Published:Updated:

மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் ராஜினாமா - காரணம் என்ன?

கமீலா நாசர்
கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியது முதல் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றியவர்களில் கமீலா நாசரும் ஒருவர். திடீரென கட்சிப் பதவியை க் கமீலா நாசர் ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளராக இருந்த கமீலா நாசர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியது முதல் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களுள் கமீலா நாசரும் ஒருவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்ட கமீலா நாசர் கிட்டத்தட்ட 11 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கடந்த வாரமே தனது பதவியை ராஜினாமா செய்வதாக கமீலா நாசர் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

கமீலா நாசர் ராஜினாமா
கமீலா நாசர் ராஜினாமா
மநீம

இந்த நிலையில் ``கமீலா நாசரின் ராஜினாமா கடிதத்தை பரிசீலனை செய்து அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்" என மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளார் சந்தோஷ் பாபு நேற்று (20.04.2021) அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கமல்ஹாசன் கைகொடுத்த தமிழக  கிரிக்கெட் அணி... துபாயில் சாம்பியன் கோப்பை வென்று சாதனை!

மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துகொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள கமீலா நாசரை தொடர்புகொண்டோம். ``என்னுடைய மகனைக் கவனித்துகொள்ள வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன். குடும்பம், அரசியல் என ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனால் தான் ராஜினாமா செய்தேன். கட்சியில் இருந்து என்னை விலக்கி விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன. அது தவறான தகவல். என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரின் கட்சி தலைமையின் அனுமதியுடன் தான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்தேன்.

அதுமட்டுமல்ல தேர்தல் பிரச்னை காரணமாக நான் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் பரவுகின்றன. என்னுடைய ராஜினாமா கடிதத்தை தேர்தலுக்கு முன்பே தலைவர் கமலிடம் கொடுத்துவிட்டேன். அவர் தான் `கொஞ்சம் பொறுமையாக இருங்கள். யோசித்து முடிவு செய்யலாம்’ எனக் கூறியிருந்தார். தற்போதும் நான் என்னுடைய ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்ததால் கட்சித் தலைமை என்னை பொறுப்புகளில் இருந்து விடுவித்துள்ளது. தற்போதும் தலைவருடன் எனக்கு நல்ல உறவே இருக்கிறது. அது இனியும் தொடரும்.

கமல் - கமீலா நாசர்
கமல் - கமீலா நாசர்

குடும்பச் சிக்கல்கள் சரியானதும், இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். கட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் எப்போதும் என்னுடைய மக்கள் பணி தொடரும்” என விளக்கம் அளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு