Published:Updated:

ஒன் பை டூ: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சரியா?

எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் நலிவடைந்து, நஷ்டமடைந்து இருக்கின்றனவோ, அவையெல்லாம் நேரடியாக மக்களை பாதிக்கின்றன

பிரீமியம் ஸ்டோரி

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்போவதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 38 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கும் எல்.ஐ.சி., மத்திய அரசுக்கு 56 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது. அதை ஏன் விற்கிறார்கள்? பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 10,000 கோடி ரூபாய் நிகர லாபத்தில் செயல்படுகிறது... அதை ஏன் தனியாருக்குக் கொடுக்கிறார்கள்? ‘நஷ்டத்தில் இயங்குகின்றன’ என்று மட்டும் காரணம் சொல்லும் மத்திய அரசு, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களைத் தனியாருக்குக் கொடுக்கும்போது எழும் கேள்விகளுக்கு விடை சொல்வதில்லை. தனியார் நிறுவனங்கள் எல்லாமே லாபத்தில்தான் இயங்குகின்றனவா? 11,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் மூழ்கிய குளோபல் டிரஸ்ட் வங்கி, ஜெனரல் மோட்டார்ஸ், நோக்கியா, ஃபோர்டு, ஸ்பைஸ் ஜெட், கிங்ஃபிஷர் போன்ற நிறுவனங்களின் நிலையை மறந்துவிட்டார்களா? கடன் வாங்கியுள்ள தனியார் நிறுவனங்கள் நஷ்டமடைந்ததால் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தனர். ஆனால், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? மோடியின் இந்தக் கருத்துக்குப் பின்னால் நாட்டுநலனெல்லாம் கிடையாது. தனியாருக்குத் தாரை வார்த்து, அதன் மூலம் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாத தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பணத்தைப் பெறுவதுதான் பா.ஜ.க அரசின் திட்டம்.”

ஒன் பை டூ: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சரியா?
ஒன் பை டூ: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது சரியா?

கரு.நாகராஜன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் நலிவடைந்து, நஷ்டமடைந்து இருக்கின்றனவோ, அவையெல்லாம் நேரடியாக மக்களை பாதிக்கின்றன. மக்களுடைய நிதிதான் நஷ்டமடைகிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிறுவனங்களால் எந்தப் பலனும் இல்லை. இத்தகைய நிறுவனங்களால் லாபத்தையும் கொடுக்க முடியவில்லை; புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்க முடியவில்லை. லாபத்தைக் கெடுக்காவிட்டாலும், நஷ்டத்தையாவது உண்டாக்கக் கூடாது அல்லவா... அதனால்தான், இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் கொடுக்கலாம் என்று பிரதமர் மோடி ஆக்கபூர்வமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவரது கருத்துகளும் செயல்திட்டங்களும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். எதிர்க்கட்சிகள் சொல்வது போன்று எல்.ஐ.சி-யை தனியாருக்கு விற்கவில்லை... அதன் 5-10 சதவிகித பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அவற்றை வாங்கும் நிலையை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும். எதையெடுத்தாலும் தரவுகளோ ஆதாரங்களோ இல்லாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் இதையும் அரசியல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கின்றன. புதிய இந்தியாவின், புதிய லட்சியத்தை நோக்கிய பயணம் இது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு