Published:Updated:

`சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்?

கமல்
கமல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர். சூரப்பாவின் நியமனத்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக சூரப்பா கடிதம் எழுதினார். அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.

தற்போது அவர் மீது ஊழல் புகார் எழுந்திருக்கிறது. பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன. அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இந்த விசாரணைக்குழு மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டுமென்பது தமிழக அரசின் உத்தரவு. நீதிபதி கலையரசன்குழு தனது விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

கமல்
கமல்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்தநிலையில், சூரப்பாமீது விசாரணை நடத்தக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதில், சூரப்பா குறித்து விசாரிப்பதற்கு குழு அமைத்தது நியாயமற்றது என்றும், தனக்குத் தெரியாமல் அரசு குழு அமைந்தது வருத்தமளிக்கிறது என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், `சூரப்பா என்ன இன்னொரு நம்பி நாராயணனா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், `நேர்மையாக இருந்தால் இதுதான் நிலையா... நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன்’ என்று அவர் ஆவேசமாகப் பேசியிருந்தார். அத்துடன், தமிழக அரசுமீது அவர் கடும் விமர்சனங்களை எழுப்பியதுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்ழகன் மீதும் குற்றம்சாட்டினார்.

`வளைந்து கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்து குழையாதவர், தமிழகப் பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்... வளைந்து கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்... எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களையும் விசாரித்துவிட்டீர்களா?

கமல்
கமல்

உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஜூனியர் விகடன் இதழில் குற்றம் சாட்டினாரே... விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் எனச் சமூகச் செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே... அதை விசாரித்துவிட்டீர்களா?

தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன்?இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களைக் கொடுத்து மாணவர்களை வளைக்கப் பார்க்கிறார்களா... சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு, அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களுடன் போராடிக் களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால், சாமானியனின் கதி என்ன... இதை இனிமேலும் தொடரவிடக் கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாகவிடக் கூடாது.

சூரப்பா
சூரப்பா

நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில், அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மௌனம் கலைத்துப் பேசியே ஆக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாற வேண்டும். நேர்மைதான் நமது சொத்து. அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும்” என்று பேசியிருந்தார் கமல்ஹாசன்.

தமக்கு ஆதரவாகப் பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்தார். `என் நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கான ஆதரவு அது. பஞ்சாப் ஐஐடி இயக்குநராக நான் பணியாற்றியபோது, ஐஐடி-யில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் என்னிடம் ஆலோசனை கேட்பார். ஆனால், தமிழகத்தில் அது போன்று எதுவும் நடக்கவில்லை. நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே இருக்கிறது’ என்றார்.

``சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார். கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்கபோகிறோம் என்பதற்காக எதை எதையோ அவர் பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றும் தமிழக உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி கொடுத்தார். மேலும், ``அவரது மடியில் கனமில்லை என்றால், வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. பேராசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை’’ என்றார்.

கமல்
கமல்

சூரப்பாவுக்கு ஆதரவாகக் கமல் களமிறங்கியதையும் ஆக்ரோஷத்துடன் பேசியதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். அதையடுத்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி' டீம்' என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்துகொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?" என்று கூறியிருக்கிறார். மேலும், ``தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். ``சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர்குழுவை அமைத்திருக்கிறது. அதற்கு எதிராகக் கமல் கடுமையாகக் கொந்தளிக்கிறார். கமல் குரலும் ஆளுநர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பிறகு, சூரப்பாவை ஆதரித்துப் பேசுகிற எல்லோருமே நேரடியாக பி.ஜே.பி-யாக இருக்கிறார்கள். அல்லது பி.ஜே.பி-யின் கருத்துகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அறம் என்பதற்கு கமல்ஹாசனின் வரையறை என்னவென்பது தெரியவில்லை. அறம் என்பது வெறுமனே சூரப்பாவிடமிருந்து தொடங்குவது அல்ல. அறம் என்பது ஒருவர் தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கக்கூடிய மதிப்பீடுகள் சார்ந்த விஷயம். ஜெயலலிதா காலத்திலும் ஏராளமான ஊழல்கள் நடந்தன. அப்போது அதற்கு எதிராக கமல் பேசினாரா... கட்சி ஆரம்பித்த பிறகுதான் அறம் வர வேண்டுமா?

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

பீமா கோரேகான் வழக்கு குறித்து கமல் பேசியிருக்கிறாரா? ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வழக்கறிஞர்களும், எழுத்தாளர்களும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்களே... அது குறித்து ஏன் கமல் பேசவில்லை? சூரப்பாவுக்காக இவ்வளவு தூரம் கொந்தளிக்க வேண்டிய அவசியம் என்ன... சூரப்பா மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணைக்கு முன்பாகவே ஏன் இவர் பதறுகிறார்... சூரப்பா என்ன விசாரணைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? `சங்கி‘ என்று தம்மை விமர்சிக்கிறார்கள் என்று கமல் குறிப்பிடுகிறார். எந்தக் கருத்துடன் கமல் இணைகிறார் என்பதைவைத்துத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோதே எதிர்ப்பு எழுந்தது. அப்போது, சூரப்பாவுக்கு ஆதரவாகப் பேசிய அனைவரும் பா.ஜ.க-வினரும் பா.ஜ.க-வின் கருத்துகளுக்கு உடன்படுபவர்கள்தான். இப்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் சூரப்பாவுக்கு ஆதரவாக அவர்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கமலும் அதே குரலில் பேசுகிறார். எனவே, அந்த விமர்சனம் வருகிறது.

கமல்
கமல்

தான் ஒரு பெரியாரியவாதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, பா.ஜ.க உட்பட எந்தக் கட்சியுடனும் சேருவேன் என்று கமல் சொல்கிறார். அதில் என்ன அறம் இருக்கிறது... தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அங்கு போய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும்தானே அறம்... நடுநிலை என்பது அறம் கிடையாது. அது கண்டும் காணாமல் இருப்பது” என்றார் ஆதவன் தீட்சண்யா.

ரஜினி வருகை: `அ.தி.மு.க கூட்டணி உடைய வாய்ப்பு... தி.மு.க கூட்டணியில் பேர வலிமை கூடும்!‘

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸிடம் பேசினோம்.

``மக்கள் நீதி மய்யத்துக்கும், எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கும் எதிராக அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் ஓரணியில் நிற்கின்றன. இருவருமே எங்கள் மீது பாய்கிறார்கள். எங்களை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, அதற்கு எங்கள் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு பகவத்கீதை விவகாரம், மகனுக்கு பதவி கொடுத்த விவகாரம் போன்றவற்றில் நிர்வாகரீதியில் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

இப்போது சூரப்பாவுக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டுக்காக. நேரடியாக ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தால், அதை விசாரிக்க ஆணையம் அமைத்திருந்தால் யாருக்கும், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மொட்டைக்கடிதாசிபோல யாரென்றே தெரியாமல் ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு விசாரணை ஆணையம் அமைப்பது நியாயமா... அதைத்தான் எங்கள் தலைவர் கேட்கிறார். நேர்மையான அதிகாரிகள்மீது இப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், நேர்மையான பல அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த மாதிரியான பிரச்னையில் விட்டுக்கொடுக்க முடியாது என்ற ஆத்திரத்தில் எழுந்த குரல்தான் இது.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

`சங்கி’ என்றும் `பி டீம்’ என்றும் சொல்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்கள் அளவுக்கு பா.ஜ.க-வை விமர்சித்தவர்கள் யாரும் கிடையாது. மோடிக்கு எதிராக கமல் பேசுகிறார் என்பது இந்தியா முழுவதுக்கும் தெரிந்த விஷயம். அதற்கு மோடியே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்கூட எழுந்திருக்கிறது. மேலும், எங்களை அதிகப்படியாக எதிர்ப்பவர்களும் பா.ஜ.க-வினராகத்தான் இருப்பார்கள்.

`சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று தேர்தலுக்கு நான்கு நாள்களுக்கு முன்பு எங்கள் தலைவர் பேசினார். அந்த நேரத்தில் உடனடியாகப் பதற்றப்பட்டது பா.ஜ.க-தான். இப்படிப்பட்ட வார்த்தையை, எங்களைப் பார்த்து `சங்கி’ என்று சொல்பவர்கள் என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் எங்களை முடக்குவதற்கு இது போன்ற அவதூறுகளைச் செய்துவருகின்றன. மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த இருவரும், இனி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் எங்கள்மீது பாய்கிறார்கள். இதை நாங்கள் அரசியல்ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார் முரளி அப்பாஸ்.

அடுத்த கட்டுரைக்கு