Published:Updated:

நெல்லை: `தி.மு.க-வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா?!’ - கமல்ஹாசன் சொல்வதென்ன?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன், `சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். அனைத்துத் தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால் எளிதில் பிரசாரம் செய்ய வசதியான தொகுதியில் போட்டியிடுவேன்’ என்றார்.

`சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்தப் பயணத்தின் நான்காவது நாளான இன்று நெல்லையில் இளைஞர்கள் மற்றும் மகளிரைச் சந்தித்து `தலை நிமிரட்டும் தமிழகம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.

செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன்
செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எங்களுக்குத் தமிழகம் முழுவதும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. நான் செல்லும் இடங்களிலெல்லாம் மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தரப்பு மக்களும் வந்து ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். அவர்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பல்வேறு இடங்களிலும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்துவருகிறேன். மீனவ மக்களின் மூலம் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்துவருகிறது. ஆனால், அவர்களை எந்த ஆட்சியும் கண்டுகொள்ளவில்லை.

தூத்துக்குடி: `மாற்றம் வேண்டும்.. மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணையத் தயார்!’ - கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர் மீது அன்புகொண்ட அந்த மக்கள் தற்போது என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைச் சட்டமன்றத்துக்குள் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக நான் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலின்போது மூன்றாவது அணி கட்டாயம் அமையும். நல்லவர்களோடு இணைந்து நாங்கள் மூன்றாவது அணி அமைப்போம். ஒவைசியுடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தலைச் சந்திப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

பொதுமக்களிடம் பேசும் கமல்ஹாசன்
பொதுமக்களிடம் பேசும் கமல்ஹாசன்

ரஜினி எனது நாற்பது ஆண்டுகால நண்பர். அவர் கட்சி தொடங்கிய பிறகு அவரது கொள்கையுடன் உடன்பாடு இருக்கும்பட்சத்தில் கூட்டணி அமையும். எங்கள் இருவரில் யார் முதல்வர் என்பதைப் பற்றி அந்த நேரத்தில் பேசி முடிவெடுப்போம்.

எங்கள் கட்சி யாருக்கும் `பி’ டீம் அல்ல. நாங்கள் எப்போதுமே `ஏ’ டீம்தான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம். இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் செய்திருக்கும் ஊழல்கள் ஏராளம். அதற்கு மாற்றாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். அதனால் நல்லவற்றையெல்லாம் எங்கள் கட்சியில் சேர்த்து, செயல்படுவோம்.

கட்சியில் புதிதாக இணைந்தவர்கள்
கட்சியில் புதிதாக இணைந்தவர்கள்

மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்கியிருக்கிறோம். வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவார்கள். அதற்கான நம்பிக்கையை நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களின் முகங்களைப் பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் பொதுவானவர். அவரது மடியில் வளர்ந்தவன் நான். அவருக்கும் எனக்குமான பழக்கம் குறித்து இப்போது இருப்பவர்களுக்குத் தெரியாது. நான் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் அவரது படத்தைக்கூட பெரிதாகப் போட மனம் இல்லாமல் ஸ்டாம்ப் சைஸ் அளவுக்கு அச்சிடுபவர்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

மக்களுக்கு அத்தியாவசியமாக எதுவெல்லாம் தேவையோ அதையெல்லாம் கிடைக்கச் செய்வோம் என எங்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிப்போம். மக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை விலையின்றி வழங்குவது கடமை. அதை நிறைவேற்ற வாக்குறுதி கொடுப்போம்.

தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவல்ல. எப்போது தேவையோ, அந்தச் சமயத்தில் நாங்கள் கூட்டணி குறித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிப்போம்.

கமல்ஹாசனிடம் கோரிக்கை மனு கொடுத்த முதியவர்
கமல்ஹாசனிடம் கோரிக்கை மனு கொடுத்த முதியவர்

எங்களுக்கு நாங்கள் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லத் தேவையில்லை. ஒரு முறை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிக்கு அந்தச் சின்னதை வழங்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனால், அதை மீறி எங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சட்டரீதியாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு