Published:Updated:

`மீண்டும் திறக்கப்படும் 1984 கலவர வழக்குகள்!' - மத்தியப் பிரதேச முதல்வருக்கு நெருக்கடி

ர.முகமது இல்யாஸ்

1984-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதுபற்றிய வழக்குகளை உள்துறை அமைச்சகம் மீண்டும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Kamal Nath
Kamal Nath

1984-ம் ஆண்டு டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கை மூலம், அமிர்தசரஸ் பொற்கோயில் தாக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திரா காந்தி கொல்லப்பட்டார். அவரது படுகொலை, சீக்கியர்கள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

தற்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், 1984-ம் ஆண்டில் வன்முறை நடந்தபோது, வன்முறையில் பங்கேற்றதாகத் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. கமல்நாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றபோது, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான சஜ்ஜன் குமார் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனையைப் பெற்றார்.

இந்தநிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `ஏற்கெனவே மூடப்பட்ட சீக்கியர் கலவர வழக்குகளில், 7 வழக்குகள் மீண்டும் திறக்கப்படும்' எனவும், `அவற்றில் புதிய சாட்சியங்கள் சேகரிக்கப்படும்' எனவும், `இந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும்' எனவும் கூறப்பட்டுள்ளது.

Kamal Nath
Kamal Nath

சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை நடந்தபோது, கமல்நாத் தனது வீட்டில் 5 கலவரக்காரர்களுக்கு இடம் அளித்தார் என்று ஒரு வழக்கும் டெல்லி அருகில் சீக்கிய குருத்வாரா ஒன்றில் கலவரத்தை முன்னின்று நடத்தியதாக மற்றொரு வழக்கும் விசாரிக்கப்படவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்- டெல்லி எம்.எல்.ஏ-வும், ஷிரோமனி அகாலிதள கட்சியின் உறுப்பினருமான மஞ்சிந்தர் சிங் சிர்ஸா. இவர் அளித்த புகார்மீதுதான் தற்போதைய வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

Vikatan
சாட்சிகள் இருவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் வாக்குமூலம் அளிக்கத் தயாராக உள்ளனர். ஒருவர் லண்டனிலும் மற்றொருவர் பாட்னாவிலும் வசித்து வருகின்றனர்.
மஞ்சிந்தர் சிங் சிர்ஸா
Manjinder Singh Sirsa
Manjinder Singh Sirsa

மேலும் சிர்ஸா, மத்தியப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் நீக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷிரோமனி அகாலி தள கட்சி, ' கமல்நாத் மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என அறிக்கை விடுத்துள்ளது.

சிறப்புப் புலனாய்வு அமைப்பு இந்த 7 வழக்குகள் தொடர்பாக அறிந்தவர்கள், சாட்சி கூற விரும்புபவர்கள், அமைப்புகள் ஆகியோரைத் தங்களிடம் தொடர்புகொள்ளுமாறு அறிவித்துள்ளது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1984 சீக்கியர் படுகொலைகளை விசாரித்த நானாவதி கமிஷன், 'கமல்நாத்துக்கு இந்தப் படுகொலைகளில் தொடர்பு இல்லை' எனக் கூறியுள்ளது. 'தன் மேல் வழக்குகளோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு தனது அரசியல் எதிரிகளால் புனையப்படுகிறது' எனவும் இதற்கு முன்பு பலமுறை கமல்நாத் பதிலளித்து வந்துள்ளார்.

கடந்த மாதம் சி.பி.ஐ நீதிமன்றம், வங்கி முறைகேடு வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரிக்குச் சிறைத்தண்டனை வழங்கியது. மூன்று மாதங்களுக்கு முன்பு, டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்த கமல்நாத்தின் 52 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சூழலில், கமல்நாத்துக்கு எதிரான 35 ஆண்டுக்கால பழைமையான வழக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.