Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கம்பத்தில் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகரச் செயலாளர்கள்! 

கம்பம் நகராட்சி

இரு நகரச் செயலாளர்களின் போட்டியால் கம்பத்தில் பாரம்பர்யமாக தி.மு.க-விலுள்ள மூத்த அரசியல்வாதிகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கம்பத்தில் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகரச் செயலாளர்கள்! 

இரு நகரச் செயலாளர்களின் போட்டியால் கம்பத்தில் பாரம்பர்யமாக தி.மு.க-விலுள்ள மூத்த அரசியல்வாதிகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
கம்பம் நகராட்சி

தனி மாவட்டமான தேனியில் அல்லிநகரம், பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், சின்னமனூர் என மொத்தம் ஆறு நகராட்சிகள் உள்ளன. நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஆறு நகராட்சிகளில் மொத்தம் 177 கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்யவும் தொடங்கிவிட்டது. ஆனால் தி.மு.க வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காத நிலையில், தேனி மாவட்டத்தில் 33 வார்டுகளைக்கொண்ட கம்பம் நகராட்சியில் தி.மு.க நகரச் செயலாளர்கள் சீட் கேட்டு மல்லுக்கட்டிவருகின்றனர். இந்த இருமுனைப் போட்டியைப் பயன்படுத்தி, தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் வீரபாண்டி சேர்மன் பதவியைப் பிடித்துவிடலாம் எனத் தன் மனைவியைக் களத்தில் இறக்கியிருக்கிறார்.

தேனி மாவட்டத்தில், கம்பம் நகராட்சியில் மட்டும்தான் இரண்டு நகரச் செயலாளர்கள் இருக்கின்றனர். வடக்கு நகரச் செயலாளராக துரை நெப்போலியனும், தெற்கு நகரச் செயலாளராக செல்வகுமாரும் இருக்கின்றனர். துரை நெப்போலியன் ம.தி.மு-க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். செல்வகுமார் காங்கிரஸிலிருந்து தி.மு.க-வுக்கு வந்த புதுவரவு.

தேனி மாவட்டத்திலுள்ள ஆறு நகராட்சி சேர்மன்கள் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கம்பம் நகராட்சியில் துரை நெப்போலியனும், செல்வகுமாரும் தங்களின் மனைவிகளைப் போட்டியிடவைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்துவருகின்றனர்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

தி.மு.க வேட்பாளர்களைத் தேர்வுசெய்யவேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்குத் தலைமை, அதிகாரம் வழங்கியிருக்கிறது. ஆனால், தேனி மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தனது பங்குக்கு சில வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரைத்துவிட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை நகரச் செயலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கம்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 19 வார்டுகள் துரை நெப்போலியன் கன்ட்ரோலிலும், மீதமுள்ள 14 வார்டுகள் செல்வகுமார் கன்ட்ரோலிலும் இருக்கின்றன. இதனால் தங்களின் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் ஒதுக்க வடக்கு, தெற்கு நகரச் செயலாளர்கள் போட்டி போட்டுவருகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு சேர்மன் பதவிக்கு மறைமுக வாக்கெடுப்பின்போது தங்களுடைய ஆதரவாளர்களாக இருந்தால் மட்டுமே எளிதல் பதவியை அடைய முடியும் என்பது இருவரது கணக்காகவும் உள்ளது.

ஆனால், துரை நெப்போலியனின் ஆதரவாளர்கள் செல்வகுமார் கன்ட்ரோலில் இருக்கும் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. தகுந்த வேட்பாளர்களை நிறுத்தாவிட்டாலும், தங்களுக்குப் போட்டியானவர்களை நிறுத்த இரு நகரச் செயலாளர்களும் தயாராக இல்லை.

இவ்வாறு இரு நகரச் செயலாளர்களுக்கும் போட்டி நிலவிவரும் நிலையில், தேனி வடக்கு மாவட்டச் செயாளர் தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் வீரபாண்டி தன் மனைவியை களமிறக்கத் தயாராகிவருகிறார். இரு நகரச் செயலாளர்களும் போட்டி போடும் நிலையில், தலைமை மூலம் தன் மனைவிக்கு சேர்மன் பதவியை தெற்கு மாவட்டம் பெற்று தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் செயல்பட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துரை நெப்போலியன்
துரை நெப்போலியன்

துரை நெப்போலியன் தன் மனைவியை பொது வார்டான 3-ல் நிறுத்த வேலை செய்துவருகிறார். ஆனால், அந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் நகரச் செயலாளருமான சிங்.செல்லப்பாண்டி, `என்னுடைய வார்டை விட்டுத்தர மாட்டேன். துரை நெப்போலியன் மனைவியை பெண் வார்டில் நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையென்றால், நான் சுயேசையாக நின்று எனது வார்டில் ஜெயித்துக்கொள்கிறேன்' எனக் கூறிவருகிறார்.

இரு நகரச் செயலாளர்களின் போட்டியால் கம்பத்தில் பாரம்பர்யமாக தி.மு.க-வில் உள்ள மூத்த அரசியல்வாதிகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ``வேட்பாளர் தேர்வின்போதுகூட எவ்வளவு காலம் தி.மு.க-வில் உள்ளீர்கள், கட்சிகாக என்ன செய்துள்ளீர்கள் என யாரும் கேட்கவில்லை... ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பீர்களா, மொத்தம் 5 லட்சம் ரூபாய் செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் மட்டும் நேர்காணலில் கலந்துகொள்ளுங்கள்" என்றுதான் சொல்கிறார்கள் என்கின்றனர் மாவட்டத்து முக்கியப் புள்ளிகள்.

செல்வகுமார்
செல்வகுமார்

அதேவேளையில், கம்பம் நகராட்சியில் சுமார் எட்டு வார்டுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். இந்த வார்டுகளில் இஸ்லாமியர்கள் யாரும் போட்டி போட முடியாத நிலையை நகரச் செயலாளர்கள் ஏற்படுத்திவிட்டனர் என உடன்பிறப்புகள் புலம்பிவருகின்றனர். தி.மு.க முன்னாள் கம்பம் நகர துணைச் செயலாளராகவும், மூன்று முறை கவுன்சிலராகவும் இருந்த பாக்தாத் அரசி உள்ளிட்டோர்கூட போட்டியிட முடியாது என்ற நிலை உருவாகியிருப்பதால் இஸ்லாமிய மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருந்ததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி இல்லாததாலும், உட்கட்சி விவகார அதிருப்தியின் காரணமாகவும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் கம்பம் பகுதி இஸ்லாமியர்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

கம்பம் நகராட்சியில் தி.மு.க-வினர் சேர்மன் பதவிக்கு மல்லுக்கட்டும் நிலையில், அ.தி.மு.க-வினர் எந்தவிச்த சலனமும் இன்றி தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர். அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் அறியப்படாத வார்டில் பிரபலம் இல்லாதவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இது எங்களுக்கு எளிதான வெற்றியைக் கொடுக்கும் என கம்பம் நகர தி.மு.க-வினர் பேசிவருகின்றனர்.

என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism