`மும்பையில் வழக்கு விசாரணை... என் உயிருக்கே ஆபத்து!’ - உச்ச நீதிமன்றத்தை நாடிய கங்கனா

மும்பை நீதிமன்த்திலுள்ள மூன்று வழக்குகளையும் சிம்லாவுக்கு மாற்ற உத்தரவிடக் கோரி நடிகை கங்கனா ரணாவத் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
நடிகை கங்கனா மீது மும்பை நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு வழக்கில் கடந்த 1-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து கங்கனா ரிபப்ளிக் டி.வி-யில் அளித்த பேட்டி ஒன்றில் அக்தரைக் களங்கப்படுத்தும் வகையில் சில தகவல்களைத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விளம்பரத்துக்காகத் தனது பெயரைத் தேவையில்லாமல் இழுத்து களங்கப்படுத்தியாகக் கூறி, கங்கனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அக்தர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கோர்ட் இந்த பிடிவாரன்ட்டை பிறப்பித்திருக்கிறது.

இது தவிர கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது தேசதுரோக வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. இரு சமுதாயங்களுக்கு இடையே பகையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் காஜிப் அலி கான் தேஷ்முக் இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ``ரங்கோலி ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவில் குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும், இரு சமுதாயத்தினருக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பதிவிட்டார். இதையடுத்து ரங்கோலியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவருக்கு சாதகமாக நடிகை கங்கனா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதுவும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருந்தது.
இதில் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக இருவரும் சமூக வலைதளத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருவருக்கும் எதிராக மும்பை அம்போலி போலீஸிலும் தேஷ்முக் புகார் செய்திருக்கிறார். இதே போன்று பாலிவுட் பிரமுகர் முன்னாவார் அலி சையத்தும் கங்கனா சகோதரிகள், பாலிவுட் குறித்து மிகவும் மோசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்கள் பதிவிட்ட மிகவும் ஆட்சேபகரமான கருத்துகள் எனது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கின்றன என்று கூறி கங்கனா சகோதரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

சிம்லா நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்!
இந்த முன்று வழக்குகளையும் சிம்லா கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி கங்கனா தனது வழக்கறிஞர் நீரஜ் சேகர் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில் ``இந்த வழக்கு விசாரணை மும்பையில் நடைபெற்றால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனக்கும் சிவசேனா தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பகை இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இதற்கிடையே கங்கனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. `விவசாய மசோதாவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக தன்மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக’ கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். `விவசாய மசோதாக்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியவர்கள்தான் கலவரத்துக்குக் காரணமானவர்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.