Published:Updated:

இ.பி.எஸ் `புன்சிரிப்பு’, ஓ.பி.எஸ் `மற்றொரு சிரிப்பு’, ஸ்டாலின்..?! - கமலின் ரேப்பிட் ஃபயர் பதில்கள்

கமல்
கமல்

`கமலின் கேரவனை இளைப்பாறலுக்காக ஓரிடத்தில் நிறுத்தியுள்ளனர். கொஞ்சம் நேரமே வண்டி நிற்கும். அதற்குள் உங்களின், அடுத்தடுத்த பணிகளை முடித்துவிட்டு வாருங்கள் அன்பு வாசகர்களே...' - கமலின் மேற்கு மண்டலப் பரப்புரை கவரேஜ் முதல்பாகக் கட்டுரையை இப்படித்தான் முடித்திருந்தோம்...

நம்முடைய வாசகர்களோ,

`ஏனுங்க , இம்புட்டு நேரமா கேரவன் நிற்கும்... குட்டித் தூக்கமே போட்டுட்டு வந்துட்டோம். இன்னுமா கிளம்பலை... கேரவனைக் கெளப்புங்க கண்ணு. இன்னும் நிறைய ஊருக்கு போகணுமில்லைங்களா...' என அன்போடு கேட்க, இதோ கமலின் பரப்புரை கேரவனில், நமது கவரேஜுக்காக நாமும் இணைந்துகொண்டு, போன முறை விட்ட இடத்திலிருந்தே கேள்வியை முன்வைத்தோம்.

`` `இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான திட்டம் என்ன... எங்கிருந்து நிதியைத் திரட்ட இயலும் ?”

``அதற்கான செயல் திட்டங்கள் இல்லாமல் இந்த அறிவிப்பை நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், அதை எப்படி என்று இவர்களுக்கு நாங்கள் சொல்ல மாட்டோம். கொள்ளையடிக்க இன்னொரு யுக்தியை இவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக அமையும். எங்கள் ஆட்சியில் நாங்கள் செய்யத் தவறினால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

``உங்கள் பரப்புரையில் கார்ப்பரேட்கள் உதவியும் தேவை என்கிறீர்கள்... இது எந்த அளவுக்குச் சரி?”

``ஆம், தமிழ்நாடு செழிக்க வேண்டுமென்றால், 50 பில்லியன் டாலர்ஸ் ஈட்டக்கூடிய கம்பெனிகள் இருக்கும் அதேநேரத்தில் ஐந்து லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இயங்க வேண்டும். இரண்டும் சரி சமமாக வளர வேண்டும் என்பதே என் பார்வை.”

``நீண்டகாலமாகவே நீங்கள் பேசுவது புரிவதில்லை என்று ஒரு விமர்சனம் உங்கள்மீது வைக்கப்படுகிறதே...”

``பல காலமாகவே இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குப் புரிகிற மொழியில்தான் என்னுடைய பேச்சுகள் இருக்கு. சமீபத்தில் பரப்புரையில், நான் பேசி முடித்த பிறகு , ஒரு கூலித் தொழிலாளி என்னைப் பார்த்து 'ஐ லவ் யூ ' என்று அன்போடு கூறினார். இப்படி மக்கள் இயல்பாக அன்பைத் தெரிவிக்கிறார்கள். நானும் எனது அன்பைப் பிரதிபலிக்கிறேன். மற்றபடி என் பேச்சு புரியலைன்னு சொல்றவங்களுக்கு என்னுடைய பதில், தூங்குறவங்களை எழுப்பலாம்... தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது...”

இப்படி மனம்விட்டு பேசிக்கொண்டிருக்கும்போதே, திருப்பூர் - அவிநாசி சாலையிலுள்ள ஆதர்ஷ் பனியன் நிறுவனம் வர, அங்கே கேரவனை நிறுத்தச் சொன்னார் கமல்.
கமல்
கமல்

அங்கே அந்தக்ஷ் சிறு நிறுவனத்துக்குள் கமல் செல்ல, `ஹே... கமல், கமல்...' என அங்கே பணியாற்றும் பெண்கள் ஆர்ப்பரித்தனர். `சினிமா-வுல பாக்குற மாதிரியே இருக்காரே...' என கிசுகிசுவென பலரும் பேசிக்கொண்டதும் காதில் விழுந்தது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து, அந்த நிறுவனத்தின் எம்.டி ராஜேந்திரன் விளக்கினார். இப்படியாக உரையாடல் நீண்டு, மதிய நேரத்தை உணர்த்த, அதன் பிறகு மதிய உணவுக்குத் திரும்பியது கேரவன்.

11.01.2021 DAY -02

மாலை நேரம்

மதிய உணவு முடிந்த பிறகு கோபிசெட்டிபாளையம், பவானி, கருங்கல்பாளையம் எனப் பல பகுதிகளிலும் சூறாவளி பரப்புரையை கமல் நிகழ்த்த, அதோடு குளிர்க் காற்றும் கூடுதலாக வீசி, இரவை அடைந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது.

12.01.2021 DAY -03

காலை நேரம்

வழக்கமான தமது காலைப் பணிகளை முடித்துவிட்டு, (முதல்பாகக் கட்டுரையில் என்னவென்று எழுதியிருக்கிறேன்)

ஈரோடு,மொடக்குறிச்சி, சிவகிரி, காங்கேயம், தாராபுரம் எனப் பல இடங்களிலும் தீவிர பரப்புரையை மேற்கொண்டார் கமல். இந்தப் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் குறிப்பாக, ஜமுக்காள வியாபாரம் சந்திக்கும் பாதிப்புகள் என வட்டார அளவிலான பிரசனைகளை முன்வைத்துப் பேசினார் கமல். அதற்குள் மதியம் கடந்துவிட மதிய உணவுக்காக ம.நீ.மய்யத்தின் மாநிலப் பொருளாளர் திருப்பூர் சேகர் வீட்டில் விருந்து தயார் செய்யப்பட்டிருந்தது.

மதியம் 03:40 PM

மதிய உணவு முடிந்தவுடன், `காங்கேயம் என்றாலே காளைகள்தானே... இங்கே நம்முடைய நாட்டுமாடுகளைப் பார்க்கலாமே...’ என கமல் கேட்க, உடனடியாக காங்கேயம் காளைகள் இருக்கும் தோப்புக்கு கமலை அழைத்துப்போனார்கள் மேற்கு மண்டல ம.நீ.மய்யத்தினர்.

கமல்
கமல்

நாட்டுமாடுகளை பார்த்ததும் தன்னுடைய `விருமாண்டி’ பட நினைவுகளை அசைபோட்டார் கமல். அவரிடம், `காங்கேயம், சங்ககிரி, திருச்செங்கோடு, ஈரோடு, சேலம் என இந்த வட்டாரங்களில் நாட்டுமாடுகள் அதிகம். இந்த மாடுகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் மாடு ரேஸிலும் பங்கேற்கும்’ என்றனர் கிராமத்து மக்கள். எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்ட கமல், `நம்முடைய நாட்டுமாடுகளைக் காப்பாற்றுவது வேளாண்மைக்குச் செய்கிற மிகப்பெரிய உதவி. அழியாமல் காப்பாற்றவே ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளும் அவசியம்' என்றபடியே அங்கிருந்து பரப்புரை நோக்கி நகர்ந்தார் கமல். அவரை நாமும் பின்தொடர்ந்தோம்.

இரவு நேரம்

உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி எனப் பல இடங்களிலும் பரப்புரை செய்த கமல், `அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசி இல்லாமல் இங்கே தவறுகள், குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை' என்று பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டிப் பேசும்போதே மழையும் தொடங்கியது. அற்புதமான அந்த மழையையும் இணைத்துக்கொண்டு, பொள்ளாச்சி கந்த மகாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `உள்ளூரளவிலான வி.ஐ.பி'-க்களுடான கலந்துரையாடலில் பங்கேற்றார் கமல்.

`பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தனர் உள்ளூர் வி.ஐ.பி-க்கள்.

அதோடு இரவும் நீள, இரவு உணவுக்காக மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் வீட்டுக்குப் பயணித்தது கமல் கான்வாய்.

மழை ஓய, இரவும் முடிய, அடுத்தநாள் விடியல் பிறந்தது.

13.01.2021 DAY -04

காலையிலேயே பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய கமல், சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் இரண்டாம்கட்ட ஏழு அம்சத் திட்டங்களை அறிமுகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக உள்ளூரளவிலான தொழிலதிபர்கள், வி.ஐ.பி-க்கள் கலந்துரையாடலை முடித்துவிட்டு, மதியத்துக்கும் - மாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் இறுதிநாள் பரப்புரைக்குக் கிளம்பினார் கமல். கோவை மாநகரில் மையமிடும் அவரின் கேரவனுக்குள் நுழைந்து நம் கேள்விகளை முன்வைத்தோம்.

``காஷ்மீர் தொடங்கி தூத்துக்குடி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறதே...”

``அது நம் மனப்பாங்கு, கலாசாரம் என்ற பெயரால் நடக்கும் மோசடி. இதெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போது பெண்ணை அடிமைபடுத்தும் போக்கு அதிகரிக்கிறது. பெண்ணை அடிமைப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதர்களை அடிமைப்படுத்தும் பழக்கமும்கூட இன்னும் விட்டுப்போகவில்லை. சாதி, நிற, வர்க்கம் என அனைத்து பேத அரசியலையும் எதிர்த்து, சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டும்.

இது ஒரு `மகாநதி’ படம் எடுத்து, அரசாணை போட்டெல்லாம் ஈஸியா மாற்றிவிட முடியாது. இது ஒரு வாழ்க்கைமுறை. பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு...”

``அ.தி.மு.க-வை அட்டாக் செய்யுமளவுக்கு உங்கள் உரைகளில் தி.மு.க அட்டாக் இல்லையே... அப்படியென்றால், தி.மு.க ஊழல் கறை படியாத கட்சியா?”

``கண்டிப்பாக இருக்கு. நிலுவையிலுள்ள வழக்குகளே அதற்கான சாட்சி. அப்படியிருக்க, எப்படி அவர்களைக் கறை இல்லாதவர்கள் என்று நான் சொல்ல முடியும்?! முதலில் காமாலைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அடுத்து டைபாய்டு-க்குத் தடுப்பூசி போடலாம் என்கிறேன்.”

கமல்
கமல்

``சசிகலா விடுதலைக்குப் பிறகு அரசியலில் காட்சி மாறுமா?”

``மாறும்... மாறலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம். மாறாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மக்கள் செய்ய வேண்டும்.”

``டெல்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து..?’’

``விவசாயிகள் தேவைக்கு செவிசாய்ப்பது மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தவும் முயல்வதே நல்லரசு.”

``ஆனால் மத்திய பா.ஜ .க அரசு, தாங்கள் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை கொடுப்பதற்காகவே என்கிறார்களே...”

``ஏற்கெனவே டீமானிடைசேஷனை நம்பி நாம் ஏமாந்தது போதும். இனியும் நாம் பா.ஜ.க-வை நம்பி ஏமாறக் கூடாது.”

``பா.ஜ .க-வின் இந்த ஆறாண்டு ஆட்சி பற்றி..?”

``பிழையா பெருமை?!

எனக்குமில்லை அவருக்குமில்லை...

நான் விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பேன். அவர்கள் விமர்சனத்துக்கு செவிசாய்க்காதவர்களாக இருப்பார்கள்...’’

இப்படிக் காரசார பதில்களுக்கு இடையே நாம் ஒரு இளைப்பாறலாக, சில முக்கியப் புகைப்படங்களைக் காண்பித்து, கமலின் பழைய நினைவுகளைக் கிளறினோம். மனம்விட்டுப் பேசிய நேரத்தில் நம்முடைய ரேப்பிட் ஃபயர் கேள்விகளை முன்வைத்தோம்.

தந்தைப் பெரியார்

- அறிவின் தந்தை.

பிரபாகரன்

- வீரத்தின் சகோதரர்.

பிரதமர் மோடி

- தூரத்துச் சகோதரர்.

முதல்வர் எடப்பாடி க பழனிசாமி

(ஒரு பெரும் சிரிப்புக்குப் பிறகு பதிலளிக்கிறார் )

- ஒரு புன்சிரி மட்டுமே என் பதில்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

- மற்றொரு சிரிப்பு.

மு.க ஸ்டாலின்

- கலைஞரின் பிள்ளை.

கலைஞர் மு கருணாநிதி

- என் வசனத்தின் தந்தை.

செல்வி ஜெ.ஜெயலலிதா

- நான் நடன இயக்கநராக இருந்தபோது என்னோடு அன்பாக இருந்த சகோதரி.

டாக்டர் எம்.ஜி.ஆர்

- அந்த மூன்றெழுத்தை இந்த மூன்றெழுத்துக்குப் பிடிக்கும்.

செவாலியே சிவாஜி

- நான் விழித்த கலையுலகில், நான் பார்த்த முதல் சூரியன்.

மக்கள் நீதி மய்யம்

- மக்களின் பிள்ளை.

மக்கள் நீதி மய்யத்து தொண்டர்கள்

- என் பிள்ளைகள்.

கமல்

- உங்கள் நான்.

இப்படி நான்கு நாள்கள் தீவிர பரப்புரையை முடித்துக்கொண்டு அன்றைய இரவே சென்னைக்கு கமல் திரும்ப, அவரோடு ஒரு கைகுலுக்கலோடு நம்முடைய விகடன் டீமும் விடைபெற்றோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தென்பட்டதைவிட கமலின் தற்போதைய பரப்புரைக் கூட்டங்களில் கூடுதலாகவே மக்கள் கூட்டம் தென்படுகிறது. அத்தனையும் வாக்குகளாக மாறுமா என்பதை இப்போது சொல்லிவிட இயலாது. ஆனால், அத்தனையையும் வாக்குகளாக மாற்றும் கனவு மக்கள் நீதி மய்யத்திடம் மிகுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கனவுகளை நிஜமாக்கும் வல்லமை எஜமானர்களிடமே உள்ளது. வாக்களிக்கும் எஜமானர்களின் மனவோட்டம் என்னவோ..!

அடுத்து, A DAY WITH A LEADER நிகழ்ச்சியில் மற்றொரு தலைவரோடு உங்களோடு இணைகிறேன். அதுவரை நன்றி.

அடுத்த கட்டுரைக்கு