கு வந்தேன். பணமதிப்பிழப்பின் போதும்கூட நான் உங்களை நம்பலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால், காலம் எனது முடிவு தவறென்று உணர்த்தியது.

இப்பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்வதற்கு தயாராக உள்ளேன். இந்தத் தேசமே நம்பிக்கையுடன் எழுந்து நின்று பிரதமர் அலுவலகம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக உள்ளது. இந்த நாட்டிற்காகத் தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும், நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னவுடன் உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து கொண்டோர்கூட கைதட்டி உற்சாகமூட்டினர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அடிபணிகின்றோம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சரியாகத் திட்டமிடப்படாத, இந்த லாக்டவுன் அனைவரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் ஆபத்தை நோக்கி செலுத்துகிறது.

செல்வந்தர்களைக் குடும்பத்தினருடன் இரவு நேர கேளிக்கைகளை காண அழைக்கிறீர்கள், மறுபுறம் ஏழைகளை அவமானமாக உணரும் ஒரு சூழலில் தள்ளுகிறீர்கள். உங்களுடைய உலகம் எண்ணைய் விளக்குகளைத் தங்கள் பால்கனிகளில் ஏந்திக்கொண்டிருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதற்குக்கூட எண்ணைய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கொரோனா
கொரோனா

இறுதியாக நடந்த மக்களுடனான உங்கள் உரையாடல்களும் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் அமைந்தது. அமைதியாக இருப்பதைவிட மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற மனநல யுக்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலைகளை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால், தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக்குடிசைகூட இல்லாத ஏழை எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும்?

தனது உழைப்பினாலும் வியர்வையினாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக ஒரு பெரும் அடித்தளமாக இருக்கும், அடித்தட்டு மக்களை ஒதுக்கி வைத்து, வெறும் பால்கனிவாழ் மக்களின் பால்கனி அரசாகத் தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அடித்தளத்தை அசைத்துப் பார்த்தால், மேல்தட்டு சிதறிவிடும் என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. அறிவியலும் அதை ஒத்துக்கொள்ளும். மேல்தட்டில் இருப்பவர்கள் அடித்தட்டில் இருப்பவர்கள் மீது திணித்த முதல் தொற்று நோயும் நெருக்கடியும் இதுதான். அதிலும் மிக முக்கியமாகத் தாங்கள் அடித்தட்டு மக்களைக் காப்பாற்றுவதைத் தவிர்த்து, மற்ற அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கிறது.

கோடிக்கணக்கான தினக்கூலிகள் ஏதேனும் ஒரு சிறு வெளிச்சமாவது தங்கள் வாழ்வில் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் கோட்டைகளைக் காப்பாற்றுவதை மட்டும் நமது குறிக்கோளாய் வைத்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை `எந்த ஒரு மனிதனும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது' என்பதுதான். அதைதான் நீங்கள் செய்திட வேண்டும் என நான் உங்களிடமும் பரிந்துரை செய்கின்றேன். கோவிட் 19 தொடந்து பல பேரை தொற்றிப் பரவும் என்றாலும், நாம் பசி, சோர்வு, இழப்பு எனும் பெரும் பிணிகளைப் பெற்றெடுக்கும் கருவறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது?’-பிரதமருக்கு கமல் கடிதம்

பசி, சோர்வு, இழப்பு இன்று பார்ப்பதற்கு சிறிதாகத் தெரிந்தாலும் கோவிட்19 விட மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருக்கும். பிரசார யுக்திகளின் மூலமாக மக்களை உற்சாகத்தில் மட்டுமே வைத்திருக்க முயலும் உங்கள் கவனமும் நோக்கமும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்ய வேண்டிய விசயங்களில் கவனம் செலுத்தமால் புறந்தள்ளுகிறது.

ஜனவரி 30, இந்தியா தனது முதல் கொரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்த பின்பும், நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண் விழித்தபோது, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, நான்கே மணி நேர கால அவகாசம் கொடுத்து1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.

பிரச்னைகள் தீவிரம் அடையும் முன்பே தீர்வுகளைத் தயார் நிலையில் வைப்பவர்கள்தான் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள். மன்னிக்கவும். ஆனால், இந்த முறை உங்கள் தொலைநோக்குத் தோற்றுவிட்டது.

மோடி
மோடி

நீண்ட காலத்திற்கு மக்களிடையே மிகப்பெரும் பாதிப்பேற்படுத்தக் கூடிய இந்தக் கொரோனா, நம்மைத் தீண்டியது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. இப்பேரிடர் நம் அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர, எந்தப் பக்கத்தில் யார் பிரிந்து நிற்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரமல்ல. நாங்கள் கடுங்கோபத்தில் இருக்கிறோம், இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு