Published:Updated:

குமரி :`சில அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்!' - ரஜினியுடன் இணைவது குறித்து கமல்ஹாசன்

செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன்
செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன்

`மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உரிய நேரத்தில் அதை அறிவிப்போம்’ என்றார் கமல்ஹாசன்.

`சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் இரையுமன்துறை, தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மக்களைச் சந்தித்தார். பின்னர் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பகுதியைப் பார்வையிட்டார். அப்போது துறைமுகம் சரியாக அமைக்காததால் மீனவர்கள் உயிரிழப்பு தொடர்ந்து நடந்துவருவதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து காரிலிருந்து இறங்கி, நடந்து சென்று துறைமுகத்தின் முகதுவாரம் பகுதியை பார்வையிட்டார்.

துறைமுகப்பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ``தமிழகத்தில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதற்கு இந்தத் துறைமுகம் ஓர் உதாரணம். தொடர்ந்து உயிர்ப்பலிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டாவதாக ஒதுக்கப்பட்ட நிதியையும் அரைகுறையாகச் செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க முறைகேடுகள்தான் நடக்கின்றன" என்றார்.

இரையுமன்துறையில் கமல்ஹாசன்
இரையுமன்துறையில் கமல்ஹாசன்

பின்னர், இரையுமன்துறை பகுதியில் மக்களைச் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார் கமல்ஹாசன். அவரிடம், `எம்.ஜி.ஆரின் வாரிசு எனக் கூறும் நீங்கள், எம்.ஜி.ஆர் வழியில் தமிழ் ஈழத்துக்குக் குரல் கொடுப்பீர்களா?', `உதயநிதி உதயநிதியைச் சந்தித்து ரகசியக் கூட்டணி பேசியது உண்மையா?' என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன், ``இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் தேவை வந்தால், கண்டிப்பாகக் குரல் கொடுப்பேன். தற்போது அந்தத் தேவை வந்திருக்கிறது.

தி.மு.க-வுடன் கூட்டணி குறித்து உதயநிதியுடன் ரகசியச் சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யுகம்தான். யாரையும் ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்தத் தகவலைக் கண்டிப்பாக மறுக்கிறேன். கேரளா உள்ளாட்சித் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதின் அடையாளம் இது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ரசிகர்கள் சந்தோஷமாக ஏற்கிறார்கள். மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உரிய நேரத்தில் அதை அறிவிப்போம். டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு முதன்முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்" என்றார். ரஜினியின் மக்கள் மன்றத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரை நிர்வாகியாக நியமித்தது பற்றிக் கேட்டதற்கு, ``முதன்முறையாகக் கட்சி தொடங்கும்போது இது போன்ற தடுமாற்றங்கள் ஏற்படும்" என்றார் கமல்ஹாசன்.

அடுத்த கட்டுரைக்கு