Published:Updated:

``வேற்று மொழியில் இருந்தாலும் தேசிய கீதம் பாடுவோம்...!” - கமல் சொல்லும் காரணம்

Kamalhaasan
Kamalhaasan ( Twitter )

இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும்பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

இந்தி திவாஸை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் கருத்து தேசிய அளவில் சர்ச்சையானது. அவர் தனது ட்விட்டர் பதிவில், ``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

Amit Shah
Amit Shah

இன்று இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழிக் கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” எனப் பதிவிட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

தமிழகத்திலிருந்தும் அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை பலமாக எடுத்துரைத்தனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

``வேற்று மொழியில் இருந்தாலும் தேசிய கீதம் பாடுவோம்...!” - கமல் சொல்லும் காரணம்

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அமித் ஷாவின் கருத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில், ``இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும்பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக” என்ற வாசகத்துடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் கமல்ஹாசன், ``பல ராஜாக்கள் தங்களின் ராஜாங்கங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக் கொடுக்கவே முடியாது என பல மாநிலங்கள் சொன்ன விஷயம் மொழியும் கலாசாரமும்தான். 1950-ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானபோது அதே சத்தியத்தை இந்திய அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

kamal
kamal

ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம். சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழகத்துக்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள் அவர்களின் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை நாங்கள் சந்தோஷமாக பாடிக்கொண்டு இருக்கிறோம். பாடிக்கொண்டு இருப்போம்.

காரணம், அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்துக்கும், எல்லா மொழிக்கும் உண்டான இடத்தையும் மதிப்பையும் கொடுத்துள்ளார். இந்தியா என்பது ஓர் அற்புத விருந்து. அதைக் கூடி உண்போம். திணிக்க நினைத்தால் திகட்டிவிடும். தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித் திருநாடு” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு