2019-ல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து போட்டியிட்ட கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.78 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதன் மூலம், தமிழக அரசியலில் கமல் கவனம் பெற்றார். அதற்கடுத்து, 2021-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வெறும் 2.62 சதவிகித வாக்குகளையே பெற்றது.

2021, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலும், திரைப்படப் பணிகளிலும் கமல் கவனம் செலுத்தினார்.
ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து, கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் திரைத்துறையில் கமலுக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்தது. விக்ரம் படம் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கும் கமலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. சினிமாவால் ஏற்பட்ட அந்த நெருக்கம் அரசியல் ரீதியாகவும் நீண்டிருக்கிறது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வதால் பயனில்லை என்பதை உணர்ந்திருக்கும் கமல், பிரதான கூட்டணியில் இடம்பெற்று தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று நினைக்கிறார். இந்தப் பின்னணியில்தான், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் மீது பா.ஜ.க-வின் ‘B’ டீம் என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்துத்துவாவுக்கு எதிரான விமர்சனங்களை பல நேரங்களில் கமல் முன்வைத்துவந்தாலும், பா.ஜ.க-வையோ, பிரதமர் மோடியையோ கமல் விமர்சிப்பதில்லை என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருக்கிறது. மேலும், ‘நான் வலதும் கிடையாது, இடதும் கிடையாது’ என்று மய்யமாக கமல் நிற்பதும், அவர் பா.ஜ.க மீது பாசம் காட்டுகிறார் என்ற விமர்சனத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தற்போது, கமல் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கமலுக்கான முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட கமலுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தி.மு.க-வில் ஆலோசிக்கப்பட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்த நேரத்தில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் பங்கேற்றது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட கமல், ‘நான் காந்தியின் கொள்ளுப்பேரன்’ என்று முழங்கியிருக்கிறார். இதன் மூலம், பா.ஜ.க-வுக்கு எதிர்நிலையில் தாம் இருப்பதாக அவர் உணர்த்தியிருக்கிறார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரடியாகவே விமர்சித்திருக்கிறார்.

"பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாசாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்தச் சத்தியத்தை எந்த "ஷா"வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயலக் கூடாது" என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் கமல். கமலிடமிருந்த பா.ஜ.க-வுக்கு எதிரான இத்தகைய விமர்சனங்களை வரும் காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எனினும் மக்கள் நீதி மய்யத்தினரோ, ``இதைக் கூட்டணிக்கான திட்டமாகச் சொல்ல முடியாது. ஒரு கூட்டணி ஏற்படுவதற்கும், ஏற்படாமல் போவதற்கும் ஒரு சிறிய விஷயம்கூட காரணமாக போதுமானதாக இருக்கலாம். கூட்டணி கணக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் போடப்படுவது. தற்போது மக்கள் பிரச்னைகளில் மட்டுமே மநீம கவனம் செலுத்துகிறது” என்கிறார்கள்.