Published:Updated:

`முதல்முறை கலாமை சந்தித்த போது...!’ - மாணவர்கள் முன்னிலையில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

மாற்றத்தை நிகழ்த்த அரசியலில் மாணவர்கள் தேவை, நீங்கள் வரவேண்டும் நான் வரவேற்கிறேன், முதல் ஆளாக உங்களை அரசியலுக்கு அழைக்கிறேன்.”

கமல்
கமல்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கமல் கலந்துகொண்டார். `அப்துல் கலாம் கனவுகளை நிறைவேற்றுவதில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். பின்னர், மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ``அப்துல் கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை. ஆனால், அவரை எல்லாருடைய நெஞ்சிலும் கொண்டுசெல்ல வேண்டும் என முயற்சி செய்துவருகிறோம். தலைவர் என்று சொல்வதில் அகந்தை உள்ளது. தோழர் என்று சொல்லும்போது தொடர்ச்சி உள்ளது.

கமல்
கமல்

முதல்முறை கலாமை விமானத்தில் சந்தித்தபோது, அவர் என் அருகே வந்து அமர்ந்து,`இந்தியாவைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க’ என்று கேட்டார்? அந்தக் கேள்வி மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு இந்தியன், இந்தியாவைப் பற்றி எப்படி நினைக்கிறான் என்பது பிரதானமானது. நான் பழைமையை எதிர்க்கவும் மாட்டேன்; புதியவை என்ற ஒரே காரணத்துக்காக அதை ஆதரிக்கவும் மாட்டேன். யார் எதைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தறிவு மூலம் ஆய்வுசெய்யுங்கள். திறன் மேம்பாடுதான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரக இயக்கமாக எடுத்துச் செல்லவேண்டிய ஒன்று. ஒற்றைக் கல்விமுறை, ஒற்றை கலாசாரமாக இல்லாமல், பன்முகத் தன்மையோடு கற்க வேண்டும்.

கல்வியை வெறுமனே கற்காமல் புரிதலோடு இருக்க வேண்டும். 60 ஆண்டுகள் சினிமா துறையில் நிறைவுபெற்றதையொட்டி எனக்கு விழா எடுப்பதாகக் கூறுகிறார்கள். அந்த விழா நான் சாதித்து முடித்ததற்கு அல்ல, என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் அடுத்து ஒரு புதிய புரட்சிக்கு அடித்தளமாக இருக்கும்.

மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை. எத்தனை நாள் மாணவர்களாக இருப்பீர்கள்? மாற்றத்தை நிகழ்த்த அரசியலில் மாணவர்கள் தேவை, நீங்கள் வரவேண்டும்; நான் வரவேற்கிறேன், முதல் ஆளாக உங்களை அரசியலுக்கு அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து மாணவர் மாணவியர் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அப்போது மாணவர் ஒருவர், `முதல்வரானதும் உங்கள் முதல் கையெழுத்து எது?’

`முதல்வரான உடன் முதல் கையெழுத்து என்பது குறுகிய கால விஷயம். ஆனால், நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன். அதுதான் நேர்மை. நான் நேர்மையாக இருப்பேன். `யார் முதல்வராக வந்தாலும் இருக்கணும்’. விவசாயம் சரியில்லை என்ற வெறும் கோபத்துடன் இளைஞர்கள் களத்திற்கு வராமல், முறையான பயிற்சிபெற்று விவசாயத்தைக் காக்க வரவேண்டும். விவசாயத்திற்கு ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக வாருங்கள்.

`அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஆனால், அரசியல் அசுத்தமாக உள்ளதே?

`ஸ்வச் பாரத்' என்று சொல்லும்போது குப்பையும் சாக்கடையும் உள்ள இடத்திற்குதானே பிரதமர் அழைக்கிறார். குப்பையும் சாக்கடையும் இருக்கும் இடத்தில்தான் சுத்தம் செய்ய முடியும். அதுபோலதான் அரசியலும், குப்பையும் சாக்கடையுமாக இருக்கும். அரசியலில் வந்து சுத்தம் செய்யுங்கள்” என்று கூறினார்.