Published:Updated:

``மோடிக்கு கமலின் கடிதம்... விளம்பரப் புலம்பல்!'' - தமிழக பா.ஜ.க.

கொரோனா ஊரடங்கு விவகாரத்தில், ஏழை எளிய மக்களின் சிரமங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, 'பால்கனி அரசு' என்று விமர்சித்திருக்கிறார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். தமிழக பா.ஜ.க தரப்பிலோ, ''கமல்ஹாசன் விளம்பரப் புலம்பல் செய்கிறார்'' என்று பதிலடிகொடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு, எதிர்க்கட்சிகளே அடக்கி வாசித்துக்கொண்டிருக்கும் சூழலில், 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன், மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் காரசார கடிதம், நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

'பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, ஏழை எளிய மக்களின் அரசாக இல்லாமல், பால்கனி மக்களின் அரசாக மட்டுமே செயல்படுகிறது' என்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைத்து இக்கடிதத்தை எழுதியுள்ளார் கமல்ஹாசன். அரசியல் அரங்கில் ஆதரவும் எதிர்ப்புமாகப் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் இக்கடிதம் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்...

இரா.முத்தரசன், (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்)

''நாடு முழுவதும் உள்ள எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், இதே கருத்தை வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பாக ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு செய்திகள்கூட, எல்லா ஊடகத்திலும் வெளியாகவில்லை. சமீப நாள்களில், மத்திய அரசுக்கு எதிரான செய்திகளும் கட்சி அறிவிப்புகளும்கூட தணிக்கை செய்யப்பட்டே வெளியாகின்றன. அப்படி வெளியாகும் செய்திகளும்கூட, முழுமையான அளவில் இல்லாமல், குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே தாங்கிநிற்பது வருத்தத்துக்குரியது.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

கொரோனா தொற்றைத் தடுத்துநிறுத்தும்பொருட்டு, மத்திய அரசுப் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவை குடிமக்களாக அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்துவரும் சூழலில், அவர்களுக்கான ஆயிரம் ரூபாய் நிதியை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும் என்று கேட்டு அரசுக்கு கோரிக்கை வைப்பது எப்படி அரசியல் ஆகும்? இந்த செய்தியைக்கூட ஏன் தடை செய்கிறார்கள்?''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க)

''கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து நாடே ஓரணியில் திரண்டு நின்று போரிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஒற்றுமையான சூழ்நிலையில், வேற்றுமையை ஏற்படுத்துவதுபோல் கமல்ஹாசனின் கடிதம் அமைந்திருப்பது வருத்தமும் வேதனையுமாக இருக்கிறது.

கொரோனா வைரஸை ஒழித்துக்கட்டுவதுதான் இப்போது நம் அனைவரின் முன்னால் இருக்கும் சவால். இந்தப் பணியில் கமல்ஹாசனும் ஒத்துப்போவதுதான் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்.

`குறும்பு ரஜினி; அக்கறை அமிதாப்!' - குறும்படம் மூலம் ஒன்றுதிரண்ட இந்தியப் பிரபலங்கள் #corona
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஏழை - எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மத்திய - மாநில அரசுகள் ஏற்கெனவே நிதி உதவி, நிவாரணங்களை வழங்கிவருகிறோம். எனவே, இக்கட்டான இந்த நேரத்தில், கமல்ஹாசன் அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஆரோக்கியமான விஷயமல்ல. வேண்டுமானால், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசுகளுக்கு வழங்குங்கள்!''

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்)

''கொரோனா வைரஸ் தொற்றினால், மிகப்பெரிய சமூகப் பேரழிவு நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சோதனையான காலகட்டத்தில், அரசுக்கு உறுதுணையாக அனைவரும் கைகோத்து நிற்கிறோம். அதேசமயம், அரசின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும்போது, மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஓர் எதிர்க்கட்சியாக அவற்றை நாங்கள் சுட்டிக்காட்டுவதும் அவசியம். இதுகுறித்த எனது கருத்துகளை ஏற்கெனவே வீடியோக்களாக சமூக வலைதளங்களில்பதிவிட்டுவருகிறேன்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனாலும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் எதிர்க்கட்சிகளின் செய்திகள் முழுமையாக வெளிவருவதில்லை. ஜனநாயக நாட்டில் யாரும் கருத்து சொல்லலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில், அரசின் இயலாமையைச் சுட்டிக்காட்டி எவரொருவர் கருத்து தெரிவித்தாலும் அதில் தவறில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.''

ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க அமைப்புச் செயலாளர்)

''எங்கள் கட்சித் தலைவர்தான் இதுகுறித்தெல்லாம் கருத்து சொல்ல வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்லமுடியாது'' என்று முடித்துக்கொண்டார்.

'பால்கனி அரசு' என மத்திய அரசை கமல் விமர்சித்திருப்பது பற்றி தி.மு.க தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வரவில்லை. ஆனாலும் கமல் கருத்தை தி.மு.க ஆதரித்துப் பேசியதாக அறிவாலயத்திலிருந்து செய்திகள் கசிகின்றன.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

''கமலின் கருத்தில் ஆழம் பொதிந்த விஷயங்கள் இருக்கின்றன. வழக்கமாக, குழப்பமான கருத்துகளைத்தான் சொல்லுவார் கமல். இந்த முறை மிகத் தெளிவாக மக்களின் பக்கம் நிற்பதுபோல கருத்தை வெளியிட்டிருக்கிறார்'' என தி.மு.க முன்னணித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். ''பி.ஜே.பி-யை நாம்தான் கடுமையாக விமர்சிப்போம். ஆனால், கொரோனா விஷயத்தில் நம்மிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வரவில்லை என்கிற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. தளபதியின் கருத்து போய் சேர்வதற்குப் பதில் கமலின் கருத்துகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன'' என்றும் அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

சீரான உடல்நிலை; செயற்கை சுவாசம் - ஐ.சி.யூவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

எஸ்.ஆர்.சேகர் (தமிழக பா.ஜ.க பொருளாளர்)

''நாட்டு மக்களிடையே பிரிவினையை உண்டாக்கக்கூடாது என்று பிரதமரைக் குற்றம் சாட்டுகிற கமல்ஹாசன், தனது 4 பக்கக் கடிதம் முழுவதும் பிரிவினையைத் தூண்டுவதான கருத்துகளைத்தான் சொல்லியிருக்கிறார்.

வெறும் 4 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவை எடுத்து அறிவித்துவிட்டது தவறு என்கிறார். தனிப்பட்ட வகையில், உயிருக்கு ஆபத்து என்று வருகிறபோது, குடும்பத்தினர், திரைப்படத் துறையினர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து உட்காரவைத்து ஆலோசனை செய்துதான் கமல்ஹாசன் முடிவெடுப்பாரா?

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

அறிவிலும் செல்வத்திலும் வளர்ந்த நாடுகளே கொரோனா பிடியில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 133 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டின் பிரதமராக உள்ள மோடி, மிகத் திறம்பட செயல்பட்டு, கொரோனா தீவிரத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கிறார். கொரோனா குறித்த இந்திய மருத்துவ அறிக்கையின் புள்ளிவிவரத்தைப் படித்துப்பார்த்தாலே இது தெரியும். உலக நாடுகளும்கூட இந்தியாவைப் பார்த்து வியந்து பாராட்டுகிறது. எனவே, இடதுசாரியான கமல்ஹாசனின் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை.

'ஊரடங்கு விடுமுறையான 21 நாள்களுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்' என்று தொழில் நிறுவனங்களிடம் கனிவாகச் சொல்லியிருக்கிறார் பிரதமர். உணவு, நிவாரணம் என்று மத்திய - மாநில அரசுகள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், ஏழை எளிய மக்களுக்காகக் கவலைப்படுவதாகச் சொல்லும் கமல்ஹாசன், இதுவரை என்ன செய்திருக்கிறார்? எந்தவித இரைச்சலும் இல்லாமல் அடங்கிப்போயிருந்த இந்த அமைதியான காலகட்டத்தில், தன் பேச்சின் சத்தம் கேட்கவேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் செய்திருக்கும் விளம்பரப் புலம்பல்தான் இது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு