Published:Updated:

குமரி: `இதைச் செய்து முடித்தால், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான்தான்..!’ - கமல்ஹாசன்

நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன்.
நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன்.

`நீங்கள் முழு நேர அரசியல்வாதியா எனக் கேள்வி கேட்கிறார்கள். யாரும், எதையும் முழு நேரம் ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது. யாரும் முழுநேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து' என்றார் கமல்ஹாசன்.

`சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இன்று காலை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசனுக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு ஜங்ஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது சுற்றுப்பயண விவரப்படி அஞ்சுகிராமம், மயிலாடி, சுசீந்திரம், பீச் ரோடு ஜங்ஷன் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதாக இருந்தது. இதற்காகத் தொண்டர்கள் அந்தந்தப் பகுதிகளில் காத்திருந்தார்கள். ஆனால், கமல்ஹாசன் அந்தப் பகுதிகளுக்குச் செல்லாமல் வேறு ரூட்டில், நாகர்கோவிலில் நிர்வாகிகளைச் சந்திக்கும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். இதனால் ம.நீ.ம நிர்வாகிகள் டென்ஷன் ஆனார்கள். பின்னர் நாகர்கோவிலிலுள்ள ஹோட்டலில் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசுகையில், ``தேர்தலுக்காக நான் நாகர்கோவில் வரவில்லை. சிறு வயதிலிருந்தே நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர் இருக்கும்போது ஏன் வரவில்லை எனக் கேட்கிறார்கள். அப்பொழுது நான் வர வேண்டிய தேவை இல்லை. இப்போது அதற்கான தேவை வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கொண்டுவந்த இரட்டை இலையை, விருந்து சாப்பிடும் இலை என இவர்கள் நினைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரைக் கையில் எடுத்திருக்கிறாரே எனக் கேட்கிறார்கள். நான் அவரை எடுக்கவில்லை, அவர்தான் என்னைக் கையில் எடுத்திருக்கிறார். மக்களிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்ட இவர்களுக்கு மக்களையும் தெரியாது, மக்கள் திலகத்தையும் தெரியாது. அந்தப் பெயரில் ஏறிக்கொண்டு இவர்கள் திருவிழா காண்கிறார்கள். அவர் இருந்திருந்தால் இறக்கிவிட்டிருப்பார்.

தேனி: `பெண்களுக்கு முன்னுரிமை; சொல்லும் தந்தை எம்.எல்.ஏ., மகனோ எம்.பி’ - ஓ.பி.எஸ்-ஐ சீண்டிய கமல்

நீங்கள் முழு நேர அரசியல்வாதியா எனக் கேள்வி கேட்கிறார்கள். யாரும், எதையும் முழு நேரம் ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது. யாரும் முழுநேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் நபர்களைச் சோம்பேறி என்றே சொல்ல வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். எனது கடமையை விரைவில் என்னைச் செய்ய விடுங்கள். உங்கள் உதவி வேண்டும்; கடமை செய்ய வந்தவன் நான், காசுக்காக வரவில்லை.

கமல்ஹாசனுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
கமல்ஹாசனுக்கு குமரி எல்லையில் வரவேற்பு

`இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ வழங்கும் திட்டம் எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருக்கிறது. இதைக் கண்டிப்பாகச் செயல்படுத்த முடியும். அரசிடம் அத்தனைக்கும் பணம் இருக்கிறது. இவர்கள் கொள்ளையடிக்காமல் இருந்தால், இரண்டு தமிழகத்தை காப்பாற்றிவிட முடியும். தண்ணீரைக் காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை. ஏழ்மை நிலையை ஒழித்தால், தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுக்கும் காசை மக்கள் பெற மாட்டார்கள் என்பதால், ஏழ்மை நிலையை ஒழிக்காமல் இருக்கிறார்கள். ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க எம்ஜிஆர் நினைத்தார். அதைச் செய்ய வேண்டும் என நினைத்தால் நான் எம்.ஜி.ஆரின் நீட்சி. அதைச் செய்து முடித்தால், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான்தான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு