Published:Updated:

`புதிய ரயில் சேவைகள் வேண்டும்’ - டெல்லியில் ரயில்வே அதிகாரியிடம் கனிமொழி வலியுறுத்தல்

கனிமொழி
கனிமொழி

ரயில்வே தலைமைச் செயல் அதிகாரியிடம் புதிய ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்களின் தேவை குறித்து கனிமொழி எம்.பி மனு அளித்துள்ளார். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் சில ரயில்களை நீட்டிப்பு செய்யவும் வலியுறுத்தியிருக்கிறார்.

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தென் மாவட்டங்களுக்கு ரயில்வேதுறையில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை, தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அது குறித்த அறிவிப்புகள் இல்லாததால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

ரயில்வே தலைமைச் செயல் அதிகாரியிடம் மனு அளித்த கனிமொழி
ரயில்வே தலைமைச் செயல் அதிகாரியிடம் மனு அளித்த கனிமொழி

இந்தநிலையில், டெல்லியிலுள்ள ரயில்வேதுறையின் தலைமைச் செயல் அதிகாரியான சுனீத் சர்மாவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி இன்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருக்கிறார்.

கனிமொழி அளித்திருக்கும் மனுவில், ``நெல்லையிலிருந்து செங்கோட்டை, புனலூர் வழியாக கேரளாவின் பாலக்காடு வரை இயக்கப்பட்டுவரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மும்பை-மதுரை இடையே இயக்கப்படும் (வண்டி எண்: 11043/11044) லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

எக்ஸ்பிரஸ் ரயில்
எக்ஸ்பிரஸ் ரயில்

தற்போது தூத்துக்குடியிலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது. இந்த ஒரு ரயிலைவிட்டால் வேறு நேரடி ரயில் சேவை இல்லை. அதனால் தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை தலைநகர் சென்னை வரை இயக்கினால் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த மனுவில், ``தற்போது சென்னை முதல் திருச்செந்தூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆழ்வார் திருநகரியில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (16352/16351) தற்போது ரேணிகுண்டா வழியாக வருகிறது. அதை திருப்பதி வழியில் அனுமதித்தால் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையிலிருந்து இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஆழ்வார்திருநகரியில் நின்று செல்ல வேண்டும்.
கனிமொழி எம்.பி

காயல்பட்டினம் ரயில்வே பிளாட்பாரத்தின் உயரத்தை அதிகப்படுத்தி 21 கோச்கள் கொண்ட ரயில்கள் நின்று செல்ல வசதியாக கட்டுமானம் செய்து கொடுத்தால், பயணிகள் ரயிலில் சிரமின்றி ஏறவும் இறங்கவும் வசதியாக அமையும்.

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் இயக்கப்பட்டுவரும் சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்வே தண்டவாளம்
ரயில்வே தண்டவாளம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி மில் கேட், தட்சணாமூர்த்தி தெரு ரயில்வே தண்டவாளம், ராமசாமி தாஸ் பூங்காவின் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடக்க வசதியாக தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆழ்வார்திருநகரியிலும் மேம்பாலம் அல்லது தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடியிலிருந்து இணைப்பு ரயில் இயக்கப்பட வேண்டும்” என ரயில்வேதுறையின் தலைமைச் செயல் அதிகாரியிடம் கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு